Jasprit Bumrah: 27 நாட்களில் மீண்டும் முதலிடம்.. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் கிரீடத்தை கைப்பற்றிய பும்ரா..!
ICC Test Ranking: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா 883 ரேட்டிங் புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவின் ரபாடா 872 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஜோஷ் ஹேசில்வுட் 860 ரேட்டிங் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தார். இன்று வெளியிடப்பட்ட சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா 2 பந்துவீச்சாளர்களை பின் தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்தார். முன்னதாக, தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாரா முதலிடத்தில் இருந்தார். சமீபத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா சிறப்பாக செயல்பட்டு மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரோஹித் சர்மா இல்லாததால் இந்திய அணிக்கு பும்ரா கேப்டனாக செயல்பட்டார். இவரது தலைமையிலான இந்திய அணி வெற்றியை பதிவு செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
The Numero Uno in the ICC Men’s Test Bowler Rankings 🔝
Jasprit Bumrah 🫡 🫡
Congratulations! 👏👏#TeamIndia | @Jaspritbumrah93 pic.twitter.com/mVYyeioOSt
— BCCI (@BCCI) November 27, 2024
ரபாடா 2வது இடம்:
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடாவை பின்னுக்கு தள்ளி, ஒரு காலண்டர் ஆண்டில் இரண்டாவது முறையாக டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன், பும்ரா பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரபாடா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்கு பின்னால் மூன்றாவது இடத்தில் இருந்தார்.
தற்போது, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா 883 ரேட்டிங் புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவின் ரபாடா 872 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஜோஷ் ஹேசில்வுட் 860 ரேட்டிங் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் நான்காவது இடத்தில் உள்ளார். கடந்த அக்டோபர் 30 ம் தேதி ஜஸ்பிரித் பும்ரா தனது நம்பர் 1 தரவரிசையில் இருந்து வெளியேற, ரபாடா முதலிடத்தை பிடித்தார். ஆனால் 27 நாட்களில் பும்ரா மீண்டும் முதல் இடத்தை பிடித்து தனது கிரீடத்தை கைப்பற்றினார்.
முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா சிறப்பாக செயல்பட்டதன்மூலம், மீண்டும் முதலிடத்தை பிடித்தார். இலங்கை எதிரான தென்னாப்பிரிக்கா போட்டியில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் ரபாடா இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதேநேரத்தில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
பும்ராவுக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இன்னும் 4 போட்டிகள் உள்ளன. அவரது ஆட்டம் இப்படியே தொடர்ந்தால், அவரை நம்பர்-1 இடத்தில் இருந்து யாராலும் வெளியேற்ற முடியாது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்னேற்றம்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற யஷஸ்வி ஜெய்ஸ்வால் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த வரிசையில், இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், யஷஸ்வி ரேட்டிங் பாயிண்ட் 825 ரன்கள் புள்ளிகளை பெற்றார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த ஆண்டு மட்டும் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 58.18 சராசரியில் 3 சதங்கள் மற்றும் 7 அரை சதங்களுடன் 1280 ரன்கள் எடுத்துள்ளார்.
Yashasvi Jaiswal moves up two places to second spot 📈 https://t.co/J2nQw11wBS pic.twitter.com/z7fBV7bbho
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 27, 2024
கோலி 9 இடங்கள் முன்னேற்றம்:
ஜெய்ஸ்வாலை போன்று பெர்த் டெஸ்டில் ஆட்டமிழக்காமல் சதம் விளாசிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 9 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கோலி ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கோலியின் 30வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன் மோசமான பார்ம் காரணமாக 14வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதேநேரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் முறையே 2 மற்றும் 4 இடங்களை இழந்துள்ளனர்.