Happy Birthday Lakshmipathy Balaji: கில்லர் ஸ்மைல்.. அக்தர் பந்தில் சிக்ஸர்.. பாகிஸ்தானில் லட்சுமிபதி பாலாஜி செய்த சம்பவம்!
Lakshmipathy Balaji: 2008ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 24 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். அதில், ஹாட்ரிக் சாதனையும் அடங்கும். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை லட்சுமிபதி பாலாஜி படைத்தார். தொடர்ந்து மூன்று பந்துகளில் ஆல்ரவுண்டர்களான இர்பான் பதான், பியூஷ் சாவ்லா மற்றும் விக்ரம் ராஜ்வீர் சிங் ஆகியோரின் ஹாட்ரிக் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல வீரர்கள் அறிமுகமாகி, பெயர் கூட தெரியாத அளவிற்கு மறைந்துள்ளனர். இந்திய அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், ஒரு சில போட்டிகளில் மட்டும் விளையாடி நினைவுகளை அள்ளி கொடுத்த வீரர்கள் ஏராளம். அவர்களில் மிக முக்கியமானவர் முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி. பாகிஸ்தான் மண்ணில் சோயப் அக்தர் பந்தில் சிக்ஸர் அடித்த பெருமை பாலாஜி பெயரில் இன்றளவும் உள்ளது. 2003005 பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது பாலாஜி மிகவும் பிரபலமானார். இந்த சுற்றுப்பயணத்தில் லட்சுமிபதி பாலாஜி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 12 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அந்தவகையில், லட்சுமிபதி பாலாஜியின் பிறந்தநாளான இன்று அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை, அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்ப்போம்.
பிறந்தநாள்:
லட்சுமிபதி பாலாஜி இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 1981ம் ஆண்டு இதே நாளில் பாலாஜி சென்னையில் பிறந்தார். இந்திய அணியின் வலது கை பந்துவீச்சாளராக இருந்து இந்தியாவுக்காக 30 ஒருநாள், 8 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், தனது பெயரில் 71 சர்வதேச விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
முதல் தர போட்டி:
லட்சுமிபதி பாலாஜி 2001-02ல் தமிழ்நாட்டிற்காக முதல் தர போட்டியில் அறிமுகமானார். அவரது முதல் ரஞ்சி சீசனில் பாலாஜி 20.51 என்ற சிறந்த சராசரியில் 37 விக்கெட்களை வீழ்த்தினார். இவரது இந்த சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் இருந்து அழைப்பு வந்தது. இதையடுத்து, கடந்த 2002ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாலாஜி தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், பாலாஜியின் அறிமுகப் போட்டி மிகவும் மோசமாக அமைந்தது. முதல் போட்டியில் 4 ஓவர்கள் மட்டுமே வீசி 44 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை.
ALSO READ: IND vs BAN 2nd Test: 3 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டி.. கான்பூரில் இந்திய அணி இதுவரை எப்படி..?
மறக்க முடியாத அனுபவம்:
2004ஆம் ஆண்டு இந்திய அணி அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி தொடரில் இந்திய அணிக்கு சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார். இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் பதற்றம் காரணமாக நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தப் பயணத்தில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் பிறகு இந்திய அணி விளையாடிய டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. டெஸ்ட் தொடரில் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. இந்த தொடருக்கு பிறகுதான் லட்சுமிபதி பாலாஜி பிரபலமானார்.
லட்சுமிபதி பாலாஜி கடந்த 2004ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த தொடரில் பாலாஜி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிரட்டி இந்திய அணியை வரலாற்று தொடர் வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்த தொடரை பார்த்திருந்த எந்தவொரு இந்திய ரசிகராலும் பாலாஜியையும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியையும் தன் வாழ்நாளில் மறக்க முடியாது. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் பாலாஜி 5 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த தொடரின் போது, பாகிஸ்தான் ரசிகைகள் ஸ்டேடியத்தில் தங்களை திருமணம் செய்து கொள்ளுமாறு முன்மொழிந்தனர்.
Lakshmipathy Balaji hit a six to Shoaib Akhtar and the Next ball his bat got broken off. This funny incident happened in the 2004 INDvsPAK ODI series 5th & final match of the series. This match was also the series decider. pic.twitter.com/xw3wzlLu1z
— FRAUD DEVESH SINGH (@singhdev06) December 19, 2023
அதாவது, இந்த தொடரின் 5வது ஒருநாள் போட்டியில் பாலாஜி விளையாடும்போது ‘ நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா’ என்ற பதாகைகளுடன் ஸ்டேடியத்தில் தங்களது காதலை வெளிப்படுத்தினர். அந்த அளவிற்கு லட்சுமிபதி பாலாஜி அந்த தொடரிலும் சரி, தொடருக்கு பிறகும் சரி இந்தியா – பாகிஸ்தான் என இரு நாடுகளிலும் பிரபலமானார்.
காயம் காரணமாக விலகல்:
யார் கண் பட்டதோ தெரியவில்லை அடுத்த ஆண்டே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்படும் அதே பிரச்சனையை பாலாஜியின் எதிர்கொண்டார். 2005ம் ஆண்டு லட்சுமிபதி பாலாஜி முதுகில் காயம் அடைந்தார். இதன் காரணமாக அவர் அடுத்த 3 ஆண்டுகள் கிரிக்கெட் களத்தில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக பாலாஜி பின் நாளில் தனது வேகம், பந்துவீச்சு என அனைத்து ஸ்டைலையும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், விடாது முயற்சி செய்து மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பினார்.
ALSO READ: MS Dhoni: ஐபிஎல் 2025ல் விளையாட ஆர்வம் காட்டாத தோனி.. விரைவில் ஓய்வு அறிவிப்பா..?
2008ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 24 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். அதில், ஹாட்ரிக் சாதனையும் அடங்கும். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை லட்சுமிபதி பாலாஜி படைத்தார். தொடர்ந்து மூன்று பந்துகளில் ஆல்ரவுண்டர்களான இர்பான் பதான், பியூஷ் சாவ்லா மற்றும் விக்ரம் ராஜ்வீர் சிங் ஆகியோரின் ஹாட்ரிக் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
லட்சுமிபதி பாலாஜி 2008 முதல் 2010ம் ஆண்டு வரை ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும், இதன் பிறகு 2011ம் ஆண்டு முதல் சில ஆண்டு காலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடினார். தொடர்ந்து, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தமிழக அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார்.
2012 டி20 உலகக் கோப்பை:
ஐபிஎல்லில் பாலாஜியின் சிறப்பான ஆட்டத்தால் 2012 டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தார். இதில், இந்தியாவுக்காக களமிறங்கி, அந்த உலகக் கோப்பையில் லட்சுமிபதி பாலாஜி 9 விக்கெட்களை வீழ்த்தினார்.