Annamalai: அரசியலில் குட்டி பிரேக்.. லண்டனில் படிப்பு.. அண்ணாமலையின் பிளான்!
தமிழக பாஜகவின் தலைவராக இருப்பவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. இவர் 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில், அண்ணாமலை படிப்பிற்காக லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் நிலையில், தமிழக பாஜவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரசியலில் குட்டி பிரேக்: தமிழக பாஜகவின் தலைவராக இருப்பவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. இவர் 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சரானதும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொடர்ந்து, 2024 மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதிமுகவுடனான கூட்டணியை முறித்ததால் தான் இப்படி தோல்வியடைய நேரிட்டது. கூட்டணி அமைந்திருந்தால் சில இடங்களில் வெற்றி பெற்று இருக்கலாம் என பாஜகவில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் வெளிப்படையாக கருத்து கூறினார்.
மேலும், உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எச்சரிப்பதாகவும், தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் மோசமாக விமர்சிப்பதாகவும், அவ்வாறு செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி இருந்தார். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியது. தமிழிசையை அழைத்து அமித்ஷா பேசும் அளவுக்கு சென்றது.
Also Read: தமிழ்நாட்டின் 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம் .. விவரங்கள் இதோ..
லண்டன் செல்லும் அண்ணாமலை:
இதனால், கட்சிக்குள் அண்ணாமலை ஆதரவாளர்களும், தமிழிசை ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் உருவானது. ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் கடுமையாக தரக்குறைவான வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, திருச்சி சூர்யா, கல்யாண ராமன் போன்றவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து 12 பேர் தேர்வாகி உள்ளனர்.
இதில் பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒருவர். அதாவது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் செவனிங் உதவித்தொகை மூலம் சர்வதேச அரசியில் என்ற தலைப்பிலான படிப்பை படிக்க அண்ணாமலை மூன்று மாதங்கள் லண்டன் செல்ல உள்ளார். அவரின் இந்த படிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. அங்கு தங்கிப் படிப்பதற்கான மொத்த செலவையும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமே ஏற்றுள்ளது. இதனால், அவர் 3 மாதம் அங்கேயே தங்கி இருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. விசா பணிகள் முடிந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் அண்ணாமலை லண்டன் செல்ல உள்ளார். லண்டன் செல்ல அனுமதி கேட்டு பாஜக மேலிடத்திற்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் யார்?
அண்ணாமலை வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் நிலையில், தமிழக பாஜவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே, பொறுப்பு தலைவர் நியமிக்கப்படலாம் அல்லது அண்ணாமலைக்கு பதில் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அண்மையில் தமிழிசையை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியுள்ளார். இதனால் அவர் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தலைவர் பதவி மாற்றப்படும் பட்சத்தில் கட்சிக்குள் கடும் போட்டி இருக்கலாம். இதனால், கட்சி மேலிடம் எந்த மாதிரியான முடிவை எடுக்கப்போகிறது என்பது மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
Also Read: 2 மாதம் 267 கிலோ தங்கம் கடத்தல்.. சென்னை ஏர்போட்டில் கடை போட்ட யூடியூபர்.. சிக்கியது எப்படி?