Tiruvannamalai Deepam: திருவண்ணாமலை மகாதீபம்.. எத்தனை நாட்கள் எரியும் தெரியுமா?
கொட்டும் மழைக்கு மத்தியில் கோயில் ஊழியர்கள் தீப மலைக்கு கொண்டு சென்றனர். சுமார் 350 கிலோ எடை கொண்ட இந்த கொப்பரையானது ஆறடி உயரம் கொண்டது. மேலும் பஞ்சலோகத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த கொப்பரையில் காடா துணி நெய்யில் ஊற வைக்கப்பட்டு மகாதீபமானது ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெகுவிமரிசையாக நேற்று (டிசம்பர் 13) மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். தமிழ் மாதங்களில் 8வது மாதமாக வரும் கார்த்திகை வந்துவிட்டாலே நம் அனைவருக்கும் இல்லங்களில் ஒளிரும் தீபங்கள் தான் நினைவுக்கு வரும். இந்த தீபத்துக்கு பின்னணியில் வரலாற்று காரணம் சொல்லப்பட்டாலும் நம் வாழ்க்கையில் உள்ள இருள் நீங்கி ஒளி பிறக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை தத்துவமாக உள்ளது. இத்தகைய கார்த்திகை தீபத் திருவிழா தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும்.
10 நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா
பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக திகழும் இந்த கோயிலில் ஆண்ட தோறும் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் கோயிலின் பின்புறம் உள்ள 2664 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். பத்து நாட்கள் கொண்டாடப்படும் திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக நகரப் பகுதியில் உள்ள 153 பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. டிசம்பர் 13-ம் தேதியான நேற்று தமிழகத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்ட நிலையில் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
Also Read: BPSC Paper Leak: பிபிஎஸ்சி வினாத்தாள் கசிந்ததாக புகார்.. போராட்டம் நடத்திய தேர்வரை அறைந்த அதிகாரி!
கிட்டத்தட்ட 50 லட்சம் பக்தர்கள் உலகம் முழுவதிலும் இருந்து திருவண்ணாமலைக்கு இந்த திருவிழா காலத்தில் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் நடப்பாண்டு புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில் தீபமலையில் மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பக்தர்களுக்கு மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட நபர்களைக் கொண்டு தீபத் திருவிழா வெகு விமரிசையாக மகாதீபம் ஏற்றப்பட்டது. மாலை சரியாக 6.01க்கு தீபம் ஏற்றப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான மக்கள் நேரிலும் கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் தரிசனத்தை கண்டு கழித்தனர். அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்ட பின்பு தான் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றும் வழிமுறை தொடர்ந்து வருகிறது.
கடந்த டிசம்பர் 4ஆம் தேதி அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. தினந்தோறும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 10ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகாதீபத்துக்கான முன்கட்ட பணிகள் அனைத்து நடைபெற்றது.
களைகட்டிய திருவண்ணாமலை
மகாதீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை சிறப்பு பூஜை செய்யப்பட்ட நிலையில் கொட்டும் மழைக்கு மத்தியில் கோயில் ஊழியர்கள் தீப மலைக்கு கொண்டு சென்றனர். சுமார் 350 கிலோ எடை கொண்ட இந்த கொப்பரையானது ஆறடி உயரம் கொண்டது. மேலும் பஞ்சலோகத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த கொப்பரையில் காடா துணி நெய்யில் ஊற வைக்கப்பட்டு மகாதீபமானது ஏற்றப்பட்டது. நடப்பாண்டு மலை உச்சியில் மகா தீபத்தை காண 2,000 பக்தர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம் நேற்று காலை கோயிலில் கருவறையில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தை காண 7,500 பேருக்கும் மாலையில் ஏற்படும் மகா தீபத்தை காண 11,500 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்தும் வந்த பக்தர்கள் நேற்று திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால் திரும்பும் திசை எங்கும் மனித தலைகள் மட்டுமே காணப்பட்டது. 14 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கச்சிதமாக செயல்பட்டனர்.
Also Read: Karthigai Deepam 2024: மலை உச்சியில் ஏற்றப்பட்ட தீபம்.. அரோகரா கோஷத்தில் அதிர்ந்த திருவண்ணாமலை!
தீபம் ஸ்பெஷல்
சுமார் 3,500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு ஆயிரம் மீட்டர் காடா துணியாலான திரியில் ஏற்றப்படும் மகா தீபமானது கிட்டத்தட்ட 11 நாட்கள் எரியும். 30 கிலோமீட்டருக்கு அப்பால் இருப்பவர்களும் எளிதில் இந்த மகா தீபத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த தீபத்திற்கு பயன்படுத்தப்படும் நெய் அனைத்தும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கியது ஆகும். மேலும் கொப்பரையானது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று அடுக்குகளால் செய்யப்பட்டிருக்கும். கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் அனைத்து வீடுகளிலும் தீபமேற்றி வழிபாடு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.