DineshKarthik: ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்..!
DK Retirement: 2008 முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும், 38 வயதான தினேஷ் கார்த்திக் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஓய்வு பெற்றார். தனது சொந்த மாநில அணியான் சிஎஸ்கேவில் கடைசிவரை விளையாடாமல் ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக். இவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தினேஷ் கார்த்திக்
தமிழக வீரரான இவர் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கெனெ தனி முத்திரை பதித்து பல சாதனைகளை புரிந்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், இந்திய அணியில் பல போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணியில் தோனி விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் அணியை தொடர்ந்து வழிநடத்தி வந்ததால், இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துவந்தது. ஆனாலும், அதையெல்லாம் கருத்தில், ஐபிஎல் போட்டிகள் மற்றும் கிரிக்கெட் கமெண்டேட்டராக வலம் வந்தார். இவரை பலருக்கும் கிரிக்கெட் வீரராக தெரிவதை காட்டிலும், மைக் பிடித்து கிரிக்கெட் பேசுவராகவே அறியப்பட்டார்.
ஐபிஎல் போட்டிகள்
ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே தினேஷ் கார்திக் விளையாடி வருகிறார். 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற மெகா ஆக்ஷனில் தினேஷ் கார்த்திக் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2008 ஆம் ஆண்டு முதன்முதலாக டெல்லி டேர்வெல்ஸ் அணிக்காக விளையாடிய தினேஷ்கார்த்தி, 2011 ஆம் ஆண்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ளார். தொடர்ந்தும் 2013, 2014 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காகவும் தனது பங்களிப்பை தினேஷ் கார்த்தி வழங்கியுள்ளார். 2018 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் கொல்கத்தா அணியின் கேப்டனாகவும் அந்த அணியை வழிநடத்தியுள்ளார். இப்படி மற்ற அணிகளில் விளையாடி இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது தன்னுடைய கனவு என்று பல்வேறு நிகழ்வுகளில் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள தினேஷ் கார்த்திக்கிற்கு அது கனவாகவே மாறிவிட்டது.
Also Read: IPL 2024: SRH-ஐ வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது KKR..!
சிஎஸ்கே
சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் சமீபத்தில் இன்ஸ்டகிராமில், சிஎஸ்கே அணிக்காக விளையாட வாய்ப்பிருக்கிறதா என்று கேள்வி எழுப்பியதற்கு, தினேஷ்கார்த்திக் எந்த ரோலில் நான் களமிறங்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வருடம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணிக்காக தினேஷ் கார்த்திக் வாங்கப்படலாம் என்று கருத்துகளை முன்வைத்தனர். மேலும், சிஎஸ்கே கேப்டனாக உள்ள தோனி அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு ஓய்வில் இருப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இந்த கருத்துகள் உலா வந்தன.
சாதனைகள்
2008 ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடர்களில் பங்கேற்று வரும் தினேஷ் கார்த்தி 17 ஆண்டுகள் தொடர்ச்சியாக விளையாடிய வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். மொத்தம் 257 போட்டிகளில் விளையாடி, 4,842 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 22 அரை சதங்கள் அடித்து பல்வேறு சூழலில் அணியை இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றியுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மட்டும் 326 ரன்களை குவித்து ஃபினிஷராகவும், விக்கெட் கீப்பராகவும் ஆர்சிபிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
ஓய்வு அறிவிப்பு
நடப்பு 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறுவார் என்று ஆரம்பம் முதலே சொல்லப்பட்ட நிலையில், ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற போது, இணையத்தில், 16 வருட ஐபிஎல் கனவு நனவாகி, கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணியுடனான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி தோல்வியை தழுவியது. இந்த போட்டியுடன் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறபோவதை அறிவித்தார். ஓய்வை அறிவித்துள்ள தினேஷ் கார்த்திற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.