5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Happy Birthday Yuvraj Singh: புற்றுநோயுடன் போராடிய யுவராஜ் சிங்.. உலகக் கோப்பையில் ரத்த வாந்தியுடன் கலக்கல் ஆட்டம்!

Yuvraj Singh: 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி யுவராஜ் சிங்கின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது. இதன்பிறகு, இந்திய அணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

Happy Birthday Yuvraj Singh: புற்றுநோயுடன் போராடிய யுவராஜ் சிங்.. உலகக் கோப்பையில் ரத்த வாந்தியுடன் கலக்கல் ஆட்டம்!
யுவராஜ் சிங் (Image: twitter)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 12 Dec 2024 06:00 AM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் இன்று (டிசம்பர் 12) தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிக்ஸர் மன்னர் என்று இந்திய ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் யுவராஜ் சிங், இந்திய அணிக்காக பல போட்டிகளில் தனி ஒரு ஆளாக நின்று வெற்றியை தேடி தந்துள்ளார். இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. இந்த இரண்டு உலகக் கோப்பையையும் இந்திய அணி வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். இதன்மூலம், 2 உலகக் கோப்பையை வென்ற ஒரு சில இந்திய வீரர்களில் யுவராஜ் சிங்கும் ஒருவர்.

ALSO READ: IND vs AUS: காபாவில் இதுவரை கலக்கிய இந்தியர்கள் யார் யார்..? கோலி செயல்திறன் எப்படி..?

ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள்:

2007 டி20 உலகக் கோப்பையின்போது, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இந்த நிகழ்வானது 19 செப்டம்பர் 2007ம் ஆண்டு நடந்தது. யுவராஜ் சிங் அடித்த இந்த அடியை இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல, ஸ்டூவர்ட் பிராட்டாலும் இன்று வரை மறக்க மாட்டார். இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை யுவராஜ் சிங் படைத்தார். இந்த போட்டியில் யுவராஜ் சிங் வெறும் 12 பந்துகளில் அரை சதம் அடித்து மொத்தம் 16 பந்துகளில் 58 ரன்கள் குவித்து வரலாறு படைத்தார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். இதன்மூலம், யுவராஜ் சிங் டி20 வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்தார். இந்த சாதனையை எந்தவொரு இந்தியராலும் முறியடிக்கப்பட முடியவில்லை.

புற்றுநோயுடன் போராட்டம்:

2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி வெல்வதற்கு, யுவராஜ் சிங் இல்லாமல் சாத்தியமற்றது என்றே சொல்லலாம். அந்த உலகக் கோப்பையில் மட்டும் யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 362 ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல், 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். 2011 ஒருநாள் உலகக் கோப்பையில் யுவராஜ் சிங்கிற்கு, பலமுறை உடல்நிலை மோசமானது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது வாந்தியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரத்த வாந்தியும் எடுத்தார். அப்போது, இந்திய ரசிகர்களுக்கு தெரியாது இது புற்றுநோய் பாதிப்பால் வந்தது என்று.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியின்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த யுவராஜ் சிங் வாயில் இருந்து ரத்தம் கொட்டியது. வாயில் இருந்து ரத்தம் வழிந்தாலும், போட்டியை விட்டுகொடுக்காத யுவராஜ் சிங் காலிறுதி போட்டியில் 65 பந்துகளில் 57 ரன்கள் குவித்து இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல உதவினார். மேலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பந்துவீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதனால், இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, யுவராஜ் சிங் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய அணி உலகக் கோப்பையை வென்று சில நாட்களுக்கு பிறகு, யுவராஜ் சிங் சிகிச்சைக்காக பாஸ்டன் சென்றார். ஒரு வருடத்திற்கு மேலாக அவருக்கு புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, இந்திய அணிக்கு திரும்பி சில ஆண்டுகள் விளையாடினார். யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது கிரிக்கெட் நிபுணர்கள் பலரும், யுவராஜ் சிங் மறுபடியும் விளையாட வாய்ப்பில்லை என தெரிவித்தனர். இதையெல்லாம், மீண்டும் முறியடித்து களம் கண்டார் சிக்ஸர் மன்னர்.

2017ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி யுவராஜ் சிங்கின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது. இதன்பிறகு, இந்திய அணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காததால், 2019ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இத்தனை சாதனைகள் யுவராஜ் சிங் படைத்தபோதிலும், உரிய மரியாதையான பிரிவிடை யுவிக்கு கிடைக்கவில்லை.

ALSO READ: Year in Search 2024: 2024ல் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் இவரா! கோலி முதலிடம் இல்லையா..?

யுவராஜ் சிங்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

யுவராஜ் சிங் இந்திய அணிக்காக இதுவரை 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 சதங்கள், 22 அரை சதங்கள் உள்பட 8,701 ரன்கள் எடுத்துள்ளார். இது மட்டுமின்றி 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள், 11 அரை சதங்கள் உட்பட 1900 ரன்களும், 58 சர்வதேச டி20 போட்டிகளில் 1177 ரன்களும் எடுத்துள்ளார்.

மேலும், இடது கை சுழற்பந்து வீச்சாளரான யுவராஜ் சிங் ஒருநாள் போட்டிகளில் 111 விக்கெட்டுகளும், டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 28 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

Latest News