IPL 2024 KKR Vs SRH :10 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றிய KKR.. குவியும் வாழ்த்து..!
KKR: சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி வெற்றி வாகை சூடியது. இதுவரை நடைபெற்ற 17 சீசன்களில் 3 முறை கோப்பையை கொல்கத்தா அணி வென்றுள்ளது. அதிகமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற 3-வது என்ற பெருமையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெற்றுள்ளது . ஐபிஎல் ரசிகர்கள் இணையத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடப்பு 2024 ஆம் ஆண்டு, 17 வது ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 10 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா அணி. 2018 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான ஐபிஎல் சீசன்களில் குவாலிஃபையர் 1 போட்டியில் வென்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் அணிகள் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2012, 2014 ஆம் ஆண்டுகளில் கவுதம் கம்பீர் தலைமையில் சாம்பியன் கோப்பையை வென்றது. அதனைத்தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி 3 முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. கவுதம் கம்பீர் இந்த சீசனில் கொல்கத்தா அணியை வழிநடத்தி மெண்டாராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட் கம்மின்ஸ்
ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை படைத்து வந்த சன்ரைசர்ஸ் அணி, இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியிடம் வீழ்ந்தது. இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையில் கோப்பையை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இதன் மூலம் ஐபிஎல் ஏலத்தில் பேட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் அணிக்கு வாங்கப்பட்டார். மேலும் அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். ஆரம்பம் முதலே அணியை சிறப்பாக வழிநடத்திய பேட் கம்மின்ஸ் இறுதிபோட்டி வரைக்கும் அழைத்து வந்தார். ஐசிசி கோப்பையோடு ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையை புரிவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில், சன்ரைசர்ஸ் அணி தோல்வியை தழுவியது. இதற்கு முன்னர் ஐசிசி கோப்பையோடு ஐபிஎல் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை எம்.எஸ். தோனி மட்டுமே படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலோசகராக கவுதம் கம்பீர்
2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கொல்கத்தா அணியின் கேப்டனாக 3 முறை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். இதில் கவுதம் கம்பீர் 2 முறை கோப்பையை பெற்றுக்கொடுத்துள்ளார். அதேப்போல் கொல்கத்தா அணியின் ஆலோசகராக 3 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து சென்றுள்ளார். நடப்பு 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனிலும் கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டு மீண்டும் கொல்கத்தா அணியை வெற்றிபெறச்செய்துள்ளார்.
குவியும் வாழ்த்து
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு 17 வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களும், அணியின் நிர்வாகமும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் ரசிகர்களும், கொல்கத்தா அணியின் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .