IND vs AUS: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா..!
ஐசிசி 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்றின் குரூப் 1 பிரிவில், கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதின. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு செயின்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை செய்த நிலையில், 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
டி 20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகள் முடிவுற்று சூப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில் டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அதிரடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. விராட் கோலி 5 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், ரன்கள் எதுவும் அடிக்காமல் டக் அவுட்டானார். மறுமுனையில் ருத்ர தாண்டவம் ஆடிய ரோகித் சர்மா 41 பந்துகளில், 8 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் என 92 ரன்களை விளாசினார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 15 ரன்கள் எடுத்திருந்த போது ஜோஷ் ஹேசல்வுட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
Also Read: ZIM vs IND: ஜிம்பாவேவுக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு.. சுப்மன்கில் கேப்டனாக நியமனம்..!
சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து மிட்செல் ஸ்டார்க் பந்தில் அவுட்டனார். அடுத்து களம் இறங்கிய சிவம் தூபே 22 பந்துகளில் 28 ரன்கள் என டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கடைசி வரை ஹர்திக் பாண்டியா ஜடேஜா இருவரும் களத்தில் ஸ்கோரை உயர்த்துவதற்காக போராடினர். ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 27 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 5 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது.
இந்திய அணி நிர்ணயித்த இலக்கான 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடியது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவிற்கு நல்ல தொடக்கத்தை அளித்தனர். ஆனால் டேவிட் வார்னர் 6 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே எடுத்து அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் சூரிய குமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மறுமுனையில் டிராவிஸ் ஹெட் 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகள் என 76 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடைசியில் பும்ரா பந்து வீச்சில் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
Also Read: Watch Video : கேட்ச் பிடிக்கும் ஆர்வம்.. பலமாக மோதிக்கொண்ட தென் ஆப்பிரிக்க வீரர்கள்..!
டேவிட் வார்னருக்கு பிறகு களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் என 37 ரன்களை சேர்த்தார். இறுதியில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் அக்சர் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த கிளைன் மேக்ஸ்வெல் 12 பந்துகளில் 20 ரன்களும், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 2 ரண்களும், தீம் டேவிட் 15 ரண்களும் மேத்யூ வேட் 1 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பேட் கம்மின்ஸ் 11 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி 2 -ல் இங்கிலாந்தை இந்திய அணி எதிர்கொள்கிறது.