IND vs PAK, Women’s T20WC: தடுமாறி வெற்றியை கல்லாக்கட்டிய இந்தியா.. பாகிஸ்தான் அணிக்கு எதிராக அசத்தல்! - Tamil News | IND vs PAK, Women's T20WC: india defeated pakistan by 6 wickets in womens t20 world cup | TV9 Tamil

IND vs PAK, Women’s T20WC: தடுமாறி வெற்றியை கல்லாக்கட்டிய இந்தியா.. பாகிஸ்தான் அணிக்கு எதிராக அசத்தல்!

Updated On: 

06 Oct 2024 19:02 PM

Women T20 World Cup 2024: 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷெபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் எவ்வளவோ முயற்சித்தும் பவுண்டரியை பந்து தொடவில்லை. இதன் காரணமாக இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்க இந்திய அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

IND vs PAK, Womens T20WC: தடுமாறி வெற்றியை கல்லாக்கட்டிய இந்தியா.. பாகிஸ்தான் அணிக்கு எதிராக அசத்தல்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (Image: AP)

Follow Us On

2024 மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இன்று இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் துபாயில் உள்ள துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. அதன்படி, முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இதில், பாகிஸ்தான் மோசமான தொடக்கத்தை பெற்று, அதன் பிறகு அந்த அணியால் மீள முடியவில்லை. பாகிஸ்தான் மகளிர் அணி ஒரு ரன் எடுத்திருந்தபோதே 1 விக்கெட்டை இழந்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனை குல் ஃபிரோஷாவை ரேணுகா சிங் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இதையடுத்து மூன்றாவதாக களமிறங்கிய சித்ரா அமீன் 8 ரன்களிலும், தொடக்க ஆட்டக்காரர் முனிபா அலி 17 ரன்களுடனும் அடுத்தடுத்து அவுட்டாகி நடையை கட்டினர். தொடர்ந்து அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அலியா ரியாஸ் 4 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை விட, பாகிஸ்தான் அணி 12.1 ஓவர்களில் 52 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ALSO READ: MS Dhoni: ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா இல்லையா? அனுமதிக்காக மும்பை செல்லும் சிஎஸ்கே நிர்வாகிகள்!

கேப்டன் பாத்திமா சனா ஏமாற்றம்:

பாகிஸ்தான் அணிக்கு நல்ல ஸ்கோரை எடுத்து கொடுக்க வேண்டும் என்று களமிறங்கிய பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவும் சிறப்பாக எதையும் செய்யவில்லை. பாத்திமா சனா 8 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, துபா ஹசனாவும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக நிடா தார் 34 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி உள்பட 28 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. சையதா அரூப் 17 பந்துகளை சந்தித்து 1 பவுண்டரி உதவியுடன் 14 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கலக்கிய இந்திய பந்துவீச்சாளர்கள்:

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அருந்ததி 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளும், ஸ்ரேயங்கா 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இது தவிர, ரேணுகா சிங், தீப்தி சர்மா மற்றும் ஆஷா ஷோபனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷெபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் எவ்வளவோ முயற்சித்தும் பவுண்டரியை பந்து தொடவில்லை. இதன் காரணமாக இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்க இந்திய அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தொடர்ந்து இந்திய அணி 18 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்மிருதி மந்தனா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ALSO READ: Sleeping Benefits: தினசரி 8 மணி நேரம் தூக்கம் ஏன் முக்கியம்? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?

அடுத்தடுத்து விக்கெட்கள்:

இதையடுத்து, ஷெபாலி வர்மாவுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை மீட்டெடுக்க தொடங்கினார். ஷெபாலி 24 ரன்களும், ஜெமிமா 13 ரன்களும் எடுத்திருந்தபோது இந்திய அணி 50 ரன்களை கடந்தது. அப்போது இந்திய அணிக்கு 60 பந்துகளில் 56 ரன்கள் தேவையாக இருந்தது.

இருவரும் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோது ஷெபாலி வர்மா 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆலியா ரியாஸிடம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்ப, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய உள்ளே வந்தார். இந்தியா 80 ரன்களை தொட்டபோது, ஜெமிமா மற்றும் ரிச்சா கோஷை அடுத்தடுத்த பந்துகளில் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா அவுட்டாக்க, அப்போது இந்திய அணிக்கு 24 பந்துகளில் 22 ரன்கள் தேவையாக இருந்தது.

தொடர்ந்து, ஹர்மன்ப்ரீத்துடன் தீப்தி சர்மா இணைந்து இந்திய அணிக்கு வெற்றியை தேட உதவி செய்தார். 8 பந்துகள் மீதம் இருந்த நிலையில் இந்திய அணிக்கு 2 ரன்கள் தேவை என்று இருந்தபோது, ஹர்மன்ப்ரீத் கவுர் காயம் காரணமாக வெளியேற சஞ்சனா முதல் பந்தே பவுண்டரி அடித்து வெற்றியை தேடி தந்தார். இதன்மூலம், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2024 டி20 மகளிர் உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

 

பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள காலிஃபிளவர்..!
உடலுக்கு ஊட்டச்சத்துகளை தாராளமாக தரும் புளி..
தூங்குவதற்கு முன் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்
நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
Exit mobile version