Border–Gavaskar Trophy: பார்டர்-கவாஸ்கர் டிராபியின் வரலாறு என்ன? எந்த அணி அதிக வெற்றி? முழு விவரம் இங்கே!
BGT 2024-25: சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, அடுத்ததாக வருகின்ற நவம்பர் 2024 முதல் ஜனவரி 2025 வரை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபியில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் தொடங்குகிறது.
பார்டர் – கவாஸ்கர் டிராபி என்பது இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே விளையாடப்படும் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும். இந்த தொடருக்கு முன்னாள் கேப்டன்களாக ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் மற்றும் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ஆகியோருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இவர்களது பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த 1947ம் ஆண்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் போட்டிகள் விளையாட தொடங்கி 1992 வரை 50 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றன.
கடந்த 1996 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) ஆகிய இரண்டு நிர்வாகமும் இணைந்து பார்டர்-கவாஸ்கர் டிராபி என பெயர் வைத்தனர். பார்டர் மற்றும் கவாஸ்கர் அந்தந்த அணிகளுக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் கிரிக்கெட் வீரர்கள் ஆவார். இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் அணி கோப்பையை பெறும். இரு அணிகளும் தொடரை டிரா செய்தால், கடந்த தொடரில் கோப்பையை வென்ற அணி டிராபியை தக்கவைத்து கொள்ளும்.
ALSO READ: Team India: இந்திய அணி அடுத்ததாக யாருடன் எப்போது மோதுகிறது? முழு விவரம் இங்கே!
பார்டர்-கவாஸ்கர் டிராபி முதன்முறையாக 1996-97 ஆம் ஆண்டு விளையாடப்பட்டது. பார்டர் – கவாஸ்கர் டிராபி இரு அணிகளுக்கு இடையே இதுவரை 16 முறை விளையாடப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக இந்திய அணி 10 முறையும், ஆஸ்திரேலிய அணி 5 முறையும் தொடரை வென்றது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு தொடர் சமனில் முடிவடைந்துள்ளது. பார்டர் – கவாஸ்கர் டிராபியில் கடைசி 4 தொடர்களில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை இந்திய அணி 2-1 என்ற கணக்கிலும், 2018 – 19ல் இந்திய அணி 2-1 என்ற கணக்கிலும், 2020-21 ல் இந்திய அணி 2-1 என்ற கணக்கிலும், கடந்த 2023ல் இந்தியா தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கிலும் தோற்கடித்தது.
அடுத்த பார்டர்-கவாஸ்கர் டிராபி எப்போது..?
சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, அடுத்ததாக வருகின்ற நவம்பர் 2024 முதல் ஜனவரி 2025 வரை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபியில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் தொடங்குகிறது. பெர்த் ஸ்டேடியத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குவது இதுவே முதல் முறையாகும்.
பார்டர்- கவாஸ்கர் டிராபி அட்டவணை:
- இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் – 2024 நவம்பர் 22 முதல் 26 வரை – பெர்த் ஸ்டேடியம், பெர்த்
- இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் – 2024 டிசம்பர் 06 முதல் 19 வரை – அடிலெய்டு ஓவல் ஸ்டேடியம், அடிலெய்டு
- இந்தியா vs ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் – 2024 டிசம்பர் 14 முதல் 18 வரை – கபா, பிரிஸ்பேன்.
- இந்தியா vs ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் – 2024 டிசம்பர் 26 முதல் 30 வரை – மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன் (பாக்ஸிங் டே டெஸ்ட்)
- இந்தியா vs ஆஸ்திரேலியா 5வது டெஸ்ட் – 2025 ஜனவரி 03 முதல் 07 வரை – சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி.
ALSO READ: WTC Final: WTC புள்ளிகள் பட்டியலில் பறிபோன முதலிடம்.. இந்திய அணிக்கு ஆப்பு வைத்த நியூசிலாந்து!
பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.
ரிசர்வ் வீரர்கள்: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது.
பார்டர் – கவாஸ்கர் டிராபியை எங்கே பார்க்கலாம்..?
பார்டர் – கவாஸ்கர் டிராபியை இந்தியாவில் காண விரும்புவோர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் கண்டுகளிக்கலாம். மொபைலில் பார்க்க விரும்புவோர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் அனைத்து போட்டிகளின் நேரடி ஸ்ட்ரீமிங்கையும் கண்டுகளிக்கலாம்.