வான்கடேவில் சிஎஸ்கேவுக்கு வசமாகுமா வெற்றி..? – சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல்
மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றய லீக் போட்டியில் வான்கடே மைதானத்தின் ஆடுகளம் எப்படி இருக்கும், ஆடுகளத்தின் தன்மை யாருக்கு அதிக சாதகம் என்பதை இதில் தெரிந்துகொள்வோம்.
17-வது ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரின் முக்கியமான போட்டி என்னவென்று கேட்டால், கிரிக்கெட் ரசிகர்கள் குறிப்பிடுவது சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிதான். இரு அணிகளும் இந்த 16 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தி உள்ளனர். இரு அணிகளும் தலா 5 முறை கோப்பைகளை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளிலும் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அந்தவகையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் தொடரை வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகள் என புள்ளிப்பட்டியலின் 3ஆம் இடத்தில் தொடர்கிறது. அதேசமயம் ஹர்திக் பாண்டியா தலைமையில் தொடரை தோல்வியுடன் தொடங்கி மும்பை இந்தியன்ஸ் அணியானது கடைசி இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் மும்பை அணி தனது வெற்றி கணக்கை தொடருமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடி 5 போட்டிகளில் தனது ஹோம் மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 3 போட்டிகளில்தான் வென்றுள்ளன. சென்னைக்கு வெளியே நடந்த 2 போட்டிகளிலும் டெல்லி, ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக தோல்வியையே அந்த அணி சந்தித்தது. எனவே சென்னைக்கு வெளியே முதல் வெற்றியை பெற வேண்டும் என சிஎஸ்கே தீவிரம் காட்டும். மும்பை அணியோ நடப்பு தொடரின் ஆரம்பத்தில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தாலும், கடைசி இரண்டு போட்டிகளில் டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகளை அதிரடியாக வென்று, தற்போது சொந்த மைதானத்தில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது.
நேருக்கு நேர்
ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடர்களில் இரு அணிகளும் 36 முறை நேர் நேர் மோதி உள்ளனர். அதில் மும்பை அணி 20 முறையும், சிஎஸ்கே 16 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளிலும் சிஎஸ்கே அணியே வென்றது குறிப்பிடத்தக்கது.
பிட்ச் ரிப்போர்ட்
இந்த போட்டி மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 172 ரன்களாக உள்ளது. மேலும் இங்கு இரண்டாம் பாதியில் பனியின் தாக்கம் இருக்கும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகலில், மும்பையில் வெப்பநிலை சுமார் 28 டிகிரியாக இருக்கும். ஈரப்பதம் சுமார் 79% இருக்கும். மழைக்கு வாய்ப்பே இல்லை.
அதே பிட்ச்…?
ஆர்சிபி அணிக்கு எதிராக கடந்த ஏப். 11ஆம் தேதி நடைபெற்ற போட்டி என்பது வேறொரு ஆடுகளத்தில் நடைபெற்றது, அந்த பிட்சில் ஸ்கொயர் பவுண்டரிகள் 65 மீட்டர் மற்றும் 59 மீட்டராக இருந்தது. அதுவும் செம்மண் பிட்ச் என்பதால் பேட்டிங்கிற்கே சாதகமாக இருந்தது. 196 ரன்களை ஆர்சிபி அடித்தாலும், இரவில் நிலவிய பனி மற்றும் ஆர்சிபியின் மோசமான பந்துவீச்சு மும்பை அணியை வெறும் 93 பந்துகளில் இலக்கை அடைய வைத்தது எனலாம். எனவே, சென்னை அணிக்கு எதிராக மும்பை அணி பெரும்பாலும் ஆர்சிபி அணிக்கு கொடுத்த அதே ஆடுகளத்தை (Pitch) கொடுக்கவே பார்க்கும்.
டாஸை வெல்லும் அணிக்கே பாதி வெற்றி என்பது வான்கடேவில் அதிகம் பேசப்படும் ஒன்று. பனியின் தாக்கம், மும்பையின் பேட்டிங் டெப்த் ஆகியவற்றை பார்க்கும்போது சிஎஸ்கே அணியும் டாஸை வெல்லவே பார்க்கும். சிஎஸ்கே அணி முதல் நான்கு போட்டிகளிலும் டாஸை தோற்ற நிலையில், கடைசி போட்டியில் மட்டுமே வென்றது. அந்த அதிர்ஷ்டம் சிஎஸ்கே அணிக்கு மும்பையிலும் நீடித்தால் சிஎஸ்கேவின் பக்கம் ஆட்டம் செல்லலாம். நிச்சயம் முதலில் பேட்டிங் செய்யும் அணி 220 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். இருப்பினும் மும்பை அணிக்கே அதிக சாதகம் இருக்கிறது என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.