Paris Olympics 2024: இன்று பிரமாண்டமாக தொடங்கும் ஒலிம்பிக்.. தொடக்க விழாவில் என்னென்ன நடக்கும்..? முழு விவரம்!
Olympic Games: பாரிஸ் ஒலிம்பிக் 2024 இன் தொடக்க விழா இந்திய நேரப்படி ஜூலை 26 ஆம் தேதி (இன்று) இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. பாரிஸ் ஒலிம்பிக் 2024 இன் தொடக்க விழா இன்று தொடங்க இருந்தாலும், பல போட்டிகள் இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் என்ன நடக்கும் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024: உலகின் முக்கிய நகரங்களில் ஒன்றான பாரிஸில் இம்முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஜூலை 26ம் தேதியான இன்று தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்வதற்காக உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் மொத்தம் 329 விளையாட்டு போட்டிகளில் விளையாடி பதக்கங்களுக்காக போட்டியிடுகிறார்கள். இந்தநிலையில், பாரிஸ் ஒலிம்பிக் 2024 இன் தொடக்க விழா இந்திய நேரப்படி ஜூலை 26 ஆம் தேதி (இன்று) இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. பாரிஸ் ஒலிம்பிக் 2024 இன் தொடக்க விழா இன்று தொடங்க இருந்தாலும், பல போட்டிகள் இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் என்ன நடக்கும் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தொடக்க விழா எப்போது தொடங்குகிறது..?
பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியின் தொடக்க விழா பிரான்ஸ் நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவின் நேரம் பிரான்ஸின் நேரத்தை விட மூன்றரை மணி நேரம் பின்னாடி என்பதால், இந்திய நேரப்படி இரவு 11 மணி தொடங்குகிறது. பிரான்ஸ் நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஒலிம்பிக் தொடக்க விழா, சுமார் 3 முதல் 3.5 மணி நேரம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய முறையில் இந்த முறை அணிவகுப்பு:
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடக்க விழா, இந்தாண்டு செய்ன் ஆற்றில் நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் ஒலிம்பிக் தொடக்க விழாவானது ஸ்டேடியத்தில் நடைபெறாமல், நதிக்கரையில் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில், விளையாட்டு வீரர்கள் வழக்கமாக ஒரு மைதானத்தில் அணிவகுத்து, அங்கு அவர்கள் தங்கள் நாட்டின் கொடியை தங்கள் கைகளில் பிடித்து தங்களை அறிமுகம் செய்து கொள்வர். ஆனால், இந்தமுறை ஒவ்வொரு நாட்டிலிருந்தும் விளையாட்டு வீரர்கள் படகில் கேமராக்கள் பொருத்தப்பட்ட படகில் ஏறுவார்கள். படகுப் பயணம் ஆஸ்டர்லிட்ஸ் பாலத்திலிருந்து தொடங்கி 4 மைல் தொலைவில் ஈபிள் டவருக்கு அருகிலுள்ள ட்ரோகாடெரோவில் முடிவடையும். இந்த பயணம் முடிவடைந்தது, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உரையுடன் ஒலிம்பிக் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா எத்தனையாவது நாடாக அறிமுகம் ஆகிறது..?
தொடக்க விழாவில் எந்த நாடு எந்த வரிசையில் வர வேண்டும் என்பது அகர வரிசைப்படி ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் தீர்மானிக்கப்படும். இந்த முறை பிரான்ஸில் நடத்தப்படுவதால் தேசிய மொழியின்படி செய்யப்பட்டுள்ளதால், தொடக்க விழாவின் போது இந்திய அணியின் நுழைவு 84வது இடத்தில் அறிமுகம் ஆகும் என தெரிகிறது.
இந்தியாவின் கொடியை ஏந்த போகிறவர்கள் யார்..?
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து உட்பட 117 விளையாட்டு வீரர்களைக் கொண்ட குழு அறிமுக விழாவில் நடை பயிலும். பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து மற்றும் டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் ஆகியோர் இந்தியாவின் கொடி ஏந்தி இந்திய அணியை வழிநடத்துவார்கள்.
தொடக்க விழாவை எங்கே காண்பது..?
பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா ஸ்போர்ட்ஸ் 18 மூலம் இந்தியாவில் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. மொபைல் ஆப் மூலம் தொடக்க விழாவை பார்க்க விரும்புவோர் ஜியோசினிமாவில் நேரலையில் காணலாம்.
Also read: Paris Olympics 2024: ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கப் பதக்கம்.. உலக சாதனை படைத்த மைக்கேல் பெல்ப்ஸ்!