Exclusive: பாரா ஒலிம்பிக் வாலிபால்.. கெத்து காட்டும் தமிழக வீரர் நிபில் கிப்சன்!

Tamil Nadu Player: தமிழகத்தின் தென்கோடியில் அமைந்திருக்கும் இராமேஸ்வரத்தில் பிறந்த இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச கைப்பந்து போட்டியில் விளையாட இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார். மேலும் பாரா ஒலிம்பிக் போட்டியில் விளையாடவும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Exclusive: பாரா ஒலிம்பிக் வாலிபால்.. கெத்து காட்டும் தமிழக வீரர் நிபில் கிப்சன்!

நிபில்‌ கிப்சன் (Photo Credit: Nipil Kipson)

Published: 

03 Dec 2024 09:54 AM

இராமேஸ்வரம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தான். கடைக்கோடியான இராமேஸ்வரத்தில் பிறந்து இந்தியாவிற்கே பெருமை சேர்த்த அப்துல் கலாம் பிறந்த அதே மண்ணில் மீண்டும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார் கைப்பந்து வீரரான நிபில் கிப்சன். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் பாம்பன் பகுதியைச் சார்ந்த மீனவ தம்பதி அனிஸ்டஸ் – மென்லின் ப்ளோரா. இவர்களது மகன் நிபில் கிப்சன். 20 வயதான இவர் செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி. இவரால் கேட்கவோ பேசவோ இயலாது. சென்னை மாநிலக் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடலோரங்களில் நண்பர்களோடு கைப்பந்து விளையாட தொடங்கிய இவர் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் இந்திய அணியில் விளையாடி வருகிறார்.

கடந்த ஜூன் மாதம் ஜப்பானில் நடந்த சாம்பியன்ஷிப் ட்ராபி போட்டியில் தமிழகத்தில் இருந்து இந்திய அணியில் பங்கேற்று கைப்பந்து போட்டியில் விளையாடினார். இதைத்தொடர்ந்து ஈரானில் நடக்க இருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் விளையாட இந்தியா அணிக்கு தேர்வாகியுள்ளார். இவரை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் கலோன் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர். இவர் தன் தாயின் உதவியோடு TV9 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி…

வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள்:

ஆரம்ப கட்டத்தில் நிபில் கிப்சன் பீச் பாய்ஸ் வாலிபால் கிளப்பில் விளையாடி வந்தார். கிளப்பில் விளையாடுபவர்கள் யாரும் என் மகனை மாற்றுத்திறனாளி போல் நடத்தவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்லிக் கொடுப்பது சற்று சிரமம். ஆனால் சிரமம் எதையும் பொருட்படுத்தாமல் முழுவதுமாக என் மகனுக்கு கைப்பந்து நுட்பங்களை கற்றுக் கொடுத்தார்கள். மேலும் என் மூத்த மகன் ஜோஹிமும் கைப்பந்து வீரர் தான். தன் தம்பிக்காக மாற்றுத் திறனாளிகள் செய்கை மொழியை பயின்று கொண்டு கைப்பந்து நுட்பங்களை செய்கை மொழி மூலமாக தம்பிக்கு சொல்லிக் கொடுத்தார்.

Also Read: Tamil TV9 Exclusive : 50 ஆண்டுகளாக மக்கள் சேவை.. ஆலங்குடி ‘515’ கணேசனின்‌ கதை!

சிறுவயதில் இருந்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசும் சான்றிதழும் பெற்றுள்ளார். கைப்பந்து மட்டுமின்றி உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கபாடி, ஓட்டப்‌ பந்தயம் என அனைத்து விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினாலும் பீச் பாய்ஸ் வாலிபால் கிளப் மற்றும் தன் அண்ணனின் முயற்சியால் இந்திய மாற்றுத் திறனாளிகள் கைப்பந்து அணிக்கு தேர்வாகியுள்ளார் என்று தன் மகனின் வளர்ச்சிக்கு காரணமாய் இருந்தவர்களை நன்றியுடன் நினைவு கூறினார் நிபில் கிப்சனின் தாய் மென்லின் ப்ளோரா.

இந்திய அணியில் தேர்வு:

நிபில் கிப்சனின் சாதனையை குறித்து பேசிய சகோதரர் ஜோஹிம் “என் தம்பிக்கு சிறுவயதில் முதல்‌ விளையாட்டில் அதிக ஆர்வம். எனவே அவன் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக அவனுக்கு தொடர்ந்து பயிற்சிகளை கொடுத்து வந்தேன். அதன் பலனாக கடந்த மாதம் ஜூனில் ஜப்பானில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் ட்ராபி போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று கைப்பந்து போட்டியில் விளையாடினார். இதனைத் தொடர்ந்து ஈரானில் நடக்க இருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் இந்திய அணியில் விளையாட உள்ளார். தற்பொழுது ஈரானில் நிலவி வரும் அசாதாரணமற்ற சூழ்நிலையால் அந்த போட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து நடக்க இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கைப்பந்து போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளார்.” என்று பெருமிதத்தோடு பகிர்ந்து கொண்டார்.

Also Read: Exclusive: மழைக்காலத்தில் காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி..? ஹோமியோபதி டாக்டர் ரெஹானா விளக்கம்!

தாய் நாட்டிற்கு பெருமை:

“எனக்கு என் அண்ணன் கொடுத்த உத்வேகமும் பீச் பாய்ஸ் வாலிபால் கிளப் கொடுத்த நம்பிக்கையும் தான் என்னை இத்தனை தூரம் அழைத்துச் சென்றிருக்கிறது. இந்திய நாட்டுக்காக விளையாட இருக்கிறேன் என்ற பெருமை என்னை இன்னும் சிறப்பாக செயல்பட வைக்கிறது. நிச்சயம் என் திறமை மூலம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்” என்று பூரிப்புடன் செய்கை மொழியில் தெரிவிக்க அதை அவரின் தாய் மென்லின் ப்ளோரா நமக்கு விளக்கினார். மேலும் தன் மகனை இத்தனை தூரம் ஆளாக்கிய பீச் வாலிபால் கிளப்பிற்கு முறையான விளையாட்டு மைதானம் இல்லை என்றும் மென்லின் ப்ளோரா கவலை தெரிவித்தார்.

பாம்பனில் வங்கக்‌‌ கரையோடு விளையாடி திரிந்த கால்கள் தற்பொழுது இந்திய தேசத்திற்காக விளையாட தயாராகி வருகிறது. மாற்றுத்திறனாளி என முடங்கி விடாமல் மாற்றத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இவருக்கு டிவி9 நிறுவனம் சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?