5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ZIM vs GM: டி20 வரலாற்றில் அதிக ரன்கள்.. சாதனைப் படைத்த ஜிம்பாப்வே அணி!

ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 344 ரன்கள் குவித்தது. இது டி20 கிரிக்கெட்டில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ரன்னாக பதிவானது. கடந்தாண்டு மங்கோலியா அணிக்கு எதிராக டி20 போட்டியில். நேபாள் அணி 314 ரன்கள் எடுத்ததே டி20 கிரிக்கெட்டின் அதிகப்பட்ச ஸ்கோராக பதிவானது. இப்படியான நிலையில் அந்த சாதனையை ஜிம்பாப்வே அணி முறியடித்துள்ளது. 3வது இடத்தில் இந்திய அணி 297 ரன்களுடன் உள்ளது.

ZIM vs GM: டி20 வரலாற்றில் அதிக ரன்கள்.. சாதனைப் படைத்த ஜிம்பாப்வே அணி!
ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 23 Oct 2024 21:37 PM

டி20 கிரிக்கெட்டில் சாதனை: கென்யாவில் நடைபெற்ற டி20 போட்டியில் காம்பியா அணியை 290 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அந்நாட்டில் உள்ள நைரோபி ரூராக்கா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர்களான பிரயன் பெனெட் மற்றும் விக்கெட் கீப்பர் ததிவானாஷே மருமணி இருவரும் இணைந்து தொடக்கம் முதலே காம்பியா அணியின் பந்துவீச்சை அடித்து ஆடினர். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 5 ஓவர்களில் காம்பியா அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி 90 ரன்களை கடந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்த நிலையில் ததிவானாஷே மருமணி 19 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர் என 62 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இதனைத் தொடர்ந்து அணியின் ஸ்கோர் 115 ஆக உயர்ந்தபோது பெனட் 50 ரன்களில் நடையை கட்டினார். அவரும் தன் பங்குக்கு 7 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசினார்.  பின்னர் டியான் மியர்ஸ் 12 ரன்கள் எடுத்து அவுட்டாக மறுபுறம் கேப்டன் சிக்கந்தர் ராசா சூறாவளியாக சுழன்றடித்து காம்பியா அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

Also Read: Evening Digest 23 October 2024: விஜய்யின் அரசியல் ஆட்டம்.. சிக்கலில் இர்ஃபான்.. இன்றைய டாப் 10 செய்திகள்!

43 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 15 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் விளாசி 133 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இதில் பௌண்டரி வகைகளில் மட்டும் சிக்கந்தர் ராசாவுக்கு 118 ரன்கள் கிடைத்தது. வெறும் 15 ரன்கள் மட்டுமே அவர் ஓடி எடுத்தார். பின்னர் கிளைவ் மடாண்டே தன் பங்குங்கு 53 ரன்கள், ரியான் பர்ல் 25 ரன்கள் எடுக்க ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 344 ரன்கள் குவித்தது.

இது டி20 கிரிக்கெட்டில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ரன்னாக பதிவானது. கடந்தாண்டு மங்கோலியா அணிக்கு எதிராக டி20 போட்டியில். நேபாள் அணி 314 ரன்கள் எடுத்ததே டி20 கிரிக்கெட்டின் அதிகப்பட்ச ஸ்கோராக பதிவானது. இப்படியான நிலையில் அந்த சாதனையை ஜிம்பாப்வே அணி முறியடித்துள்ளது. 3வது இடத்தில் இந்திய அணி 297 ரன்களுடன் உள்ளது. காம்பியா அணி தரப்பில் ஆண்ட்ரூ ஜார்ஜூ இரண்டு விக்கெட்டுகளையும், அபூபக்கர் குயதே, அர்ஜுன் சிங் ராஜ் புரோஹித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டு வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய காம்பியா அணி ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணற தொடங்கியது. அந்த அணியில் 10வது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய ஆண்ட்ரே ஜார்ஜூ மட்டும் அதிக்கப்பட்சமாக 12 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகினர். காம்பியா அணி தந்து இன்னிங்ஸில் மொத்தமே ஆறு பவுண்டரிகள் மட்டுமே எடுத்தது. எக்ஸ்ட்ரா வகையில் ஜிம்பாப்வே அணி 14 ரன்கள் கொடுத்த நிலையில் காம்பியா அணி மொத்த ஸ்கோர் 40 ரன்களாக மட்டுமே இருந்தது.

Also Read: Amazon Prime : இனி திரைப்படங்களுக்கு நடுவே விளம்பரம் தோன்றும்.. பயனர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்!

இதன் மூலம் 290 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது. ஜிம்பாவே அணி தரப்பில் பிராண்டன் மவுடா ரிச்சர்ட் ங்கரவா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும்,  வெஸ்லி மாதவேரே 2 விக்கெட்டுகளையும், ரியான் பர்ல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஜிம்பாப்பே அணி 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்து 30 பவுண்டரிகளையும், 27 சிக்ஸர்களையும் விளாசியது.

காம்பியா அணியில் முஸ்தபா சுவாரே ,ஃபிராங்க் காம்ப்பெல் ,கேப்ரியல் ரிலே ,முஹம்மது மங்கா  , இஸ்மாயிலா தம்பா, அபுபக்கர் குயாதே ,அசிம் அஷ்ரப் , பசிரு ஜெய் , அர்ஜுன்சிங் ராஜ்புரோஹித் , ஆண்ட்ரே ஜார்ஜு ,மூசா ஜோபர்டே ஆகியோர் களமிறங்கி விளையாடினர். ஜிம்பாப்வே அணியில் பிரையன் பென்னட், ததிவானாஷே மருமணி, டியான் மியர்ஸ் ,சிக்கந்தர் ராசா, ரியான் பர்ல் ,கிளைவ் மாடண்டே ,வெஸ்லி மாதேவேரே ,தஷிங்கா முசெகிவா ,ஆசீர்வாதம் முசரபானி ,பிராண்டன் மவுடா ,ரிச்சர்ட் ங்கராவா ஆகியோரும் ஆடும் லெவன் அணியில் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News