ஐபிஎல் 2024: ப்ளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை.. தொடர் தோல்விக்கு காரணம் என்ன?
நடப்பு ஐபிஎல் சீசனில் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் தொடரிலிருந்து வெளியேறும் முதல் அணியாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணி உள்ளது. மும்பை அணியின் மோசமான ஆட்டமே இந்த தோல்விகளுக்கு காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
17 வது சீசன் ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட் 5 ரன்களிலும், சுனில் நரைன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து ரகுவன்சி 13 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் – மனீஷ் பாண்டே இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அரைசதம் அடித்து 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ரசல் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். 19.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த கொல்கத்தா 169 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
மிகவும் குறைவான ஸ்கோரை நோக்கி, 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா (11), இஷான் கிஷன் (13), திலக் வர்மா (4), நமன் திர் (11), நேஹல் வதேரா (6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
கேப்டன் பாண்டியா (1) வந்த வேகத்தில் நடையை கட்டினார். இதனால் மும்பை அணி 76 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், சூர்யகுமார் யாதவ், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அரைசதம் அடித்த அவர், 56 ரன்களில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட்டும் 24 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை அணி 18.5 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தை தக்கவைத்தது. கொல்கத்தா தரப்பில் மிட்சேல் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி, 3 வெற்றி, 8 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அத்துடன், மும்பை அணியின் பிளே ஆப் கனவும் இன்றைய தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி இந்த சீசனில் லீக் தொடரிலேயே, அதுவும் முதல் அணியாக வெளியேறியது. இது மும்பை அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணியிலுள்ள வீரர்கள் ஆரம்பம் முதலே சரியாக விளையாடதது முக்கிய காரணமாக கூறப்பட்ட நிலையில், அணியில் ஒற்றுமை இல்லை என்பதே தோல்விக்கு முதல் காரணமாக அமைகிறது. ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை யாரும் ஏற்றுக்கொள்ளமல் இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது.