T20 உலக கோப்பை: இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம்.. வீடியோ இணையத்தில் வைரல்..!
அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐசிசி T-20 கிரிக்கெட் உலகக் கோப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் சர்வதேச போட்டியாகும். இத்தொடர் முதன் முதலாக 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐசிசி T-20 உலக கோப்பையின் முதல் தொடரில் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்று சாதனை பட்டியலில் இடம்பெற்றது. தோனி தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணியாக திகழ்ந்த இந்தியா இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
T-20 உலக கோப்பை போட்டிகள்,முதல் 17 நாட்களில் குரூப் போட்டிகளாக நடக்க உள்ளது. பின்னர் ஜூன் 19 முதல் ஜூன் 24 வரை சூப்பர் 8 சுற்றுகளும் அதன் பின்னர், அரையிறுதி போட்டிகள் ஜூன் 26 மற்றும் ஜூன் 27 ஆகிய நாட்களிலும், இறுதிப்போட்டி ஜூன் 29 ஆம் தேதியும் நடைபெறும் ஐசிசி அறிவித்துள்ளது.
Also Read: T20 பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு
இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய ஐந்து அணிகள் உள்ளன. அதேபோல் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து. ஓமன் ஆகிய அணிகள் விளையாடுகின்றன. குருப் சி பிரிவில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், பாபுவா நியூ கினியா, உகாண்டா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஸ்பானர்ஷிப்பை அடிடாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் இந்திய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
One jersey. One Nation.
Presenting the new Team India T20 jersey.Available in stores and online from 7th may, at 10:00 AM. pic.twitter.com/PkQKweEv95
— adidas (@adidas) May 6, 2024
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் முன்னிலையில், மைதானத்தில் ஹெலிகாப்டர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய ஜெர்சியில் இரண்டு கை பகுதியிலும் காவி வர்ணம் உள்ளது. இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அடிடாஸ் நிறுவனம் ஒரே நாடு ஒரே ஜெர்சி என பதிவிட்டுள்ளது.
இந்திய அணியில் விளையாடும் வீரர்கள்: ரோகித் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், சிராஜ் ஆகியோரின் பெயரை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
உலக கோப்பை ஜெர்சியில் காவி நிறம் உள்ளதற்கு நெட்டிசன்கள் விளையாட்டிலும் காவி நிறத்தை அரசு திணிப்பதாக கருத்துகளை தெரிவித்துள்ள நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.