Pakistan Cricket Board: பாகிஸ்தான் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்.. 6 மாதத்தில் விலகிய கேரி கிர்ஸ்டன்.. காரணம் என்ன?
Pakistan Cricket: பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக விரும்பவில்லை என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடர்களுக்கு தயாராக வேண்டும் என்று முழுமையான திட்டங்களை வகுத்திருந்தார். ஆனால் பிசிபியின் கட்டாயத்தின் பேரில் கேரி கிர்ஸ்டன் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2 -1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதை தொடர்ந்து, பாகிஸ்தான் அணி இன்னும் சில நாட்களில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்கான அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டநிலையில், முகமது ரிஸ்வான் முதல் முறையாக பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்த மற்றொரு சர்ச்சைக்குரிய முடிவு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் கேரி கிர்ஸ்டன் விலகிய நிலையில், அவரது முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடனடியாக ஏற்றுகொண்டது. இதையடுத்து, தற்போது கேரி கிர்ஸ்டனுக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி, பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கில்லெஸ்பி ஏற்கனவே பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
ALSO READ: IND vs AUS: இந்தியாவில் அதிக டெஸ்ட் தொடரை வென்ற அணி எது..? முழு பட்டியல் இதோ!
என்ன காரணம்..?
முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் கேரி கிர்ஸ்டன் ராஜினாமா செய்த சில நிமிடங்களில் அதை ஏற்றுக்கொண்டதாக பாகிஸ்தான் வாரியம் தெரிவித்தது. மேலும், அடுத்த சில நிமிடங்களிலேயே பாகிஸ்தான் வாரியத்தால் கில்லெஸ்பி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் வாரியத்தை இந்த அதிரடி மற்றும் திடீர் முடிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கேரி கிர்ஸ்டன் ராஜினாமா செய்ததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொடுத்த அழுத்தமே காரணம் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
The Pakistan Cricket Board today announced Jason Gillespie will coach the Pakistan men’s cricket team on next month’s white-ball tour of Australia after Gary Kirsten submitted his resignation, which was accepted.
— Pakistan Cricket (@TheRealPCB) October 28, 2024
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தலைமை பயிற்சியாளர் தேர்வு குறித்த தகவலை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தது. அதில், “ முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி இருப்பார்.” என்று தெரிவித்திருந்தது.
6 மாதங்களில் பதவி விலகல்:
கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பதவியேற்ற, கிர்ஸ்டனின் பதவிக்காலம் வெறும் ஆறு மாதங்களில் முடிவடைந்தது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி, கிர்ஸ்டனின் பயிற்சியின் கீழ் சிறப்பாக செயல்படவில்லை. முதல் சுற்றில் அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது. அதன்பிறகு, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்தது. இதையடுத்து, கேரி கிர்ஸ்டன் மற்றும் பாகிஸ்தான் வாரியம், வீரர்களுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதாக வதந்திகள் பரவின. தற்போது அந்த வதந்திகளுக்கு உண்மை என தெரியவந்துள்ளது.
அவசர முடிவு ஏன்..?
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக விரும்பவில்லை என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடர்களுக்கு தயாராக வேண்டும் என்று முழுமையான திட்டங்களை வகுத்திருந்தார். ஆனால் பிசிபியின் கட்டாயத்தின் பேரில் கேரி கிர்ஸ்டன் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அதாவது, யிற்சியாளரிடம் இருந்து அணியை தேர்வு செய்யும் அதிகாரத்தை பாகிஸ்தான் வாரியம் பறித்ததால், இந்த பிரச்சனை ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.
முன்னதால பிசிபியின் முடிவு குறித்து பேசிய ஜேசன் கில்லெஸ்பி, “இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, எந்த வீரரையும் தேர்வு செய்ய தனக்கு உரிமை இல்லை என்றும், எனவே வீரர்கள் தேர்வு குறித்து எதுவும் கூற முடியாது” என்றும் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.