5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Padaikatti Maha Mariamman: பாடை கட்டி ஊர்வலம்.. தீரா நோய்களை தீர்க்கும் மகாமாரியம்மன்!

பிரச்னையை தீர்க்க எத்தனை வழிகள் இருந்தாலும் அதனை எல்லாம் முயற்சித்து கடைசியில் கடவுளிடம் தான் சரணடைவோம். இது எல்லா மதத்தினருக்கும் இருக்கும் இயல்பான பண்பாகும். காரணம் எல்லா நம்பிக்கையை விடவும்  கடவுள் நம்பிக்கை இன்னும் நம்மை எத்தகைய இன்னல்கள் வந்தாலும் போராட வைக்கும். இப்படிப்பட்ட நிலையில் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் தங்கள் உடல்நலப் பாதிப்புகள் குணமாக தமிழ்நாட்டில் ஒரு கோயிலில் பாடை கட்டி பிரார்த்தனையை நிறைவேற்றும் வழக்கம் உள்ளது.

Padaikatti Maha Mariamman: பாடை கட்டி ஊர்வலம்.. தீரா நோய்களை தீர்க்கும் மகாமாரியம்மன்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 18 Oct 2024 12:30 PM

பாடைக்கட்டி மாரியம்மன் கோயில்: வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான பிரச்னைகள் இருக்கும். அந்த பிரச்னையை தீர்க்க எத்தனை வழிகள் இருந்தாலும் அதனை எல்லாம் முயற்சித்து கடைசியில் கடவுளிடம் தான் சரணடைவோம். இது எல்லா மதத்தினருக்கும் இருக்கும் இயல்பான பண்பாகும். காரணம் எல்லா நம்பிக்கையை விடவும்  கடவுள் நம்பிக்கை இன்னும் நம்மை எத்தகைய இன்னல்கள் வந்தாலும் போராட வைக்கும். இப்படிப்பட்ட நிலையில் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் தங்கள் உடல்நலப் பாதிப்புகள் குணமாக தமிழ்நாட்டில் ஒரு கோயிலில் பாடை கட்டி பிரார்த்தனையை நிறைவேற்றும் வழக்கம் இன்றளவும் உள்ளது. அந்தக் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த கோவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வலங்கைமான் என்ற இடத்தில் தான் உள்ளது. இங்குள்ள மகாமாரியம்மன் பாடை கட்டி மாரியம்மன் என அனைவராலும் அழைக்கப்படுகிறாள். இக்கோயிலுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து பொதுமக்கள் வருகை தந்து சாமி வழிபாடு செய்கின்றனர்.

தல வரலாறு

இந்தக் கோயில் உருவானதாக சொல்லப்படும் வரலாறு சுவாரஸ்யமானதாக உள்ளது. அதாவது 200 ஆண்டுகளுக்கு முன்னர் வலங்கைமான் ஊரில் உள்ள வரதராஜன் பேட்டை தெருவில் காதக்கவுண்டர் என்பவர் தனது மனைவி கோவிந்தம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இருவரும் இறை பக்தி மிக்கவர்கள். இவர்களில் காதக்கவுண்டர் விவசாயியாகவும் கோவிந்தம்மாள் தின்பண்டங்கள் விற்கும் வியாபாரமும் செய்து வந்துள்ளார். அப்படியாக வியாபாரத்திற்காக புங்கஞ்சேரிக்கு சென்ற கோவிந்தம்மாளுக்கு அன்றைய தினம் நல்லபடியாக வியாபாரம் நடந்து நிறைய பணமும் நெல்லும் கிடைத்துள்ளது.

Also Read:  Sabarimala: சபரிமலை மண்டல மகர விளக்கு பூஜை.. ஆன்லைன் முன்பதிவு செய்வது எப்படி?

எல்லாம் இறைவனின் கருணை என எண்ணி மகிழ்ச்சியாக அங்குள்ள குளத்தில் அவர் குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு பிராமணரும் அவரது மனைவியும் குழந்தையுடன் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் அருகே செல்வதை பார்த்து உள்ளார். குளித்துவிட்டு கரையேறிய பின் கோவிந்தம்மாளுக்கு அய்யனார் கோயில் அருகே இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அவரும், சுற்றியிருந்த பொதுமக்களும் ஓடிச்சென்று பார்த்தபோது குழந்தையை தவிர அந்த இடத்தில் வேறு யாரும் தென்படாமல் இருந்தனர். அழுது கொண்டிருந்த குழந்தையை கோவிந்தம்மாள் தூக்கியதும் அது சிரிக்க தொடங்கியுள்ளது.

இப்படியான நிலையில் அக்குழந்தையை வளர்க்க பொதுமக்கள் பலரும் போட்டி போட்ட நிலையில் அந்த ஊர் நாட்டாமை வளர்ப்பார் என முடிவு எடுக்கப்பட்டது ஆனால் தனக்கு குழந்தை கிடைக்கவில்லை என்ற வருத்தம் கோவிந்தம்மாளுக்கு இருந்துள்ளது. இதற்கிடையில் புங்கஞ்சேரியில் திடீரென ஆடு மாடுகள் நோய்வாய்ப்பட்டு இறந்து போனது. மேலும் ஊரில் பலருக்கும் அம்மை நோய் தாக்கியுள்ளது. இதில் அய்யனார் கோயில் அருகே கிடைக்கப்பெற்ற பெண் குழந்தையும் தப்பவில்லை.

ஊரே பெரும் துயரில் இருந்த நிலையில் அந்த குழந்தையை கோவிந்தம்மாளிடம் கொடுத்து விட்டால் இந்த ஊர் நலம் பெறும் என ஒருவர் தெரிவித்துள்ளார். உடனே கோவிந்தம்மாளை அழைத்து குழந்தை கொடுக்கப்பட்டது. இதனால் பெரும் மகிழ்ச்சிக்கொண்ட அவர் குழந்தைக்கு சீதளா என பெயர் சூட்டினார். ஆனால் ஆனால் அம்மை நோயால் வாங்கிய மூன்றாம் நாள் அக்குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் முடித்துவிட்டு தனது வீட்டுக் கொல்லையில் கோவிந்தம்மாளும் காதக்கவுண்டரும் அடக்கம் செய்தனர்.

Also Read: தீபாவளி நாளில் விளக்கேற்றும் முறை.. தீபாராதனை இப்படி பண்ணுங்க!

சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயம்

இதற்கிடையில் குடமுருட்டி ஆற்றில் நீராடி விட்டு வந்தவர்களில் சிலர் கோவிந்தம்மாள் விட்டுக் கொல்லைபுரம் வந்து ஆவேசமாக ஆடியுள்ளனர். மேலும் சொல்லப்பட்ட அருள்வாக்கில், “நான்தான் மாரியம்மன் குழந்தை வடிவில் இங்கு வந்தேன். என்னை வழிபடும் மக்களுக்கு அருள் புரிவேன்” என்றும் கூறியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குழந்தையை சமாதி செய்த இடத்தில் கீற்று கொட்டகை போடப்பட்டு மக்கள் வழிபட தொடங்கினர். சீதளாதேவி மகா மாரியம்மன் கோயிலாக அருள்பாலிக்க தொடங்கிய அம்மன் இன்று வலங்கைமான் மாரியம்மனாக அழைக்கப்படுகிறாள்.

இந்த கோயிலில் காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1 வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். அதே சமயம் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் நடை சாத்தப்படுவதில்லை. இரவு 11 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம்.

இந்தக் கோயிலில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து பிரார்த்தனை நிறைவேற்றுகின்றனர். பங்குனி மாதம் நடைபெறும் உற்சவத்தின் போது உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை  பாடை மீது படுக்க வைத்து கயிறால் இறந்தவர்கள் உடல் கட்டப்படுவது போல கட்டப்படும். பின்னர் அவரை உறவினர்கள் சுமந்துவர கொள்ளி சட்டி எடுக்க வேண்டிய முறை உள்ளவர் அதனை எடுத்துக் கொண்டு முன்னால் செல்ல வேண்டும். பாடைக்காவரி ஆலயத்தை வலம் வந்ததும் பாடை பிரிக்கப்பட்டு அர்ச்சகர் மஞ்சள் நீர் தெளிப்பார். அப்போது பாடையில் படுத்திருக்கும் நபர் மயக்கம் தெளிந்து எழுவதோடு வேண்டுதல் நிறைவேற்றப்படும்.

Latest News