Sabarimala: சபரிமலைக்கு இருமுடி கட்டுபவர்கள் கவனிக்க வேண்டியவை!
Reason For Irumudi: கார்த்திகை மாதம் தொடங்கி விட்டாலே ஐயப்பன் பக்தர்கள் 41 நாள் விரதம் மேற்கொண்டு ஐயப்பனை காண்பதற்கு மாலை அணிவார்கள். இதில் முக்கிய நிகழ்வானது இருமுடி கட்டுவது. ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி தலையில் சுமந்து ஐயப்பனை தரிசித்து திரும்புவார்கள். இருமுடி கட்டும்போது செய்யக்கூடாதது என்ன? ஏன் இருமுடி கட்டப்படுகிறது என்ற தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக சபரிமலை யாத்திரை என்பது ஒரு குருசாமியின் வழிகாட்டுதலின்படி செல்ல வேண்டும். சபரிமலையில் இருக்கக்கூடிய ஐயப்பன் குருவின் ஸ்தானத்திலிருந்து தான் நமக்கு அருள் புரிகிறார். யாரெல்லாம் என்னை நோக்கி வருகிறார்களோ அவர்கள் வேண்டும் வரத்தை நான் வாரி வாரி வழங்குவேன் என்ற தீர்மானத்தோடு சபரிமலையில் ஐயப்பன் எழுந்து அருள்கிறார். எனவே இறைவனுடைய அருளை பெறுவதற்கு குரு உடைய வழிகாட்டுதல் அவசியம். குருசாமியின் முடிவுகளுக்கு முழுவதுமாக கட்டுப்பட வேண்டும். குருசாமியை மீறி எதுவும் செய்யக்கூடாது என்பது நியதி. எனவே குருசாமியின் வழிகாட்டுதல்படியேதான் இருமுடி கட்ட வேண்டும்.
ஏன் இருமுடி வழிபாடு?
நம் வாழ்க்கையில் இரண்டு விஷயங்களை செய்து கொண்டே இருப்போம். ஒன்று புண்ணியம் மற்றொன்று பாவம். அதேபோல் தான் இந்த இரு முடியிலும் இரண்டு முடிச்சுகள் உள்ளன. சபரிமலை ஐயப்பனுக்கு காணிக்கையாக எடுத்துச் செல்வது இந்த இருமுடி. இந்த இரு முடியின் முன் முடியில் ஐயப்பனுக்கு அபிஷேகப் பொருட்கள், நெய் காய், அரிசி போன்றவையும் பின் முடியில் நமக்கு தேவையான தண்ணீர், பிஸ்கட், பேரீத்தம் பழம் போன்றவையும் வைத்து கட்டப்படும். இதில் வைக்கக்கூடிய நெய் காய் மூன்று கண் உடைய தேங்காயாக இருக்க வேண்டும்.
மூன்று கண்ணுடைய தேங்காய் சிவனுடைய அம்சம். நெய் என்பது மகாலட்சுமியின் சொரூபம். அதில் விஷ்ணுவும் வாசம் செய்கிறார். தேங்காயை தயார் செய்து வைத்துக் கொண்டு மகாவிஷ்ணுவின் சொரூபமாக இருக்கக்கூடிய நெய்யை தேங்காய் விற்குள் நிறைக்க வேண்டும். இதன் மூலம் ஹரியும் சிவனும் ஒன்றாக சேர்கிறார்கள் என்பதை இதன் தத்துவம்.
Also Read: சபரிமலை ஹரிவராசனம் பாடல் வரலாறு… இவ்வளவு சிறப்புகள் இருக்கா?
இந்த நெய் காயைத்தான் தலையில் வைத்து சுமந்து கொண்டு செல்லப்படுகிறது. ஐயப்பனின் திருமேனுக்கு செய்யப்படுவது நெய் அபிஷேகம். எனவேதான் அவர் நெய் அபிஷேகப் பிரியர் என்று அழைக்கப்படுகிறார். சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும் நெய் மூலமாக ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும் என்பதால் கொண்டு செல்லப்படும் நெய் மிகவும் சுத்தமானதாக இருக்க வேண்டும். ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்துவிட்டு அதை பிரசாதமாக நம்மிடம் கொடுத்து விடுவார்கள்.
ஐயன் திருமேனி தீண்டிய நெய் என்றுமே கெடாது என்பது நம்பிக்கை. எடுத்து செல்லும் அரிசியை, யாத்திரை முடிந்து திரும்பி வரும்பொழுது கொண்டு சென்ற அரிசி மூலம் சர்க்கரைப் பொங்கல் செய்து ஐயப்பனுக்கு நெய் வைத்தியமாக படைத்துவிட்டு பின் நம் மாலையை கழற்ற வேண்டும்.
ஏன் நெய் கொண்டு செல்லப்படுகிறது:
பாலில் இருந்து எடுக்கப்படுவது நெய். பால் எளிதில் கெட்டுவிடும். ஆனால் பாலில் இருந்து எடுக்கப்படும் நெய் எளிதில் கெட்டுப் போகாது. அதேபோல் தான் பாவங்கள் செய்து கெட்டுப்போன மனிதர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றால் பாவங்கள் நீங்கிய கெடாத மனிதர்களாக மாறுகிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக தான் சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் தலையில் நெய்யை சுமந்து செல்கிறார்கள்.
Also Read: Sabarimala: ஐயப்பனுக்கு ஏன் நெய் தேங்காய் அடைக்கப்படுகிறது தெரியுமா?
இருமுடி கட்டும்பொழுது செய்யக்கூடாதவை:
41 நாள் ஐயப்பனுக்காக விரதம் இருந்தவர்கள் அதே பொறுமையோடு இருமுடி கட்ட வேண்டும். இருமுடி கட்டும்பொழுது எந்தவித சிந்தனையோ பதற்றமோ இல்லாமல் பொறுமையாக இருக்க வேண்டும். இருமுடி கட்டும் பொழுது ஐயப்பனை மனதாக நினைக்க வேண்டும். நம்முடைய வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் ஐயப்பனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.
இருமுடி கட்டிய பையில் ஐயப்பன் குடியிருப்பதாக நம்பிக்கை. எனவே சாதாரணமாக அதை தலையில் வைத்து தூக்கிக் கொண்டு செல்லாமல் ஐயப்பனை தலையில் வைத்து கொண்டு செல்வதாக பக்தியோடு யாத்திரியை மேற்கொள்ள வேண்டும்.
இருமுடி தலையில் ஏறி விட்டால் குருசாமியாக இருந்தாலும் கூட அவருக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது. இருமுடி என்பது ஐயப்பனுக்கு நிகரானது. எனவே இரு முடியை தலையில் இருந்து எடுக்கும் சூழல் வந்தால் அதை கீழே வைக்காமல் நம்முடைய மடியில் வைத்துக் கொள்வதை சிறந்தது அல்லது இதற்கென்று ஒரு துணியை வைத்துக்கொண்டு அந்த துணியின் மேல் அந்த இருமுறையை வைக்க வேண்டும்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)