800 பேர் உயிரை காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு மத்திய அரசு விருது!
Ati Vishisht Rail Seva Puraskar 2024: கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலால் தென் மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்த நிலையில் டிசம்பர் 17ஆம் தேதி யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடைபெற்றது.
மத்திய அரசு விருது: கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து 800 பேர் உயிரை காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டருக்கு மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து சாதனமாக ரயில்கள் திகழ்கிறது. பல்வேறு பெயர்களில், வசதிகளில் கட்டணங்களுக்கு ஏற்ப இயக்கப்படும் இந்த ரயில்களில் பாதுகாப்பு என்பது மிக மிக முக்கியமான ஒன்று. சிறிது பிசகினாலும் எதிர்பாராத அளவுக்கு விபத்து, உயிரிழப்புகளும் நேர்ந்து விடும். இப்படியான நிலையில் ரயில்வே ஊழியர்களின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு ரயில்வே துறையில் பல்வேறு மட்டங்களில் சிறப்பாக பணியாற்றும் 100 பேருக்கு அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் என்ற விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த விருதுகள் வரும் டிசம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் 69 வது ரயில்வே வார விழாவில் வழங்கப்படவிருக்கிறது. மத்திய ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவி இந்த விருதுகளை வழங்க இருக்கிறார்.
Also Read: Salem: உங்க வீட்டுல ஆம்பளையே இல்லையா.. பாமக எம்.எல்.ஏ. அருள் பெண்களிடம் சர்ச்சை பேச்சு!
800 பேர் உயிரை காப்பாற்றியவருக்கு விருது
இந்த விருதுக்காக தமிழ்நாட்டில் இருந்து 800 பேர் உயிரை காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் ஏ.ஜாஃபர் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு மிக்ஜாம் புயலால் தென் மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்த நிலையில் டிசம்பர் 17ஆம் தேதி யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடைபெற்றது. அதாவது வழக்கம் போல் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.
இந்த ரயிலானது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயில் பாதை வெள்ளநீரில் மூழ்கியிருப்பதை பொறியியல் அதிகாரியிடமிருந்து ஸ்டேஷன் மாஸ்டரான ஜாபர் அலி தகவலை பெற்றார். உடனடியாக அந்த ரயிலை ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தினார். பலத்த மழை காரணமாக மின்தடை ஏற்பட்டு சுற்றிலும் இருள் சூழ்ந்த நிலையில் நீண்ட நேரமாக ரயில் ஒரே இடத்தில் நின்றதால் கோபமடைந்த பயணிகள் ஸ்டேஷன் மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Also Read: Rain Alert: ரெடியா இருங்க மக்களே.. இன்னைக்கு இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!
ஆனால் பொழுது விடிந்ததும் தான் ரயில் நிலையத்தை சுற்றி அனைத்து திசைகளிலும் வெள்ளம் சூழ்ந்து இருப்பதை பயணிகள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கிட்டத்தட்ட 2 நாட்கள் ரயிலிலேயே அனைவரும் முடங்கினர். அவர்களுக்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள் உணவு கொடுத்து உபசரித்தனர். சம்பவ இடத்திற்கு வெள்ளநீர் வடியாததால் ரயில்வே அதிகாரிகளும், மீட்பு படையினரும் வருவதற்கு காலதாமதம் ஆனது. கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்குள் மீட்பு படையினர் சென்றடைந்தனர்.
இதற்கிடையில் வெள்ளநீர் வடிய தொடங்கிய பிறகு தான் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் தண்டவாளம் ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உரிய நேரத்தில் ரயிலை நிப்பாட்டியதால் 800 பயணிகளின் உயிரானது காப்பாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்டேஷன் மாஸ்டர் ஜாஃபர் அலிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர். அந்த வகையில் மத்திய அரசின் ரயில்வே வாரிய விருதான அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது கிடைத்துள்ளது.