Kasthuri Shankar: சிக்கலில் நடிகை கஸ்தூரி.. 2 தனிப்படைகள் அமைப்பு.. கண்காணிப்பு தீவிரம்!
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக கஸ்தூரி மீது எழும்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பினர். மேலும் விசாரணைக்கு சென்ற போது அவரது வீடு பூட்டி இருந்ததாகவும் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நடிகை கஸ்தூரி: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் நடிகை கஸ்தூரி தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தேடுதல் வேட்டை மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான கஸ்தூரி அரசியலிலும் பங்காற்றி வருகிறார். கடந்த நவம்பர் 3 ஆம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிராமண சமூகத்தின் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் அவதூறு பிரச்சாரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய நிலையில் பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பல்வேறு அரசியல் சார்ந்த பிரமுகர்களும் பங்கேற்று உரையாற்றினர்.
Also Read: Tiruchendur: மது கொடுத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. உடற்கல்வி ஆசிரியர் கைது!
சர்ச்சையான கஸ்தூரி பேச்சு
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, “திராவிடம் பேசும் நபர்களுக்கு கடவுள் மறுப்பு தான் முதல் கொள்கையாக இருக்கிறது. பொய்யான காரணங்களை கூறி சமுதாய மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்பது திராவிட கட்சிகளின் நோக்கமாக உள்ளது. ஆரிய பண்பாடு வந்த பிறகு எப்படி மற்ற சாதியினர் சத்திரியர், வைசியர் போன்ற பாகுபாட்டில் இணைந்து கொண்டார்களோ அதுபோலத்தான் கோயில் பணிகளில் அய்யர்கள், ஐயங்கார்கள், பண்டாரங்கள் ஆகியோர் இணைந்து கொண்டனர்.
இவற்றையெல்லாம் மறந்துவிட்டு நேற்று வந்தவர்களைப் போல பிராமண சமூகத்தை சேர்ந்தவர்களை நடத்துகின்றனர். மன்னர்களின் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் எல்லாம் இன்று தமிழ் எங்கள் இனம் என சொல்லும்போது எப்போதோ வந்த பிராமண சமூகத்தினர் தமிழர்கள் இல்லை சொல்ல நீங்கள் யார்? என திமுகவை விமர்சிப்பதாக எண்ணி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கஸ்தூரி தெரிவித்தார்.
மேலும் திமுக அமைச்சரவையில் 5 தெலுங்கு மொழி பேசும் அமைச்சர்கள் உள்ளனர். இங்கு தெலுங்கு பேசுபவர்களுக்கு நிறைய கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். முதலில் நம் உரிமையையும் பிழைப்பையும் அவர்கள் பிடுங்காமல் நாம் தடுக்க வேண்டும் என கஸ்தூரி தெரிவித்தார். தெலுங்கு மக்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேசியதாக வீடியோ வைரலாகி கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
Also Read: Manipur: சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல்.. மணிப்பூரில் 11 ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொலை
தமிழக அரசியல் கட்சியினை சார்ந்த பலரும் கஸ்தூரியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதோடு தனது கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும் எனவும் கூறினர். இதனைத் தொடர்ந்து நவம்பர் 4 ஆம் தேதி சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை கஸ்தூரி சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, “நான் எதையும் தவறாக சொல்லவில்லை என்றும், திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களை பற்றி தான் கூறினேன். அது தெலுங்கு மக்களை சொன்னதாக திசை திருப்பப்பட்டது” என குற்றம் சாட்டினார். ஆனாலும் கஸ்தூரியின் பேச்சுக்கு தொடர்ச்சியாக கண்டனங்கள் வலுத்த நிலையில் நவம்பர் 5ஆம் தேதி அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்.
வழக்குப்பதிவு
இதனிடையே தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக கஸ்தூரி மீது எழும்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பினர். மேலும் விசாரணைக்கு சென்ற போது அவரது வீடு பூட்டி இருந்ததாகவும் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் கஸ்தூரி தலைமறைவாகியுள்ளதாக கூறப்பட்டது.
இதற்கிடையில் முன்ஜாமீன் கூறி உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் நடிகை கஸ்தூரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வேறு எதுவும் செல்போன் எண் பயன்படுத்துகிறாரா என்ற ரீதியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன் ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் கஸ்தூரி விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.