5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Happy Birthday Ashwin: காயத்தால் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின்.. கிரிக்கெட்டில் மாயாஜால மன்னன் ஆன கதை!

R Ashwin: அஸ்வின் கிரிக்கெட் விளையாட தொடங்கும்போது தொடக்க வீரராகவும், நடுத்தர வேகப்பந்து வீச்சாளராகவும் தனது பயணத்தை தொடங்கினார். 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியின்போது ஒருமுறை அஸ்வினுக்கு பந்து பட்டு அடிப்பட்டது. இதன் காரணமாக, அஸ்வினால் சில மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மருத்துவர்கள் அஸ்வினை கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று கூறவே, அஸ்வினின் தாயார் அவரை வேகப்பந்து வீச்சாளரில் இருந்து சுழற்பந்து வீச்சாளராக மாற சொன்னார்.

Happy Birthday Ashwin: காயத்தால் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின்.. கிரிக்கெட்டில் மாயாஜால மன்னன் ஆன கதை!
ரவிச்சந்திரன் அஸ்வின் (Image: Gareth Copley/Getty Images)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 17 Sep 2024 11:06 AM

இந்திய அணியின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 1986ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி சென்னையில் பிறந்தார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அஸ்வினின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய கிரிக்கெட்டில் அவர் செய்த சாதனை மற்றும் அஸ்வின் எப்படி தொடக்க பேட்ஸ்மேனில் இருந்து சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்தார். விபத்தால் மாறிய வாழ்க்கை இன்று கிரிக்கெட் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக அஸ்வினை உருவெடுக்க செய்தது. இந்தநிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினின் கிரிக்கெட் பயணம், குடும்பம் உள்ளிட்ட விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

ALSO READ: IND vs BAN: “இந்திய அணியை வெற்றி பெற விட மாட்டோம்”- சவால் விட்ட வங்கதேச கேப்டன் சாண்டோ!

குடும்ப வாழ்க்கை:

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 1986 செப்டம்பர் 17ம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். அஸ்வினின் தந்தை பெயர் ரவிச்சந்திரன், தாயார் பெயர் சித்ரா ஆகும். அஸ்வினின் தந்தை கிரிக்கெட் பிரியர் என்பதால் அஸ்வினை கிரிக்கெட் வீரராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கிரிக்கெட் விளையாட தூண்டினார். கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி அஸ்வின் தனது பால்ய தோழியான ப்ரீத்தி நாராயணனை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதியா மற்றும் அகிரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

அஸ்வின் கிரிக்கெட் விளையாட தொடங்கும்போது தொடக்க வீரராகவும், நடுத்தர வேகப்பந்து வீச்சாளராகவும் தனது பயணத்தை தொடங்கினார். 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியின்போது ஒருமுறை அஸ்வினுக்கு பந்து பட்டு அடிப்பட்டது. இதன் காரணமாக, அஸ்வினால் சில மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மருத்துவர்கள் அஸ்வினை கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று கூறவே, அஸ்வினின் தாயார் அவரை வேகப்பந்து வீச்சாளரில் இருந்து சுழற்பந்து வீச்சாளராக மாற சொன்னார். இதன் காரணமாக பந்தை கையில் எடுத்த அஸ்வின், அதன்பின் விக்கெட் வேட்டையை கைவிடவில்லை.

உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கை:

சிறுவயது முதலே ரவிச்சந்திரன் அஸ்வினின் கடின உழைப்பு, அவருக்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற்று தந்தது. கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக அஸ்வின் முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஹரியானாவுக்கு எதிராக அறிமுகமானார். தொடர்ந்து 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆந்திரப் பிரதேசத்திற்கு எதிராக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்தியாவின் 17 வயதுக்குட்பட்ட அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அஸ்வினின் பார்ம் மோசமானதாக அமைந்தது. இதையடுத்து, அஸ்வினுக்கு பதிலாக ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டார். இதை தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழ்நாடு கிரிக்கெட் அணி மற்றும் தென் மண்டல அணிக்காக களமிறங்கினார். அதன்பின் அவரது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. அஸ்வின் 150 முதல் தர போட்டிகளில் விளையாடி, 731 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். தொடர்ந்து, 176 லிஸ்ட் ஏ போட்டிகளில் களமிறங்கி 236 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் வாழ்க்கை:

ஐபிஎல் சீசன்களில் ரவிச்சந்திரன் அஸ்வினின் வாழ்க்கை இதுவரை சிறப்பானதாகவே இருந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் தனது ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கினார். 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து இரண்டு ஐபிஎல் பட்டங்களை வென்றபோது, இரண்டு சீசன்கள் முறையே 13 மற்றும் 20 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இருப்பினும், 2016ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டதால், புதிய அணியான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியில் விளையாடினார்.

தொடர்ந்து, 2018ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.7.6 கோடி கொடுத்து அஷ்வினை அணியில் சேர்த்து, கேப்டனாகவும் ஆக்கியது. அஸ்வின் அந்த சீசனில் 14 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2021ம் ஆண்டு டெல்லி அணிக்கு சென்ற அஸ்வின், 2024ம் ஆண்டு வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடினார். கடந்த 2009ம் ஆண்டு முதல் ஐபிஎல்லில் விளையாடி வரும் அஸ்வின், 212 போட்டிகளில் விளையாடி 180 விக்கெட்டுகளை வீழ்த்தி 800 ரன்களையும் எடுத்துள்ளார்.

அஸ்வினின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

ஐபிஎல் போட்டியில் சிறந்து விளங்கியதன் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த 2010ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இந்த போட்டியில் 32 பந்துகளில் 38 ரன்கள் குவித்த அவர் 50 ரன்கள் விட்டுகொடுத்து 2 விக்கெட்களை தூக்கினார். அதன்பின், 2011 ஐசிசி உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியிலும் அஸ்வின் சேர்க்கப்பட்டார். இருப்பினும், அஸ்வின் உலகக் கோப்பையில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி தனது முத்திரையை பதித்தார்.

ALSO READ: Virat Kohli: விராட் கோலி கணக்கில் மற்றொரு மெகா சாதனையா? பாண்டிங்கை பின்னுக்கு தள்ள மிகப்பெரிய வாய்ப்பு..!

2013ல் இங்கிலாந்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் அஸ்வின் நான்கு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது. அதனை தொடர்ந்து, 2010ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி ஜிம்பாப்வேக்கு எதிராக டி20 அணியிலும், 2011ம் ஆண்டு நவம்பர் 6ம்தேதி வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார்.

அஸ்வின், இதுவரை 100 போட்டிகளில் விளையாடி 516 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல் இந்திய அணிக்காக 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 156 விக்கெட்டுகளுடன் 707 ரன்களை எடுத்துள்ளார். இந்திய அணிக்காக 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 72 விக்கெட்டுகளுடன் 184 ரன்களையும் எடுத்துள்ளார்.

ஒருநாள், டி20 போட்டிகளில் பெரியளவில் அஸ்வின் நீண்ட காலமாக விளையாடவில்லை என்றாலும், டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250, 300, 350, 400 மற்றும் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

Latest News