Tamil TV9 Exclusive : 50 ஆண்டுகளாக மக்கள் சேவை.. ஆலங்குடி ‘515’ கணேசனின் கதை!
Story of Alangudi 515 Ganeshan: உலகில் தோன்றிய அனைவரும் சக மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயனுள்ளவர்களாக வாழ்ந்து மறைய வேண்டும் என்று சுயநலம் கருதாது பிற பிறர் நலத்திற்காக வாழ்பவர்கள் பலர். அப்படி சமூக சேவகர் 515 கணேசனின் கதை தெரியுமா? அவர் செய்திருக்கும் மகத்தான மனிதநேய செயல்களை தெரிந்து கொள்ளுங்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் 515 கணேசன். 75 வயதான இவர் தன் வாழ்நாளில் அதிகப்படியான பகுதியை சமூக சேவை செய்வதற்காகவே அர்ப்பணித்துள்ளார். இவரால் பயனடைந்தோர்கள் ஏராளம். பகட்டுக்காக கார் வாங்கி வலம் வரும் இந்த உலகில், பிற மனிதன் நலனுக்காக தான் வாங்கிய காரை அவசர ஊர்தியாக பயன்படுத்தியவர் இந்த 515 கணேசன். இவர் 7000க்கும் மேற்பட்ட சடலங்களை தன் காரின் மூலமாக எடுத்துச் சென்றுள்ளார். 2500 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களை இலவசமாக தன் காரில் அழைத்துச் சென்றுள்ளார். மேலும் இயற்கை பேரிடர் காலங்களிலும் தன் காரின் மூலமாக நிதி உதவிகளைப் பெற்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கியிருக்கிறார். தனது 18 வயதில் மக்கள் சேவையில் ஈடுபட்டு இன்று வரை மக்களுக்காக ஓடிக் கொண்டிருக்கும் 515 கணேஷ் அவர்கள் TV9 தமிழுக்கு அளித்த பிரத்யேக தகவல்கள்…
பெயருக்கு முன்னால் 515 ஏன்?
ஒருமுறை மருத்துவமனைக்கு செல்லும்போது தள்ளு வண்டியில் வைக்கோல்களை போட்டு மூடி சடலங்களை எடுத்துச் சென்ற காட்சியை பார்த்தபின் மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. முதன் முதலில் நான் வாங்கிய காரின் பதிவெண் TMZ515. பிரசவத்திற்கு வரும் தாய்மார்களுக்கு இருபது கிலோ மீட்டர் வரை இலவசம் என்று அந்த வண்டியில் எழுதி இருந்தேன். இதனால் என் வண்டியயை அனைவரும் பிரசவத்திற்கு அழைக்க தொடங்கினர்.
மக்கள் மத்தியில் அது 515 வண்டி என பிரபலமடைந்துவிட்டது. இதனால் மற்ற கார் ஓட்டுநர்கள் பொறாமை கொண்டு பிரசவத்திற்கு 20 கி.மீ இலவசம் என எழுதப்பட்டதில் பிரசவத்தில் உள்ள முதல் இரண்டு எழுத்தை அழித்து விட்டனர். அது சவத்திற்கு இலவசம் என்று மாறியது. அன்று முதல் நான் எல்லா நல்லது, கெட்டதுக்கும் என் வண்டியை பயன்படுத்தத் தொடங்கினேன் என்று தான் சமூக சேவைக்குள் அடியெடுத்து வைத்ததை நினைவு கூர்ந்தார்.
செய்த சமூக தொண்டுகள்:
இதுவரை இவர் 7, 500 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களை தன் வண்டியில் எடுத்துச் சென்றிருக்கிறார். விபத்துகளில் பாதிக்கப்பட்ட 2000திற்கும் மேற்பட்ட நபர்களை தன் வண்டியில் எடுத்துச் சென்று அனுமதித்திருக்கிறார். 2,500 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களை பிரசவத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மேலும் மஞ்சுவிரட்டு நடக்கும் பகுதிகளில் மாடுகளால் காயம் அடைந்தவர்களை இவரின் 515 எண் கொண்ட கார்தான் அழைத்துச் சென்றிருக்கிறது. பிணம் தூக்கி என்று மற்றவர்களின் கேலி பேச்சுக்கு ஆளான இவர் எவர் பேச்சுக்கும் செவிமடுக்காமல் தான் கொண்ட லட்சியத்தில் உறுதியாக இருந்தார். எனவே தான் இத்தகைய மகத்தான சாதனையை அவரால் செய்ய முடிந்தது.
Also Read: ‘இப்பிறப்பும், எப்பிறப்பும் தொடரும் இந்தப் பாசம்’.. மனைவிக்காக 4,400 கி.மீ சைக்கிள் பயணம்!
பாரதிதாசன் வாக்கிற்க்கிணங்க தன் பிள்ளை, தன் மனைவி, தன் சம்பாத்தியம் என்று மட்டும் இல்லாமல் தான் பெற்ற ஐந்து பெண் குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்த்தெடுத்ததோடு பிற குழந்தைகள் இந்த உலகில் நல்ல முறையில் பிறப்பதற்கும் வழி செய்தவர்.
தர்மம் தலை காக்கும்:
சுனாமி, கடலூர் வெள்ளம், சென்னை வெள்ளம், நீலகிரி மலைச்சரிவு, கேரளா வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் நேரங்களில் தன் காரில் ஊர் ஊராக சென்று நிதி வசூலித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வழங்கி இருக்கிறார். அதிலிருந்து தனக்கென்று ஒரு பைசா கூட தான் எடுத்ததில்லை என அவர் கூறுவதில் ஒரு கம்பீரமும் பெருமையும் தெரிந்தது.
மற்ற பேரிடர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்த இவர் தன் சொந்த வீட்டை கஜா புயலின் போது இழந்துவிட்டார். அப்பொழுதும் அவர் துவளவில்லை. அந்த நேரத்தில் கூட கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இவர் செய்த தர்மம் இவரை கைவிட்டு விடவில்லை. கஜா புயலில் இவர் வீடு இழந்த செய்தியைக் கேட்ட நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் சென்று பார்த்து அவருக்கு வீடு கட்டி கொடுப்பதாக வாக்களித்தார். அதேபோல அவருக்கு புதிய வீடும் ரூ.1 லட்ச மதிப்பிலான காரும் வாங்கி கொடுத்திருக்கிறார். இவர் பிரதிபலன் பாராமல் மற்றவர்களுக்கு செய்த உதவி வீண் போகவில்லை.
இவரின் சேவையை பாராட்டி கர்நாடகாவின் பாரத் விர்ச்சுவல் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. இந்த நிகழ்வை அவர் மிகவும் பூரிப்புடன் விவரித்தார்.
மக்கள் மனதில் 515 கணேசன்:
நான் செய்யும் சேவைக்கு மக்களிடத்தில் எதுவும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அவர்கள் காது, கழுத்தில் கிடப்பவற்றை கழற்றி என்னிடம் கொடுப்பார்கள். அந்த அளவிற்கு அவர்கள் மனதில் நான் நிறைந்திருக்கிறேன். சிலர் இறப்பதற்கு முன்பாக என்னிடம் வந்து சிறு தொகையை கொடுத்து நான் இறந்துவிட்டால் என்னை நல்ல முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு செல்வார்கள்.அதேபோல் அவர்கள் இறந்து விட்டால் மேற்கொண்டு பணம் போட்டு அவர்களுக்கு முன்னே நின்று எல்லா காரியமும் செய்து வைப்பேன்.
இன்னும் ஆதரவில்லாமல் தனியாக வாழ்ந்து வரும் வயதானவர்கள் நான் இறந்து விட்டால் 515 கணேசனிடம் தெரிவியுங்கள். அவர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை அடக்கம் செய்து விடுவார் என பிறரிடம் அவர்கள் சொல்லி வைப்பதாக நான் கேள்விப்பட்டு மனம் உருகி இருக்கிறேன்.
இல்லாத மக்களுக்காக நான் இருக்கின்றேன் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தியது எனக்கு பெரிய மகிழ்ச்சி என்று உணர்ச்சி வசப்பட்டார் 515 கணேசன்.
Also Read: Tiruvarur: தூய்மை பணியாளர் மகள் டூ நகராட்சி ஆணையர்.. மன்னார்குடி துர்காவின் வெற்றி கதை!
பல கேலிப் பேச்சுகளுக்கு ஆளாகி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காகவே பயணித்த இவரது கால்கள் மரியாதைக்குரியவை. இதுவரை 200க்கும் மேற்பட்ட விருதுகளைப் அவர் பெற்ற போதும் அது எதையும் அவர் பெரிதும் பொருட்படுத்துவதே இல்லை. இவர் காரை கடந்து சென்றால் அபசகுனமாக எண்ணியவர்கள் இப்பொழுது அந்த காரை தொட்டு வணங்கி செல்ல வைத்தது தான் 515 கணேசனின் சாதனை