Thanjavur: கொலுசு அணிவித்தால் குழந்தை வரம் அருளும் காளிகா பரமேஸ்வரி!

பெரிய கோவில் கட்டுமான பணிகளும் தொடங்கி நல்லபடியாக நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நாளும் சிற்பி குஞ்சர மல்லனின் கனவில் காளிகா பரமேஸ்வரி அம்மன் தோன்றி பெரிய கோவில் எப்படி கட்ட வேண்டும் என்பதற்கான உத்திகளை சொல்வது வழக்கமாக இருந்துள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழனும் தினமும் இந்த அம்மனை வழிபாடு செய்த பிறகு கோயில் கட்டுமான பணிகளை பார்வையிடுவதை வழக்கமாகக் கொண்டு வந்துள்ளான்.

Thanjavur: கொலுசு அணிவித்தால் குழந்தை வரம் அருளும் காளிகா பரமேஸ்வரி!

கோப்பு புகைப்படம்

Updated On: 

02 Oct 2024 13:05 PM

தஞ்சாவூர் என்றால் பலருக்கும் மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோயில்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன்பு அருகில் உள்ள ஒரு கோயிலில் வீற்றிருக்கும் அம்மனுக்கு ஹோமம், அபிஷேகம் மற்றும் அர்ச்சனை என சகலமும் செய்து வழிபடுவது நடைபெறுகிறது. இதேபோல் தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெறும் போது தேர் இறுதியாக இந்த கோயிலுக்கு வந்து இங்குள்ள அம்மனுக்கு வழிபாடு செய்த பிறகு தான் மேல ராஜ வீதியில் நிலை நிறுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு கோயில்தான் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தெற்கு வீதியில் அமைந்துள்ள காளிகா பரமேஸ்வரி கோயில் ஆகும்.

கோயில் உருவான வரலாறு

மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் பெரிய கோவிலை கட்ட வேண்டும் என விரும்பிய நிலையில் அதற்காக குஞ்சர மல்லன் என்ற சிற்பியுடன் ஆலோசனையில் ஈடுபட்டான். அப்போது அந்த சிற்பி மன்னனிடம், “நாங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் எங்கள் குல தெய்வமான காளிகா பரமேஸ்வரி அம்மனை வழிபட்டு தொடங்குவது வழக்கமான ஒன்று. எனவே எங்களுக்கு முதலில் ஒரு கோயில் கட்டி கொடுத்து விட்டால் நாங்கள் அங்கே சென்று வழிபட்டு விட்டு பெரிய கோவில் கட்டுமான பணிகளை செய்வோம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இராஜராஜ சோழன் தெற்கு வீதியில் ஓர் இடத்தை தேர்வு செய்து அங்கு காளிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலைப் பற்றி கும்பாபிஷேகம் செய்து கொடுத்தான்.

இதற்கிடையில் பெரிய கோவில் கட்டுமான பணிகளும் தொடங்கி நல்லபடியாக நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நாளும் சிற்பி குஞ்சர மல்லனின் கனவில் காளிகா பரமேஸ்வரி அம்மன் தோன்றி பெரிய கோவில் எப்படி கட்ட வேண்டும் என்பதற்கான உத்திகளை சொல்வது வழக்கமாக இருந்துள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழனும் தினமும் இந்த அம்மனை வழிபாடு செய்த பிறகு கோயில் கட்டுமான பணிகளை பார்வையிடுவதை வழக்கமாகக் கொண்டு வந்துள்ளான்.

தொழிலாளர்களின் கடும் உழைப்போடு எந்தவித தடையுமின்றி காளிகா பரமேஸ்வரி அம்மனின் ஆசியோடு பெரிய கோயில் உருவானது. இந்த காளிகா பரமேஸ்வரி அம்மன் தஞ்சாவூரை எட்டு திசைகளில் இருந்தும் காவல் காக்கும் தெய்வங்களில் ஒருத்தியாக திகழ்கிறாள். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சை பெரிய கோவில் உருவான பிறகும் ராஜராஜ சோழன் இந்த கோயிலுக்கு சென்று விட்டு வழிபாடு செய்த பிறகுதான் பெரிய கோயிலுக்குள் செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. அதனைத்தான் இன்றளவும் இங்குள்ள மக்களும் அதனை பின்பற்றி வருகின்றனர்.

இப்பகுதி மக்களால் இந்த கோயில் காளியம்மன் கோயில் என அழைக்கப்படுகிறது. அங்கு வடக்கு பார்த்த ராஜகோபுரத்தின் உச்சியில் நவகலசங்கள் இடம்பெற்றுள்ளது. கோயிலில் உள்ளே சென்றால் இடது புறத்தில் கிழக்கு நோக்கிய அர்த்தசாலை விநாயகரை தரிசனம் செய்யலாம். அதன் வலதுபுறத்தில் ராமபிரான்,  பாலதண்டாயுதபாணி சன்னதி  உள்ளது. இதில் பால தண்டாயுதபாணிக்கு யானை வாகனம் உள்ளது வித்தியாசமானதாக பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கோயிலின் உள்ளே மகா மண்டபம், அர்த்த மண்டபம்,  பலிபீடம், நந்தி வாகனம் ஆகியவை உள்ளது.

இங்கு பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் காளிகா பரமேஸ்வரி அம்மனின் அழகை காண கண் கோடி வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும். இந்த அம்மனின் இரண்டு காலிலும் கொலுசு போடும் அமைப்பு போன்று சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வருகை தரும் பக்தர்கள் அம்மனை வணங்கி கொலுசு மாட்டி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு செய்வதால் தடைபட்ட திருமணங்கள் விரைவில் நடக்கும் என்பது நம்பிக்கையாகும். மேலும் குழந்தை பேறு வேண்டுதலும் கைகூடும் என்பதும் ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

இந்த கோயிலில் சித்திரை பௌர்ணமி அன்று ராஜராஜ சோழனுக்கு காளிகா பரமேஸ்வரி அம்மன் காட்சி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதன் காரணமாக அனைத்து பௌர்ணமி நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.  இந்த கோயிலில் காலை 7 மணி முதல் 11 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் தரிசன நேரமாக உள்ளது. விழா நாட்களில் தரிசன நேரம் மாற்றியமைக்கப்படும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!