டி20 உலகக் கோப்பை: ஒவ்வொரு வீரருக்கும் ரூ.83 லட்சம் பரிசு.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
டி20 உலக கோப்பை தொடரில் வெற்றிக்கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால், வீரர்களுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நாக்வி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 2-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.
T-20 உலக கோப்பை போட்டிகள், முதல் 17 நாட்களில் குரூப் போட்டிகளாக நடக்க உள்ளது. பின்னர் ஜூன் 19 முதல் ஜூன் 24 வரை சூப்பர் 8 சுற்றுகளும் அதன் பின்னர், அரையிறுதி போட்டிகள் ஜூன் 26 மற்றும் ஜூன் 27 ஆகிய நாட்களிலும், இறுதிப்போட்டி ஜூன் 29 ஆம் தேதியும் நடைபெறும் ஐசிசி அறிவித்துள்ளது.
ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பையை தொடரில் குரூப் A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9 ஆம் தேதி நியூயார்க்கில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளின் மோதும் போட்டிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: T20 உலக கோப்பை: இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம்.. வீடியோ இணையத்தில் வைரல்..!
டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கவுள்ள உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. அதே போல், பாகிஸ்தான் சார்பில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பாகிஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்தது.
பாகிஸ்தான் வீரர்கள்:
இப்திகார் அகமது, இமாத் வாசிம், சல்மான் அலி ஆகா, ஷதாப் கான், பாபர் அசாம் ( கேப்டன் ), ஃபகார் ஜமான், சைம் அயூப், உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, அப்பாஸ் அப்ரிடி, முகமது அமீர், இர்பான் கான், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஆசம் கான் (விக்கெட் கீப்பர்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்) ஆகியோர் டி20 உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர்.
புதிய ஜெர்சி அறிமுகம்
டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் நாடுகளின் சார்பில் வீரர்களுக்கு புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்திய புதிய ஜெர்சியை நேற்று வெளியிட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தான் அணி டி 20 உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது.
பரிசு தொகை அறிவிப்பு
பாகிஸ்தான் அணி டி 20 உலக கோப்பையை வென்றால், அந்த அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கு தலா ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நாக்வி அறிவித்திருக்கிறார். இந்திய மதிப்பில் சுமார் 83 லட்சம் பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கப்படும் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாட வேண்டும், இறைவன் விரும்பினால் வெற்றி கிடைக்கும், வீரர்களிடம் மிகச்சிறந்த விளையாட்டை எதிர்பார்ப்பதாகவும், வீரர்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய பரிசுத்தொகையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதால், அணியின் வீரர்கள் மேலும் உற்சாகத்துடன் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.