Year in Search 2024: 2024ல் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் இவரா! கோலி முதலிடம் இல்லையா..?
Hardik Pandya: ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்போது ஹர்திக் பாண்டியாவை மைதானத்திலேயே வைத்து ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். மேலும், தகாத வார்த்தைகளாலும் திட்டி தீர்த்தனர். மேலும், 2024 ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
வருடந்தோறும் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு வகையான விஷயங்கள் மற்றும் நபர்களின் பெயர்கள் ட்ரெண்டாகும். பொதுவாக, ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட நபர்களில் விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் பெயர்கள் அதிகளவில் இடம் பெற்றிருக்கும். பொதுவாகவே விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ரோஹித் சர்மா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் டாப் 1ல் இடம் பெற்றிருக்கும். இந்த ஆண்டு இந்த மூன்று வீரர்களை கடந்து நட்சத்திர வீரர் ஒருவர் 2024 கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஆனார். அந்த வீரர் வேறு யாரும் இல்லை ஹர்திக் பாண்டியாதான். ஹர்திக் பாண்டியாவிற்கு இந்த ஆண்டு ஏற்ற இறக்கங்களாகவே இருந்தது.
2024ல் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக மாற்றம், விவாகரத்து, டி20 உலகக் கோப்பை என இவரது அதிகளவில் பேசப்பட்டது. இதன் காரணமாகவே, ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவின் பெயரை அதிகளவில் கூகுளில் தேடியுள்ளனர். இதன்மூலம், இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார். அந்தவகையில், இன்று ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு எதனால் அதிக ட்ரெண்ட் ஆனார், தேடப்பட்டார் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
அதிக ட்ரோல்:
ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா கடந்த 2015ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2022 மற்றும் 2023 சீசன்களில் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமை தாங்கி ஒரு முறை சாம்பியன் பட்டத்தையும், ஒரு முறை இறுதிப் போட்டி வரையிலும் அழைத்து சென்றார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் இரண்டு ஆண்டுகள் கழித்த பிறகு, மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்பினார். அதன் தொடர்ச்சியாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த முடிவு, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து அணியின் ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை. இதன் காரணமாக, ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்போது ஹர்திக் பாண்டியாவை மைதானத்திலேயே வைத்து ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். மேலும், தகாத வார்த்தைகளாலும் திட்டி தீர்த்தனர். மேலும், 2024 ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதன் காரணமாகவும் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டார்.
விவாகரத்து:
ஐபிஎல் போட்டிகளின்போது ஹர்திக் பாண்டியா தனது ரசிகர்களிடம் அதிக அவமானங்களை எதிர்கொண்டாலும், சிறிதும் கோபத்தை வெளிப்படுத்தாமல் சிரித்தப்படி கடந்தார். அந்த நேரத்தில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஹர்திக் பாண்டியா பட்ட கஷ்டங்களை ரசிகர்கள் அறியவில்லை. ஐபிஎல் முடிந்து சில மாதங்களில் நடாஷா ஸ்டான்கோவிச் தனது கணவர் ஹர்திக் பாண்டியாவை பிரிவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்வை உண்டாக்கியது. இறுதியாக இவர்கள் இருவரும் கடந்த ஜூலை மாதம் தங்கள் விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த முடிவால், நான்கு வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
மகனையும் பிரிந்த சோகம்:
விவாகரத்து பிறகு ஹர்திக் பாண்டியா தனது மனைவியை பிரிந்தது மட்டுமல்லாமல், தனது மகனையையும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷாவிற்கு அகஸ்தியா பாண்டியா என்ற மகன் உள்ளார். விவாகரத்துக்கு பிறகு, நடாஷாதான் அகஸ்தியாதான் வளர்த்து வருவதாகவும், விவாகரத்து காலத்தில் நடாஷா தனது மகனுடன் செர்பியாவுக்கு சென்று, ஒன்றரை மாதங்களுக்கு பிறகு இந்தியா திரும்பியதாக கூறப்பட்டது. இதன் காரணமாக, தனது மகனை காணமுடியாமல் ஹர்திக் பாண்டியா தவித்ததாக சமூக வலைதளங்களில் சொல்லப்பட்டது. சமீபத்தில், அகஸ்தியாவுடன் ஹர்திக் பாண்டியா இருந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணம்:
2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஹர்திக் பாண்டியா. இதன் காரணமாகவும், ஹர்திக் பாண்டியா பெயர் கூகுளில் அதிகம் தேடப்பட்டது. மேலும், 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஓவரை வீசினார். இதில், தென்னாப்பிரிக்கா அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லரின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.