Azhagiya Singaperumal: பெருமாளே கோயில் கொள்ள ஆசைப்பட்ட இடம்.. எங்கு இருக்கு தெரியுமா?
Kanchipuram: மூன்று நிலை ராஜகோபுரம் மற்றும் ஒரு பிரகாரம் என சிறிய கோயிலாக அழகிய சிங்கப்பெருமாள் கோவில் காணப்பட்டாலும் பக்தர்கள் மனதிற்கு இதமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் பெருமாளுக்கு நடைபெறும். பேயாழ்வார் இந்த கோயிலை கும்பகோணம், திருப்பதி போன்ற பெருமாளுக்கு உரிய சிறப்பு இடங்களாக கருதப்படும் கோயில்களுக்கு இணையாக பாடியுள்ளார்.
அழகிய சிங்கப்பெருமாள் கோயில்: 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவேளுக்கை அழகிய சிங்கப்பெருமாள் கோயில் பற்றி நாம் காணலாம். இந்தக் கோயில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இந்தக் கோயில் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவிலுக்கு தெற்குப் பகுதியில் அட்டப்புயக்கரம் கோயிலுக்கு அரைக் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7:30 மணி வரையும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
கோயில் உருவான வரலாறு
வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்பது பொருளாகும். திருமாலின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்மர் இந்த இடத்தில் இருக்க ஆசைப்பட்டதால் இந்த இடம் வேளிருக்கை என முதலில் அழைக்கப்பட்டு பிற்காலத்தில் வேளுக்கை என மருவி விட்டது. அதாவது பிரம்மதேவர் ஒரு முறை யாகம் செய்து கொண்டிருந்த போது அரக்கர்கள் கூட்டம் அவரது யாகத்துக்கு இடையூறு விளைவித்து கொண்டிருந்தனர். இதனால் கவலை கொண்ட அவர் திருமாலிடம் முறையிட்டுள்ளார். மேலும் யாகத்தை சிறப்பாக நடத்த உங்கள் உதவி வேண்டும் எனவும் வேண்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரம்மதேவரின் யாகத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்த திருமால் பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த அதே போலத்துடன் ஹஸ்தி சைலம் என்னும் குகையிலிருந்து புறப்பட்டு இரணியனது மாளிகையின் தூணிலிருந்து வெளிப்பட்டார். நரசிம்மரின் வேறொரு வடிவம் கொண்டு தம்மைத் தாக்க வந்த அசுரர்களை விரட்டிக் கொண்டே சென்றார். அப்போது இவ்விடத்திற்கு வந்த சேர்ந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் அசுரர் கூட்டம் பயந்து போனது. அவர்கள் அனைவரும் கண்காணா இடத்திற்கு ஓடிச் சென்று ஒளிந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இனிமேல் அசுரர்கள் வந்தாலும் அவர்களை எதிர்க்க இந்த இடமே பொருத்தமானது என திருமால் எண்ணினார். மேலும் இவ்விடத்தின் சுற்றுப்புற அழகில் மயங்கிய அவர் இங்கேயே இருக்க ஆசைப்பட்டார். அதனல யோக நரசிம்மராகி அமர்ந்து விட்டார் என வரலாறு தெரிவிக்கிறது. இக்கோயிலில் கனக விமானத்தின் கீழ் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி பெருமாள் காட்சி கொடுத்ததாக ஐதீகம் உள்ளது. தற்போது யோகமுத்துரையுடன் கூடிய நரசிம்மராக மேற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.இந்த நரசிம்மருக்கு அழகிய சிங்கர், ஆள் அரி, திருக்கோலத்தில் அழகிய சிங்கர், முகுந்த நாயகன் என பல்வேறு பெயர்கள் உள்ளது.
மூன்று நிலை ராஜகோபுரம் மற்றும் ஒரு பிரகாரம் என சிறிய கோயிலாக அழகிய சிங்கப்பெருமாள் கோவில் காணப்பட்டாலும் பக்தர்கள் மனதிற்கு இதமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் பெருமாளுக்கு நடைபெறும். பேயாழ்வார் இந்த கோயிலை கும்பகோணம், திருப்பதி போன்ற பெருமாளுக்கு உரிய சிறப்பு இடங்களாக கருதப்படும் கோயில்களுக்கு இணையாக பாடியுள்ளார். காமாஸிகாஷ்டகம் என்ற ஸ்லோகத்தின் மூலம் போற்றியுள்ளவர் இதை தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு நரசிம்மரின் பரிபூர அருள் கிடைக்கும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கோயிலின் சிறப்பு
கோயிலின் சுற்று பிரகாரத்தில் தனி சன்னதியில் சுதர்சன சக்கரத்தாழ்வார் வீற்றிருக்கிறார். அதேபோல் நரசிம்மருக்கு நேர் எதிராக கருடாழ்வார் சற்றே தலை சாய்த்து பயத்துடன் இருப்பதே இந்த கோயிலின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இவர் நரசிம்மரின் உக்கிரத்துக்கு பயந்து இப்படி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலுக்கு காஞ்சிபுரம் மட்டுமல்லாது பல ஊர்களில் இருந்தும் வருகை தரும் பக்தர்கள் துன்பங்கள் விலக அழகிய சிங்கப்பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர். மேலும் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதும் பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து பட்டு வஸ்திரம் சாற்றுகின்றனர்.திருமாலின் காக்கும் குணம் வெளிப்பட்ட இந்த கோயிலுக்கு ஆண்டுக்கு ஒருமுறையேனும் வாய்ப்பு கிடைத்தால் சென்று வர வேண்டும் என ஆன்மிக அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.