டி20 உலக கோப்பை தொடருக்கு தீவிரவாத அச்சுறுத்தல்.. பாதுகாப்பை தீவிரப்படுத்திய ஐசிசி..!
கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தீவிரவாத அச்சுறுத்தல் வந்துள்ளதை தொடர்ந்து, போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் வீரர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஐசிசி தீவிரப்படுத்தியுள்ளது.
டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. டி 20 உலக கோப்பை போட்டிகள்,முதல் 17 நாட்களில் குரூப் போட்டிகளாக நடக்க உள்ளது. பின்னர் ஜூன் 19 முதல் ஜூன் 24 வரை சூப்பர் 8 சுற்றுகளும் அதன் பின்னர், அரையிறுதி போட்டிகள் ஜூன் 26 மற்றும் ஜூன் 27 ஆகிய நாட்களிலும், இறுதிப்போட்டி ஜூன் 29 ஆம் தேதியும் நடைபெறும் ஐசிசி அறிவித்துள்ளது.
இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய ஐந்து அணிகள் உள்ளன. அதேபோல் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து. ஓமன் ஆகிய அணிகள் விளையாடுகின்றன. குருப் சி பிரிவில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், பாபுவா நியூ கினியா, உகாண்டா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
டி20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்து இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. போட்டியை நடத்தக்கூடாது என்று வடக்கு பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. உலக கோப்பை தொடரில் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என்ற தகவலை அடுத்து பாதுகாப்பு முகமை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக டிரினிடாட் & டுபாகோ பிரதமர் கெய்த் ரோவ்லி தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அமைப்பான, கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் ( CWI ), பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக அறிக்கைகள் வெளிவந்ததை தொடர்ந்து, டி20 உலகக் கோப்பை தொடர்பான பாதுகாப்பு அச்சத்தை தணிக்கும் வகையில் ஐசிசி பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
Also Read: டி20 உலக கோப்பை: இந்திய அணியின் சிறந்த கேப்டன் ரோகித்.. யுவராஜ் பெருமிதம்
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதை மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றான டிரினிடாட் பிரதமரும் வெளிப்படுத்தி உள்ளார். போட்டி நடைபெறும் மைதானங்கள், வீரர்கள் தங்கும் இடங்கள், பயிற்சி மைதானங்களில் கூடுதல் பாதுகாப்பு தரப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள் வெளியே செல்வதற்கும் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக 20 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதால் உலக நாடுகளின் பார்வை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சுற்றியுள்ள 9 மைதானங்களை சுற்றியே உள்ளன.
போட்டிகள் நடைபெறும் அட்டவணை வெளியான நாள் முதல் டி20 உலககோப்பை தொடருக்கான எதிர்பார்ப்புகள் கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ள நிலையில், தற்போது தீவிரவாத அச்சுறுத்தல் நிலவி வருவதால், எந்த பிரச்சினையும் இல்லாமல் போட்டிகள் நடைபெற வேண்டும் என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.