Monkey Pox: குரங்கு அம்மை பரவல்.. விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்..
Mpox (monkeypox) என்பது ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்த குரங்குப் அம்மை வைரஸால் ஏற்படும் ஒரு நோயாகும். இதில் இரண்டு வெவ்வேறு கிளேடுகள் உள்ளன: கிளேட் I மற்றும் கிளேட் II. காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, குறைந்த ஆற்றல் மற்றும் வீங்கிய நிணநீர் முனைகள் ஆகியவற்றுடன் 2-4 வாரங்கள் நீடிக்கும் தோல் சொறி அல்லது மியூகோசல் புண்கள் mpox இன் பொதுவான அறிகுறிகளாகும். அசுத்தமான பொருட்கள், பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது பாதிக்கப்பட்ட நபர்கள் மூலம் இது பரவுகிறது.
குரங்கு அம்மை: உலக நாடுகள் மத்தியில் குரங்கம்மை பரவி வரும் நிலையில் தமிழ்நாடு சுகாதார துறை தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கோவை விமான நிலையத்தில் சுகாதார துறை அமைச்சர் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ உலக சுகாதார அமைப்பின் தலைவர் அவர்கள் பொதுசுகாதார அவசர நிலையினை அறிவித்துள்ளார்கள். ஐரோப்பிய நாடுகளில் பரவ தொடங்கிய குரங்கு அம்மை நோய் தற்போது, உலகம் முழுவதும் 129 நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணித்து அவர்களுக்கு இந்நோயின் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிந்து, தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்குவதற்கு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வார்டும் இந்த பன்னாட்டு விமானநிலையங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவர்களும் தயார்நிலையில் இருக்கின்றார்கள்.
மேலும் படிக்க: திருப்பதி லட்டுக்கும் இனி ஆதார் கார்டு கட்டாயம்.. தேவஸ்தானம் போர்டு அதிரடி!
அதன்படி, தூத்துக்குடி, சென்னை துறைமுகங்களில் கப்பல் போக்குவரத்து மூலம் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. சென்னை பன்னாட்டு விமானநிலையத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள, ஸ்கீரினிங் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதேபோன்று இன்று கோயம்புத்தூர் மாவட்ட பன்னாட்டு விமானநிலையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், குரங்கு அம்மை நோய் அறிகுறிகள், கண்டறிதல், சிகிச்சை குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட சுகாதார அலுவலகம் சார்பில் விளம்பர பதாகைகள் கோயம்புத்தூர் விமானநிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஹேமா கமிட்டி போன்ற குழு தமிழ் சினிமாவில் அமைக்கப்படும் – நடிகர் விஷால் உறுதி
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மதுரை ராஜாஜி மருத்துவமனை, திருச்சி கி.ஆ.பெ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விஸ்வநாதன் ஆகிய மருத்துவமனைகளில் இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கும்வகையில் 10 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் எங்கும் இதுவரை இந்நோய் கண்டறியப்படவில்லை. தமிழ்நாட்டிலும் இந்நோய் கண்டறியப்படவில்லை இருந்தபோதிலும் தேவையான முன்னேற்பாடு பணிகள் சுகாதாரத் துறையின்சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.