Indian Olympic History: ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம் எப்போது..? இதுவரை எத்தனை பதக்கங்கள்? முழு விவரம்!
Paris Olympics 2024: 1900 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் முதல் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 வரை, இந்தியா இதுவரை 25 கோடைகால ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளது. இதில், மொத்தம் 1,218 இந்திய விளையாட்டு வீரர்கள் அதிகாரப்பூர்வமாக பங்கேற்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் 2020 வரை இந்தியா 35 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 10 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கங்கள், 16 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
ஒலிம்பிக்கில் இந்தியா: ஒலிம்பிக்கின் வரலாறு என்பது எவ்வளவு பழமையானதோ, அதே அளவிற்கு மிகவும் பழமையானது ஒலிம்பிக்கில் இந்தியாவின் வரலாறும். முதல் ஒலிம்பிக் போட்டியானது கடந்த 1896ம் ஆண்டு நடைபெற்றபோது, இந்தியா அதில் பங்கேற்கவில்லை. இதில் ஒன்பது விளையாட்டுகள் மட்டுமே விளையாடப்பட்டன. அதே நேரத்தில் கடைசியாக நடந்த டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. இந்தநிலையில், வருகின்ற ஜூலை 26ம் தேதி முதல் ஒலிம்பிக்கின் 33 வது பதிப்பான பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடங்க இருக்கிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,672 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இப்படியான சூழ்நிலையில், இந்தியா எப்போது முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றது..? இந்தியா தனது முதல் பதக்கத்தை எப்போது வென்றது என்ற முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவின் முதல் ஒலிம்பிக்:
ஒலிம்பிக்கில் இந்தியாவின் வரலாறு 1900ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலிருந்து தொடங்கியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் ஆங்கிலேயரான நார்மன் பிரிட்சார்ட் என்பவர் பங்கேற்றார். இவர் 23 ஜூன் 1875ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாகாணத்தின் உள்ள கல்கத்தாவின் (தற்போதைய கொல்கத்தா) பிறந்தவர்.
1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் 200 மீட்டர் தடை ஓட்டத்தில் நார்மன் பிரிட்சார்ட் பங்கேற்று வெள்ளி பதக்கத்தை வென்றிருந்தார். அதேபோல், 200 மீட்டர் ஓட்டபந்தயத்திலும் பங்கேற்று இந்தியாவிற்கு 2வது வெள்ளி பதக்கத்தை வென்று கொடுத்தார். இது இந்தியாவிற்காக ஆங்கிலேயர் ஒருவர் வென்று கொடுத்த பதக்கங்கள் ஆகும்.
இந்தியாவின் முதல் தங்க பதக்கம்:
இந்தியா தனது முதல் அதிகாரப்பூர்வ பதக்கத்தை 1928ம் ஆண்டு நடைபெற்ற ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்கில் வென்றது. இந்த அதிகாரப்பூர்வ பதக்கத்தை வென்றது இந்திய ஹாக்கி அணி. அந்த பதக்கமும் தங்கம். இந்த இந்திய ஹாக்கி அணியை தியான் சந்த் வழிநடத்தி, இந்தியாவிற்கு முதல் ஒலிம்பிக் தங்க பதக்கத்தை வென்று கொடுத்தார். இதற்குப் பிறகு, 1932 மற்றும் 1936 இல் இந்தியாவும் ஹாக்கியில் தங்கப் பதக்கங்களை வென்றது.
ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா வென்ற பதக்கங்கள்..?
1900 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் முதல் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 வரை, இந்தியா இதுவரை 25 கோடைகால ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளது. இதில், மொத்தம் 1,218 இந்திய விளையாட்டு வீரர்கள் அதிகாரப்பூர்வமாக பங்கேற்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் 2020 வரை இந்தியா 35 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 10 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கங்கள், 16 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இந்த 25 ஒலிம்பிக் போட்டிகளில், டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் மட்டும்தான் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்களை வென்றுள்ளது. ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 8 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இதன் மூலம் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளது.
ஒலிம்பிக்கில் இந்தியா எப்போது, எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது?
ஒலிம்பிக் – பங்கேற்ற வீரர்கள் – வென்ற பதக்கம் – தரவரிசை
- பாரிஸ் 1900 – 1 – 2 – 17
- ஆண்ட்வெர்ப் 1920 – 5 – NIL – NIL
- பாரிஸ் 1924 – 13 – NIL – NIL
- ஆம்ஸ்டர்டாம் 1928 – 22 – 1 – 23
- லாஸ் ஏஞ்சல்ஸ் 1932 – 18 – 1 – 19
- பெர்லின் 1936 – 27 – 1 – 20
- லண்டன் 1948 – 86 – 1 – 22
- ஹெல்சின்கி 1952 – 64 – 2 – 26
- மெல்போர்ன் 1956 – 59 – 1 – 24
- ரோம் 1960 – 45 – 1 – 32
- டோக்கியோ 1964 – 53 – 1 – 24
- மெக்சிகோ 1968 – 25 – 1 – 42
- முனிச் 1972 – 46 – 1 – 43
- மாண்ட்ரீல் 1976 – 26 – NIL – NIL
- மாஸ்கோ 1980 – 52 – 1 – 23
- லாஸ் ஏஞ்சல்ஸ் 1984 – 47 – NIL – NIL
- சியோல் 1988 – 43 – NIL – NIL
- பார்சிலோனா 1992 – 46 – NIL – NIL
- அட்லாண்டா 1996 – 40 – 1 – 71
- சிட்னி 2000 –44 – 1 – 71
- ஏதென்ஸ் 2004 – 73 – 1 – 65
- பெய்ஜிங் 2008 – 57 – 3 – 50
- லண்டன் 2012 – 83 – 6 – 55
- ரியோ 2016 – 117 – 2 – 67
- டோக்கியோ 2020 – 126 – 7 – 48