திருப்பூரை அதிர வைத்த சம்பவம்.. நாட்டுவெடி வெடித்து குழந்தை உட்பட 3 பேர் பலி

இன்று பட்டாசு தயாரிக்கும் பணியில் சரவணக்குமார் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நாட்டு மருந்துகள் வெடித்து சிதறியது. குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால் வெடி மருந்து விபத்தின் தாக்கம் அருகிலுள்ள இடங்களுக்கும் இருந்தது. இந்த விபத்தில் கார்த்திக் வீட்டின் முன்புறம் முற்றிலும் சேதமடைந்தது. அதேபோல் வீட்டின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த மளிகைக்கடை, எதிர்திசையில் அமைந்திருந்த 10 வீடுகள் ஆகியவையும் சேதமடைந்தது.

திருப்பூரை அதிர வைத்த சம்பவம்.. நாட்டுவெடி வெடித்து குழந்தை உட்பட 3 பேர் பலி

திருப்பூர் வெடி விபத்து

Published: 

08 Oct 2024 16:42 PM

திருப்பூர்: திருப்பூரில் இன்று நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பூலுவபட்டி அருகே உள்ள பொன்னம்மாள் நகரில் இன்று மதியம் நேரத்தில் குண்டு வெடிப்பது போன்று பயங்கர சத்தம் கேட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் வரை இந்த சத்தம் கேட்டதால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.  என்ன நடந்தது என தெரியாமல் வெளியே வந்து பார்த்தபோது தான் விபரீதம் புரிந்துள்ளது. மேலும் இந்த சத்தத்தால் நில அதிர்வும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெடிச்சத்தம் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.  அங்கு ஒரு வீடு இடிந்து தரை மட்டம் ஆகி இருந்ததோடு மட்டுமல்லாமல் உள்ளே மனித உடல் பாகங்கள் சிதறி கிடந்தது. இந்த விபத்தில்  குழந்தை உட்பட 3 பேர்  உயிரிழந்ததனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பதை காணலாம்.

பொன்னம்மாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது மனைவி சத்திய பிரியா மற்றும் 9 மாத கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார். சத்தியப்பிரியாவின் சகோதரரான சரவணக்குமார் ஈரோடு மாவட்டம் நம்பியூரில் கோயில் திருவிழாக்களுக்கு பட்டாசு தயார் செய்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். தற்போது நவராத்திரி காலம் என்பதால் அதிக அளவிலான ஆர்டர்கள் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சத்யபிரியாவின் வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

Also Read: Zomato CEO : டெலிவரி ஊழியர்களை இழிவுபடுத்திய மால் நிர்வாகம்.. சொமேட்டோ CEO செய்த செயலால் அதிரடி நடவடிக்கை!

இந்நிலையில் இன்று பட்டாசு தயாரிக்கும் பணியில் சரவணக்குமார் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நாட்டு மருந்துகள் வெடித்து சிதறியது. குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால் வெடி மருந்து விபத்தின் தாக்கம் அருகிலுள்ள இடங்களுக்கும் இருந்தது. இந்த விபத்தில் கார்த்திக் வீட்டின் முன்புறம் முற்றிலும் சேதமடைந்தது. அதேபோல் வீட்டின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த மளிகைக்கடை, எதிர்திசையில் அமைந்திருந்த 10 வீடுகள் ஆகியவையும் சேதமடைந்தது. இந்த வெடி விபத்தில் அடையாளம் தெரியாத நபரின் உடல் பாகங்கள் 100 மீட்டர் தூரத்துக்கு சிதறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  அது சரவணக்குமாராக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு போலீசார் உடனடியாக விரைந்து வந்தனர். விபத்து நடந்த இடத்தை சுற்றி வளைத்து ஆய்வு செய்தனர். தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வெடி விபத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை உயரதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்தில்  ஆய்வு செய்தனர். மேலும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடி விபத்துக்கு பயன்படுத்தப்பட்டது என்ன மாதிரியான பொருள் என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

வெடிக்காத பொருட்கள் அனைத்து கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.  இதனிடைய திருப்பூர் காவல் ஆணையர் லட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கார்த்திக் என்பவர் வீட்டில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. கார்த்திக்கின் மனைவி சத்யபிரியாவின் சகோதரர் சரவணகுமார் கோவில் திருவிழாவுக்கான வெடிகளை தயாரித்து வந்துள்ளார். கார்த்திக் சத்யப்பிரியா தம்பதியினருக்கு கைக்குழந்தை இருந்துள்ளது. இந்த வெடி விபத்தில் ஒரு பெண் மற்றும் குழந்தை உயிரிழந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

Also Read: AIADMK: RSS பேரணியை தொடங்கி வைத்த அதிமுக எம்.எல்.ஏ – சஸ்பெண்ட் செய்த இபிஎஸ்!

உயிரிழந்த பெண் சத்ய பிரியாவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சரவணகுமார் ஈரோட்டில் பட்டாசு தயாரிப்புக்கான லைசன்ஸ் வாங்கி வைத்திருந்த நிலையில் சட்டத்திற்கு புறம்பாக திருப்பூரில் தயாரித்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்  கூறுகையில்,  “சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு சேதம் அடைந்த வீடுகள் தொடர்பான கணக்கிடப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ,மேலும் உரிமை இல்லாமல் பட்டாசு தயாரித்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், காயம் அடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?