Tiruchendur: திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு – பக்தர்கள் அதிர்ச்சி!
கார்த்திகை மாதம் என்பதால் திருச்செந்தூர் கோயில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் கோயில் யானை தெய்வானை தாக்கியதில் பாகன் மற்றும் அவரது உறவினர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை தாக்கியதில் அதன் பாகன் உதயன் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம் 3.30 மணியளவில் இருவரும் யானைக்கு பழங்கள் கொடுத்துக்கொண்டிருந்த போது திடீரென ஆக்ரோஷத்துடன் யானை தாக்கியதாக சொல்லப்படுகிறது. பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருச்செந்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திகை மாதம் என்பதால் திருச்செந்தூர் கோயில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் யானை தாக்கியதில் பாகன் மற்றும் அவரது உறவினர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் கடவுளாக கொண்டாடப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உள்ளது. இந்த கோயிலில் 25 வயது மிக்க யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. தெய்வானை என பெயர் சூட்டப்பட்ட அந்த பெண் யானை கோயிலில் வரும் பக்தர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. கோயிலின் வடக்கு வாயில் வாயில் அருகே நின்று கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வரும் யானை இன்று வழக்கம்போல பக்தர்களுக்கு ஆசி வழங்கி கொண்டிருந்தது. மதியம் 3.30 மணியளவில் யானை பாகன் மற்றும் அவரது உறவினரை யானை தாக்கியது.
இதனை சற்றும் எதிர்பாராத பக்தர்களும், கோவில் நிர்வாக அதிகாரிகளும் யானை தாக்கியதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் உதயனும் உயிரிழந்தார். யானை திடீரென ஆக்ரோஷத்துடன் தாக்க என்ன காரணம் என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.