5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Salai Kumaraswamy Temple: வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் விலக உதவும் முருகன் கோயில்!

Tirunelveli: இந்த கோயிலில் திருமணம் செய்து கொண்டால் சகல பேறுகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கையாகும். அதனால் முகூர்த்த தினங்களில் 30க்கும் மேற்பட்ட திருமணங்கள் கூட நடைபெறுகிறது. சித்திரை மாதப்பிறப்பு, ஐப்பசி மாத பிறப்பன்று  காலையில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அதேபோல் ஆனி உத்திரம் அன்று வருசாபிஷேகமும், வைகாசி விசாகம் அன்று சுவாமி வீதி உலாவும், விஜயதசமி அன்று சுவாமி  பாரிவேட்டையும் நடைபெறும்.

Salai Kumaraswamy Temple: வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் விலக உதவும் முருகன் கோயில்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 29 Oct 2024 14:34 PM

முருகன் கோயில்: சாலைக்குமரன் என்ற பெயரில் அருள் பாலிக்கும் முருகப்பெருமான் திருநெல்வேலி மக்களால் சாலைக்குமார சுவாமி என அன்போடு அழைக்கப்படுகிறார். இக்கோயில் திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் இரட்டை மேம்பாலத்திற்கு அடிப்பகுதியில் அமைந்துள்ளது. சாலை மீது வீற்றிருப்பதால் இவர் சாலைக்குமரன் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் தரிசனம் நேரமாக உள்ளது. பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளதால் வெளியூரில் இருந்தும் மக்கள் வருகை தருகிறார்கள். முருகப்பெருமான் விரும்பி கோயில் கொண்டு அருள்பாலித்த தலம் என்பது இதன் சிறப்பாகும். இந்த கோயில் உருவான வரலாறு மிகவும் சுவாரஸ்யமானதாகும்.

கோயில் உருவான வரலாறு

திருச்செந்தூரில் உள்ள ஆறுமுகப்பெருமானின் கற்சிலையை அந்த காலத்தில் படையெடுத்து வந்த டச்சுக்காரர்கள் சிதைத்து சென்றுவிட்டனர். இதனால் மிகவும் மனம் வருந்திய வடமலையப்ப பிள்ளை என்பவர் கருவேலங்குளம் என்ற ஊரைச் சேர்ந்த ஸ்தபதிகளை அழைத்துள்ளார். திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள குறுக்குத்துறை என்ற பகுதியில் வைத்து ஆறுமுகப்பெருமானுக்கு புதிய சிலை செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

தாமிரபரணி ஆற்றின் கரையில் தங்கிய ஸ்தபதிகள் முருகனின் சிலையை செய்ய தொடங்கினர். அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் சிலையை திருச்செந்தூர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். சிலை ஏற்றப்பட்ட மாட்டு வண்டி புறப்பட்டு மெதுவாக சென்றது. இப்போது சாலைக்குமாரசுவாமி கோயில் இருக்கும் இடத்தை அடைந்ததும் இரவு நேரம் ஆகிவிட்டதால் அங்கிருந்த ஆலமரத்தடியில் அனைவரும் கூடாரம் அமைத்து தங்கினார்கள். அன்று இரவு கனமழை பெய்துள்ளது. மறுநாள் காலையில் மாட்டு வண்டியுடன் திருச்செந்தூருக்கு ஸ்தபதிகள் புறப்பட்ட நிலையில் வண்டி சகதியில் சிக்கிக் கொண்டு அன்று முழுவதும் நகராமல் இருந்துள்ளது.

கனவில் வந்த முருகன்

இந்த நிலையில் இரண்டாம் நாள் இரவு ஸ்பதிகள் குழுவின் தலைமை சிற்பியின் கனவில் முருகப்பெருமான் தோன்றியுள்ளார். அப்போது தாமிரபரணி கரையோரம் உள்ள இந்த பகுதியில் நான் மக்களுக்கு அருள்பாலிக்க உள்ளேன்.எனக்கு கோயில் எழுப்ப வேண்டும் என தெரிவித்தார். ஆனால் தலைமை சிற்பி, “முருகப்பெருமானே! இந்த சிலையை திருச்செந்தூருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது எனக்கு அளிக்கப்பட்ட உத்தரவு. இதனைக் கொண்டு செல்ல நீ தான் அருள் புரிய வேண்டும்” என வேண்டிக் கொண்டார். 3 ஆம் நாளின்  முயற்சியில் மாட்டுவண்டி மீண்டும் புறப்பட்டது.

தாமிரபரணி ஆற்றுப்பகுதியை கடந்து சிறிது தூரம் சென்றதும் வடமலையப்ப பிள்ளையிடம் இருந்து தகவல் வந்தது. அதன்படி இந்த சிலையை திருச்செந்தூருக்கு நீங்கள் கொண்டு வர வேண்டாம். அங்கேயே எங்கேயாவது வைத்து விடுங்கள் என தெரிவித்துள்ளார். இதனால் சில நாட்கள் முருகன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கினார்.  அந்த இடம் தான் திருநெல்வேலியில் முருகன் குறிச்சி என அழைக்கப்படுகிறது.

Also Read: Small Savings : சிறுசேமிப்பு திட்டங்களில் சிறந்தது எது.. எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.. முழு விவரம் இதோ!

கோயில் கொண்ட சாலைக்குமார சுவாமி

பின்னர் தலைமை சிற்பி முருகன் கனவில் வந்து சொன்னது போல் அந்த சிலையை தற்போது கோயில் உள்ள இடத்தில் வந்து நிறுவினார். வடமலையப்ப பிள்ளை அந்த இடத்தில் கோயிலை கட்டினார். முதலில் இந்தப் பகுதி வீரராகவபுரம் என அழைக்கப்பட்டது. பின்னர் வீராபுரம் எனும் மருவி தற்போது திருநெல்வேலி ஜங்ஷன் அல்லது நெல்லை சந்திப்பு என அழைக்கப்படுகிறது.

இந்தக் கோயிலில் தெற்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்தால் இடது பக்கம் சித்தி விநாயகர் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து வீதி உலா செல்லும் விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை ஆகியோரது விக்கிரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் மணி மண்டபத்தில் தெற்கு நோக்கி வள்ளி தெய்வானை சமேதராக சண்முகர் பூரண புஷ்ப அலங்காரங்களோடு காட்சியளிக்கிறார். அதன் அருகே கிழக்கு வாசல் உள்ளது.

சாலைக்குமரன் என்ற பெயரில் ஆறுமுகங்கள், பன்னிரு கரங்கள் கொண்டு மயில் மீது அமர்ந்து கிழக்கு நோக்கி முருகன் காட்சிக் கொடுக்கிறார்.  வள்ளி வடக்கு நோக்கியும்,  தெய்வானை தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். மற்ற கோயில்களில் மயில் முருகனின் வலது பக்கம் நோக்கி இருக்கும். ஆனால் இந்த கோயிலில் இடது பக்கம் நோக்கி உள்ளது.

Also Read: Diwali Diabetes-friendly Food: சர்க்கரை நோயாளிகள் ஸ்வீட் சாப்பிட ஆசையா? ஆரோக்கியமான இனிப்புகளை வீட்டிலேயே செய்யலாம்!

போரில் வெற்றி பெற உதவிய முருகன்

பாளையக்காரர்கள் இந்த முருகப்பெருமானை வழிபட்டு கலந்து கொண்ட அனைத்து போர்களிலும் வெற்றி பெற்றதால் இவருக்கு பாளையஞ்சாலை குமரன் என்ற பெயரும் உண்டு. திருச்செந்தூரை போல கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு கோயில் தெற்கு வாசல் வழியாகவே பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அறுபடை வீடுகளில் காட்சி தருகின்ற முருகனின் பெரிய படங்கள் இங்குள்ள மகா மண்டபம் சுவர்களை அலங்கரிக்கிறது.

இக்கோயிலில் திருமணம் செய்து கொண்டால் சகல பேறுகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கையாகும். அதனால் முகூர்த்த தினங்களில் 30க்கும் மேற்பட்ட திருமணங்கள் கூட நடைபெறுகிறது. சித்திரை மாதப்பிறப்பு, ஐப்பசி மாத பிறப்பன்று  காலையில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அதேபோல் ஆனி உத்திரம் அன்று வருசாபிஷேகமும், வைகாசி விசாகம் அன்று சுவாமி வீதி உலாவும், விஜயதசமி அன்று சுவாமி  பாரிவேட்டையும் நடைபெறும்.

இந்த கோயிலில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வு மிகவும் பிரபலமானது. சூரனின் முதல் தலை எடுக்கும் நிகழ்வு நெல்லை சந்திப்பு ரயில் நிலைய  பகுதியிலும், இரண்டாவது தலையை சிந்துபூந்துறை சிவன் கோயில் அருகிலும், மூன்றாவது சிலை செல்வி அம்மன் கோயில் அருகிலும் நடைபெறும்.தற்போது கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதால் கந்தசஷ்டி உட்பட அனைத்து திருவிழாக்களும் கோயிலுக்குள்ளேயே எளிமையான முறையில் நடைபெற்று வருகின்றது. நம் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் விலகி நன்மைகளும் மகிழ்ச்சியும் ஈடேற ஒரு முறை சாலைக்குமரன் கோயிலுக்கு சென்று சுவாமி தாசனும் செய்து வரலாம்.

Latest News