Temple Special: திருமண தடை நீங்க வணங்க வேண்டிய முருகன் கோயில்.. எங்கே தெரியுமா? - Tamil News | temple-special-thanjavur Melakottai Murugan Temple | TV9 Tamil

Temple Special: திருமண தடை நீங்க வணங்க வேண்டிய முருகன் கோயில்.. எங்கே தெரியுமா?

தமிழ்நாட்டில் முருகனுக்கு அறுபடை கோயில்கள் இருப்பது நம் அனைவரும் அறிந்தது. ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் அந்த அறுபடை கோயில்களும் அமைந்துள்ளது என்பது பலருக்கும் தெரியாத விஷயம். அதில் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலாக இந்த சுப்பிரமணிய சுவாமி கோயில் கருதப்படுகிறது.ஒருவருக்கு ஜாதகத்தில் எத்தனை கிரக தோஷங்கள் இருந்தாலும் அவர்கள் இந்த கோயிலுக்கு வந்தால் தீரும்.

Temple Special: திருமண தடை நீங்க வணங்க வேண்டிய முருகன் கோயில்.. எங்கே தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Published: 

30 Oct 2024 19:00 PM

திருமுருகன் ஆலயம்: தமிழ் கடவுள் முருகனுக்கு உலகமெங்கும் பல பெயர்களில் கோயில்கள் உள்ளது. அதே சமயம் குன்றின் மேல் இருப்பான் குமரன் என அவனை புகழ்வார்கள். சில ஊர்களில் செயற்கையாக குன்று அமைத்து அதன் மேல் முருகனை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள். அப்படி ஒரு கோயில்தான் தஞ்சாவூர் மாவட்டம் மேல அலங்கம் என்ற பகுதியில் அமைந்துள்ள திருமுருகன் ஆலயம். இந்தக் கோயில் மேலக்கோட்டை வாசல் குமாரசாமி கோயில் என்றும், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் சிவகங்கை பூங்கா நுழைவு வாயிலில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேல அலங்கத்தில் இக்கோயில் உள்ளது. இக்கோயிலில் காலை 7 மணி முதல் 11 மணி வரையும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் முருகனுக்கு அறுபடை கோயில்கள் இருப்பது நம் அனைவரும் அறிந்தது. ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் அந்த அறுபடை கோயில்களும் அமைந்துள்ளது என்பது பலருக்கும் தெரியாத விஷயம். அதில் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலாக இந்த சுப்பிரமணிய சுவாமி கோயில் கருதப்படுகிறது.

Also Read: Diwali: தீபாவளி அன்று பிறருக்கு கொடுக்கக் கூடாத 5 பொருட்கள்..!

ஆலயம் உருவான வரலாற

தஞ்சாவூரை மராட்டிய அரச வம்சம் ஆண்ட போது  அக்குடும்பத்தில் இருந்த பெண் ஒருவருக்கு நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டுக் கொண்டே இருந்துள்ளது. ஏகப்பட்ட பரிகாரங்கள் செய்தும் எந்த பலனும் இல்லாததால் அரச வம்சத்தைச் சார்ந்தவர்கள் வருத்தப்பட்டார்கள். இப்போது புகழ்பெற்ற ஜோதிடர் ஒருவரை அரசர் அரண்மனைக்கு அழைத்து வந்து பெண்ணின் ஜாதகத்தை கொடுத்து திருமண தடைகள் விலகுவதற்கான பரிகாரம் குறித்து கேட்டுள்ளார்.

முற்பிறவியில் அந்தப் பெண் முருகன் கோயில் ஒன்றை கட்ட வேண்டும் என அப்பெண் விரும்பியதாகவும், அக்கனவு நிறைவேறாமல் இறந்து போனதையும் ஜோதிட சாஸ்திரத்தின் வழியே ஜோதிடர் கண்டறிந்தார். முப்பிறவி செய்த புண்ணியத்தின் விளைவாக இப்பிறவியில் அவள் அரச குடும்பத்தில் பிறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி இப்பிறவியில் இவள் முருகனுக்கு ஆலயம் கட்டியது திருமணம் நடக்கும் என ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

மேலும் திருப்பரங்குன்றம் திருமணத்திற்கு உரிய தலமாக விளங்குவதால் தஞ்சாவூர் மேற்கு பகுதியில் உள்ள கோட்டையின் நுழைவாயிலில் குன்றின் மேல் ஆலயம் அமைத்து திருமண கோலத்தில் காட்சி தரும் வள்ளி தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதன்படி இந்த கோயில் உருவாக அப்பெண்ணுக்கு ஜோதிடர் வாக்குப்படி திருமணம் நடைபெற்றது. இந்த சுப்பிரமணிய சுவாமியை மராட்டிய மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன் தங்கள் இஷ்ட தெய்வமாக வழிபட்டு சென்றுள்ளார்கள் என்ன வரலாறு தெரிவிக்கிறது.

Also Read:  Train Service: சென்னை மக்கள் கவனத்திற்கு.. நாளை ரயில் சேவையில் மாற்றம்!

கோயிலின் சிறப்பு 

இந்தக் கோயிலில் வடக்கு பகுதியில் ரங்கநாதர் ஆலயம்,  தெற்கில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட வட பத்ரகாளியம்மன் கோயிலும், மேற்கில் முருகன் ஆசிரமமும் அமைந்துள்ளது. இந்த முருகன் ஆசிரமம் கிருபானந்த வாரியார் சுவாமிகளால் தொடங்கி வைக்கப்பட்டது. கிழக்கு பக்கமாக அமைந்துள்ள நுழைவு வாயில் வழியாக உள்ளே வந்தால் மண்டப முகப்பில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமியின் கதை சிற்பங்கள் காணப்படுகிறது. அதனையடுத்து 15 திதிகளையும் குறிக்கும் வகையில் கருங்கல்லால் ஆன படிகள் செய்யப்பட்டுள்ளது.

இதன் மீது ஏறி சென்றால் மூன்று நிலை ராஜகோபுரம் கொண்ட நுழைவு வாயிலை அடையலாம். அதன் வழியாக மகா மண்டபத்தை சென்றால் வலது புறத்தில் விசாலாட்சி காசி விஸ்வநாதருடன் காட்சி தருகிறார். அர்த்தமண்டபத்திற்கு வெளியே வலது புறம் இடும்பனும் இடது புறம் விநாயகரும் காட்சி தருகிறார்கள். இதன் பிறகு அங்குள்ள ஆறு படிகளில் ஏறி சென்றால் இந்த ஆறுமுகனை தரிசிக்கலாம்.. வள்ளி தெய்வானை ஆகியோருடன் சுப்பிரமணிய சுவாமி திருமண கோலத்தில் தனி விமானத்துடன் கூடிய கருவறையில் எழுந்தருளியுள்ளார்.

இந்தக் கோயிலில் தமிழ் வருட பிறப்பு, வைகாசி மூலம் முத்து பல்லக்கு விழா, வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, திருக்கார்த்திகை, கந்த சஷ்டி, சொக்கப்பனை வைபவம், மார்கழி மாத பூஜை, தை கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாத கார்த்திகை நட்சத்திரத்தன்றும் மாலை 6 மணிக்கு மூலவருக்கு 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரம், சரஸ்வதி சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை நடைபெறுகிறது.

ஒருவருக்கு ஜாதகத்தில் எத்தனை கிரக தோஷங்கள் இருந்தாலும் அவர்கள் இந்த கோயிலுக்கு தொடர்ந்து ஆறு கார்த்திகை நட்சத்திர நாளில் வந்து ஆறு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து ஆறு முறை கோயிலை வலம் வந்து வழிபட்டால் திருமண பாக்கியம் அமையும். எதிரிகள் தொல்லை நீங்கும். வறுமை விலகும். நினைத்த காரியங்கள் நடக்கும் என நம்பப்படுகிறது.

ப்ரோக்கோலியில் இவ்வளவு நன்மைகளா?
சர்க்கரை பதில் வெல்லம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
சாப்பாட்டில் நெய் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
உறவுகளில் நம்பிக்கையை வளர்க்க ஈஸியான டிப்ஸ்!