Tamil TV9 Exclusive: கேரம் விளையாட்டில் உலக கோப்பை சாம்பியன்.. தமிழகத்தின் தங்கமகள் காசிமா நேர்காணல்!
Carrom World Champion: அமெரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று பிரிவில் தங்கம் வென்றார் சென்னையின் வண்ணாரப்பேட்டையை சார்ந்த காசிமா. ஏறத்தாழ பத்து போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காசிமா இதுவரை மாலத்தீவு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கேரம் போட்டிக்கு சென்றுள்ளார். இவர் வெற்றி குறித்து Tv9 தமிழுக்கு அளித்த பிரத்யேக தகவல்கள்.
வடசென்னை பகுதியில் அதிகம் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்று கேரம். தெரு ஓரங்களில் நின்றபடி இளைஞர்களும் சிறுவர்களும் கேரம் விளையாடுவதை அந்த பகுதியில் பார்க்க முடியும். அதை மையமாக வைத்துக் கூட வட சென்னை என்ற படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். பெரும்பாலும் வடசென்னையில் ஆண்கள் மட்டுமே விளையாடி வந்த கேரம் விளையாட்டினை பெண்களாலும் விளையாட முடியும் என்று கேரம் விளையாட்டில் சாதனை படைத்து உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிரச் செய்திருக்கிறார் புதிய வண்ணாரப்பேட்டையை சார்ந்த காசிமா.
சென்னையில் புதிய வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனரான மெகபூக் பாஷா தனது மகள் காசிமாவை கேரம் விளையாட்டில் உலக சாம்பியனாக்கி அழகு பார்த்துள்ளார்.கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் போட்டியில் மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் காசிமா. ஆறாவது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து காசிமா உட்பட நான்கு வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பாக தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் சென்று வாழ்த்து பெற்றனர்.
வீராங்கனைகளுக்கு உதவித் தொகையாக 1.5 இலட்ச ரூபாய் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் போட்டிக்காக அமெரிக்க சென்ற காசிமா தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி என மூன்று பிரிவுகளிலும் தங்கம் வெற்று சாதனை புரிந்தார். இந்த சாதனையை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தார். அந்தப் பதிவில் வாழ்த்துக்கள் பெருமை கொள்கிறேன். எளியோரின் வெற்றியில் தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். தமிழகத்தின் தங்க மகளான காசிமாவை தொடர்பு பேசிய போது சில பிரத்தேக தகவலை TV9 தமிழுக்கு வழங்கினார்.
கேரமில் ஈடுபாடு:
நான் கடந்த 12 ஆண்டுகளாக கேரம் விளையாடி வருகிறேன். தற்பொழுது ஜஸ்டிஸ் பஷீர் சையது அகமத் கல்லூரியில் வணிக பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். என்னுடைய அண்ணன் ஜூனியர் நேஷனல் சாம்பியன். அவனைப் பார்த்து தான் எனக்கும் கேரம் மீது ஆர்வம் வந்தது. இதுவரை நான் பத்து தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளேன்.
ஃபெடரேஷன் கோப்பை வென்றது மற்றும் சீனியர் நேஷனல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தது ஆகியவற்றை வைத்து ஆறாம் உலகக் கோப்பை கேரம் டோர்னமெண்ட்க்கு தேர்வானேன். அமெரிக்காவில் நடைபெற்ற இந்த போட்டியில் மூன்று பிரிவில் தங்கம் வென்றுள்ளேன். இதுவரை கேரம் போட்டிக்காக மாலத்தீவு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளேன்.
Also Read: Exclusive: பாரா ஒலிம்பிக் வாலிபால்.. கெத்து காட்டும் தமிழக வீரர் நிபில் கிப்சன்!
இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக துணை முதலமைச்சரிடமிருந்து இருந்து 1.50 லட்ச ரூபாய் உதவி தொகையாக பெற்றேன். என்னுடைய திறமை மூலமாக அடுத்து வரும் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெல்வதற்காக கடின பயிற்சி ஈடுபட்டு வருகிறேன். தற்பொழுது தாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருவதால் சொந்தமான வீடு ஒன்றையும் மேலும் நான் விளையாட்டு பயிற்சிக்கு தேவையான இடங்களையும் தமிழக அரசிடம் கேட்டுள்ளேன். அது குறித்து தமிழக அரசு இதுவரை எதுவும் பதில் அளிக்கவில்லை. ஆனால் விளையாடுவதற்கான கிளப் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
அன்பும் ஆதரவும்:
என்னுடைய கோச் சிறுவயது முதலே என்னுடைய தந்தை தான். என்னுடைய தந்தை கேரம் விளையாட்டில் அனைத்தையும் கரைத்துக் குடித்தவர். அவர்தான் எனக்கும் என் அண்ணனுக்கும் பயிற்சி அளித்து எல்லா நுட்பத்தையும் கற்றுக் கொடுத்தார். அதன் பிறகு மரியா இருதயம் அவர்களிடம் கற்று வருகிறேன். கேரம் விளையாட்டிற்காக அர்ஜுனா விருது பெற்ற ஒரே வீரர் இவர் தான். அவரிடம் கற்று வருவது பெருமையாக உள்ளது.
Also Read: Tamil TV9 Exclusive : 50 ஆண்டுகளாக மக்கள் சேவை.. ஆலங்குடி ‘515’ கணேசனின் கதை!
நான் படித்த பள்ளியில் இருந்து கல்லூரி வரை எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்து வருகிறார். நான் ஆறு வயது முதலே இந்த விளையாட்டில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு விளையாடுவதற்கு சிறந்த சூழலில் ஏற்படுத்தி அனுமதி அளித்ததால் மட்டுமே தான் நான் இந்த அளவுக்கு முன்னேறி உள்ளேன். தேர்வு நேரங்களில் கூட என்னை விளையாட அனுமதித்தனர். போட்டி முடிந்து வந்த பிறகு எனக்கு மறுதேர்வு நடத்துவார்கள். தற்பொழுது கல்லூரியில் முதல் பருவத் தேர்வு எழுதவில்லை. எனக்காக மீண்டும் இப்பொழுது தேர்வு நடைபெறுகிறது.
என் வெற்றியை என் பகுதி மக்கள் திருவிழா போல் கொண்டாடினார்கள். அவர்கள் வீட்டு பிள்ளைகள் வெற்றியடைந்தது போல மகிழ்ச்சி அடைந்தனர். பெண் பிள்ளைகளை அதிகம் வெளியில் அனுப்ப தயங்கிய எங்கள் பகுதியில் இனி அனைவரையும் வெளியில் அனுப்புவோம் என்று என்னிடம் கூறி மகிழ்கின்றனர். இந்த உத்வேகமும் ஆதரவும் தொடர்ந்து நான் வெற்றி பெற உதவும் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.