Surya Kumar Yadav Birthday: 31 வயதில் அறிமுகம்.. டி20யில் புயல் வேகம்.. சூர்யகுமார் யாதவின் கிரிக்கெட் பயணம்!
Suryakumar Yadav: கடந்த 2010ம் ஆண்டு கிளப் கிரிக்கெட்டை தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார் சூர்யகுமார் யாதவ். கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி விஜய் ஹசாரே டிராபியில் குஜராத்திற்கு எதிராக தனது சொந்த மாநிலமான மும்பை அணிக்காக களமிறங்கினார். இதில், 37 பந்துகளில் 41 ரன்கள் குவித்து அசத்தினார். சில மாதங்களுக்குப் பிறகு, சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை அணிக்காக டி20யில் அறிமுகமானார். அவர் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது.
சூர்யகுமார் யாதவ் பிறந்தநாள்: சர்வதேச கிரிக்கெட்டில் 31வது வயதில் எத்தனை கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர். ஆனால், இந்திய அணிக்காக தாமதமாக அறிமுகமானாலும், இன்று சர்வதேச டி20 கிரிக்கெட்டை ஆண்டு வருகிறார். 2021ம் ஆண்டு தனது 31 வயதில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மிஸ்டர் 360 டிகிரி என்ற அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடித்தார். அப்போது கிடைக்க வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட சூர்யகுமார் யாதவ், சரியாக 3 ஆண்டுக்குள் இந்திய டி20 அணியில் முழு நேர கேப்டனாக பதவி வகித்து வருகிறார். இந்தியாவுக்காக டி20யில் இரண்டாவது அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த சூர்யகுமார் யாதவ், இந்தியாவுக்காக டி20யில் இரண்டாவது அதிவேக அரைசதம் அடித்துள்ளார். இந்தநிலையில், இன்று சூர்யகுமார் யாதவ் பற்றிய முழு தகவல்களை தெரிந்துகொள்வோம்.
ALSO READ: IND vs BAN: தோனியை விட அதிக ரன்கள்.. இந்திய அணிக்கு அச்சுறுத்தல் தரப்போகும் முஷ்பிகுர் ரஹீம்!
சூர்யகுமார் யாதவ் குடும்பம்:
கடந்த 1990ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி மும்பையில் உள்ள நடுத்தர குடும்பத்தில் பிறந்தார் சூர்யகுமார் யாதவ். இவரின் முழுப்பெயர் சூர்யகுமார் அசோக் யாதவ். இவரது தந்தை அசோக்குமார் யாதவ் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் மின் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இல்லத்தரசியான இவரது தாயார் பெயர் ஸ்வப்னா யாதவ். சூர்யகுமார் யாதவுக்கு தினால் யாதவ் என்ற சகோதரியும் உள்ளார்.
சூர்யகுமார் யாதவின் குடும்பம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தது. இவரது தந்தையின் வேலைக்காக காஜிபூர் நகரத்திலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தது குடும்பம். கடந்த 2016ம் ஆண்டு சூர்யகுமார் யாதவ் நடன இயக்குனர் தேவிஷா ஷெட்டி என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
சூர்யகுமார் யாதவ் தனது ஆரம்பக் கல்வியை மும்பையில் உள்ள அணுசக்தி கேந்திரிய வித்யாலயாவில் பயின்றார். அதன் பிறகு மும்பையில் உள்ள அணுசக்தி ஜூனியர் கல்லூரியிலும் பின்னர் மும்பையில் உள்ள பிள்ளை கலை, வணிகம் மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் படித்தார். சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருந்ததால், அதன் பிறகு கிரிக்கெட் பயிற்சியில் சேர்ந்தார்.
ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை:
சூர்யகுமார் யாதவுக்கு 10 வயதாக இருக்கும்போது, அவரது தந்தை அசோக் குமார் தன் மகனின் கிரிக்கெட் ஆர்வத்தை கண்டு செம்பூரில் உள்ள BARC காலனியில் உள்ள கிரிக்கெட் கிளப்பில் சேர்த்தார். அதை தொடர்ந்து தனது 12 வயதில் ஆல்ஃப் வெங்சர்க்கார் அகாடமிக்குச் சென்று, முன்னாள் இந்திய ஜாம்பவான் திலீப் வெங்சர்க்கரிடம் பயிற்சியை தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக, மும்பையில் உள்ள பார்சி ஜிம்கானா மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், சிவாஜி பார்க் ஜிம்கானா கிளப் மற்றும் தாதர் யூனியன் கிளப் போன்ற கிளப்களுக்காக கிளப் கிரிக்கெட் விளையாடி அசத்தினார்.
உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கை:
கடந்த 2010ம் ஆண்டு கிளப் கிரிக்கெட்டை தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார் சூர்யகுமார் யாதவ். கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி விஜய் ஹசாரே டிராபியில் குஜராத்திற்கு எதிராக தனது சொந்த மாநிலமான மும்பை அணிக்காக களமிறங்கினார். இதில், 37 பந்துகளில் 41 ரன்கள் குவித்து அசத்தினார். சில மாதங்களுக்குப் பிறகு, சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை அணிக்காக டி20யில் அறிமுகமானார். அவர் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து 2010ம் ஆண்டு இறுதியில் டெல்லிக்கு எதிரான முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், அந்த போட்டியில் 73 ரன்கள் குவித்தார்.
2011-12 ரஞ்சி டிராபி:
2011-12 ரஞ்சி டிராபியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 9 போட்டிகளில் விளையாடி 68.54 சராசரியில் 754 ரன்கள் குவித்தார். அந்த சீசனில் ஒரிசா அணிக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011-12 சீசனில் U23 அளவில் 1000 ரன்களுக்கு மேல் சூர்யகுமார் யாதவ் குவித்து மிரட்ட, 2014-15 ரஞ்சி சீசனுக்கு முன்னதாக மும்பை அணியின் கேப்டனாக ஆக்கப்பட்டார். ஆனால், கேப்டனாக இருந்தாலும் தனது பேட்டிங்கில் கவனம் சிதறிவிடும் என்று சிறிது நேரத்திலேயே கேப்டன் பதவியில் இருந்து விலகினார். தொடர்ந்து 2020-21 சையது முஷ்டாக் அலி டிராபிக்கான மும்பை அணியின் கேப்டனாகவும் சூர்யகுமார் நியமிக்கப்பட்டார்.
ALSO READ: Virat Kohli: 147 ஆண்டுகளில் முதல்முறை.. மிகப்பெரிய சாதனை படைக்கப்போகும் விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு, 2021ல் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது. மார்ச் 14, 2021 அன்று, இங்கிலாந்துக்கு எதிரான டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சூர்யகுமார் யாதவுக்கு தனது முதல் போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த போட்டியில் களமிறங்கிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து டி20 சர்வதேசப் போட்டியில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சிக்ஸர் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். இதற்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் செய்தது ஏராளம். அதை தொடர்ந்து, 18 ஜூலை 2021 அன்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும், 9 பிப்ரவரி 2023 அன்று, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகம் ஆனார்.
இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் இதுவரை 71 டி20 போட்டிகளில் களமிறங்கி 4 சதம், 20 சதம் உள்பட 2432 ரன்களும், 37 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 4 அரைசதத்துடன் 773 ரன்களும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் களமிறங்கி 8 ரன்களும் எடுத்துள்ளார்.