IND vs SA Pitch Report: பார்படாஸ் மைதானத்தில் உலக கோப்பை இறுதிப்போட்டி … மைதானம் யாருக்கு சாதகம்..!
INDIA vs SOUTH AFRICA ICC T20 world cup 2024 Final Pitch Report: நடப்பு 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த உலக கோப்பை தொடரில் முதன்முறையாக 20 அணிகள் பங்கேற்றன. இதில் முதல் 17 நாட்கள் லீக் சுற்று, சூப்பர் 8 சுற்று மற்றும் அரையிறுதிப் போட்டிகள் முடிவுற்று இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் பார்படாஸ் மைதானத்தில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து காணலாம்.
டி20 உலக கோப்பை போட்டிகள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் இறுதிபோட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், பார்படாஸ் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. உலக கோப்பை தொடரில், இந்திய அணி கடைசியாக 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு 10 வருடங்கள் கழித்து தகுதிபெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக தகுதிபெற்றுள்ள நிலையில், இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகாமாகியுள்ளது. இரு அணிகளும் இந்த தொடரில் நடைபெற்ற ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலக கோப்பை தொடர் ஆரம்பிக்கப்பட்ட 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சீசனில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. பின்னர் 2 முறை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று கோப்பையை கைப்பற்றாமல் தோல்வியை தழுவியது. இந்த தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டி20 உலக கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள தென் ஆப்பிரிக்க வீரர்களும் முதல் முறையாக கோப்பையை வென்றாக வேண்டும் என்று தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இறுதிப்போட்டி நடைபெறும் இந்த பார்படாஸ் மைதானத்தில் இதுவரை 32 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன.இதில், முதலில் பேட்டிங் செய்த அணிகள் 19 முறையும், 2 வது பேட்டிங் செய்த அணிகள் 11 முறையும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில், முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே இன்றைய போட்டி சாதகமாக கூறப்படுகின்றன. இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்த மைதானத்தின் அதிகபட்ச ஸ்கோராக வெஸ்ட் இண்டீஸ் அணி 224 ரன்களை எடுத்த நிலையில், குறைந்தபட்சமாக, முதலாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்ரிக்க அணிக்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் அணி 80 ரன்களை மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.
வானிலை அறிக்கையின்படி இறுதிப்போட்டி நடைபெற உள்ள இன்று, பகுதியில் நாள் முழுவதும் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை ஓவர்கள் குறைக்கப்பட்டும் கூட போட்டியை நடத்த முடியாமல் போனால், ஐசிசி விதிகளின்படி இறுதிப்போட்டிக்காக ரிசர்வ் டே அன்று போட்டி நடைபெறும். நாளை அதிக அளவிலான மழை பெய்து போட்டி நடைபெறாமல் இருந்தால், ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்படாஸில் அமைந்துள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் செயலியில் நேரடியாக கண்டுகளிக்கலாம்.