திமுக, பாஜகவிற்கு கண்டனம்.. அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
AIADMK Meeting : சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக செயற்குழு, பொதுக் குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் திமுக மற்றும் பாஜகவுக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026ல் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவோம் என்று நிர்வாகிகள் சூளுரைத்துள்ளனர்.
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் சட்டப்படி அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக் குழுவையும், ஆண்டுக்கு இரண்டு முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். அதன்படி அதிமுகவின் ஒரு செயற்குழு ஏற்கனவே நடந்துவிட்டது. ஆனால், பொதுக்குழு இன்னும் கூட்டப்படவில்லை. எனவே, இந்த ஆண்டுக்கான பொதுக் குழு மற்றும் ஒரு செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று காலை கூடியது. அதிமுக பொதுச் செயலாளர் தலைமையில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
இந்த கூட்டத்திற்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் 2026 தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பது குறித்தும் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.
இதன்பின்பு, கூட்டததில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், மக்கள் பிரச்னைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களில் திமுக, பாஜகவிற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் நாட்டில் மிகப் பெரிய பேரழிவை ‘ஃபெஞ்சல்’ புயல் ஏற்படுத்திய நிலையில் அதை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கை, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை எதையும் செய்யாமல், பேரிடர் காலங்களில் மக்களுக்கான குறைந்தபட்சம் உணவு, உறைவிடம், குடிநீர், சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக்கூட ஒழுங்காக, முறையாக நிறைவேற்றாத திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
Also Read : 2 ஆண்டுகளில் 2வது முறை இடைத்தேர்தல்.. கவனம் ஈர்க்கும் ஈரோடு கிழக்கு தொகுதி!
பாஜக, திமுகவிற்கு கன்டணம்
எழை, எளிய, நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு, முத்திரைத் தாள் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பீடு உயர்வு என்று தமிழ் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி வரும் நிர்வாகத் திறமையற்ற நிர்வாக திமுக அரசுக்கு கண்டனம்
பழைய ஓய்வூதியத் திட்டம், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் ஊதிய முரண்பாடு, நிறைவேற்றாமலும், விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், பணி நிரந்தரம் ஆகியவற்றை நிறைவேற்றாமலும் இருக்கும் திமுக அரசிற்கு கண்டனம்.
‘ஃபார்முலா 4’ கார் பந்தயம் நடத்துதல், வரைமுறையின்றி சிலைகள் வைத்தல்; பூங்காக்கள் அமைத்தல், பேனா நினைவுச் சின்னம், பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு கூட்ட அரங்கம் கட்டுதல் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து, ஆடம்பர செலவு செய்து மக்கள் நலன்களை பின்னுக்குத் தள்ளி அரசு நிதியை வீணடிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்
டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை கைவிடுமாறு, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெறவும், சட்டங்களின் பெயர்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதைக் கைவிடவும் மத்திய அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்பின், கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் அதிமுக ஒரு சதவீத வாக்குகளை பெற்றது. மக்களவை தேர்தலில் திமுக 6.5 சதவீத வாக்குகளை குறைவாக பெற்றுள்ளது. 2014ல் பாஜக கூட்டணி 18.80 சதவீத வாக்குகளை பெற்றது. 2024 தேர்தலில் 18.15 சதவீத வாக்குகளை பெற்றது. மேலும், நீட் தேர்வு, சாதி கணக்கெடுப்பு, தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வினை வழங்கவும் மத்திய அரசிற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 2026ல் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவோம் என்று நிர்வாகிகள் சூளுரைத்துள்ளனர்.
Also Read : மதுரை சிறையில் ரூ.1.63 கோடி மோசடி.. சிக்கிய 3 அதிகாரிகள்.. அதிரடி காட்டிய போலீஸ்!
பாஜக தனி கூட்டணியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை வாரி இறைத்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது. 2021 தேர்தலில் 1.98 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக ஆட்சியில் அமர்ந்தது. கூட்டணி வரும் போகும். ஆனால் கொள்கை நிலையானது. கூட்டணி இல்லாமல தனித்துப் போட்டியிட்டு ஆட்சி அமைத்த ஒரே இயக்கம் அதிமுக” என்றார்.