லண்டன் புறப்பட்டார் அண்ணாமலை… விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்த பாஜக நிர்வாகிகள்!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை லண்டன் புறப்பட்டு சென்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மூன்று மாத உயர்படிப்பை படிப்பதற்காக லண்டன் சென்றுள்ளார் அண்ணாமலை. 3 மாதங்கள் லண்டனில் தங்கி இருந்து அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து அண்ணாமலை படிக்க உள்ளார்.
லண்டன் புறப்பட்டார் அண்ணாமலை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை லண்டன் புறப்பட்டு சென்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மூன்று மாத உயர்படிப்பை படிப்பதற்காக லண்டன் சென்றுள்ளார் அண்ணாமலை. 3 மாதங்கள் லண்டனில் தங்கி இருந்து அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து அண்ணாமலை படிக்க உள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் செவனிங் உதவித்தொகை மூலம் சர்வதேச அரசியில் என்ற தலைப்பிலான படிப்பை படிக்க அண்ணாமலை சென்றுள்ளார். அவரின் இந்த படிப்பு வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தொடங்குகிறது. இந்த படிப்பிற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதில், இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர். இவர் அங்கு தங்கிப் படிப்பதற்கான மொத்த செலவையும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமே ஏற்றுள்ளது. இதனால், அவர் 3 மாதம் அங்கேயே தங்கி இருப்பார்.
இதற்காக இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு பூங்கொத்துகள் வழங்கி அண்ணாமலையை வழியனுப்பி வைத்தனர். முன்னதாக லண்டன் பயணம் குறித்து பேசிய அண்ணாமலை, “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத உயர் படிப்புக்காக இங்கிலாந்து செல்கிறேன்.
வெளிநாடு சென்றாலும் தமிழக அரசின் நடவடிக்கைகளை உற்று கவனிப்பேன். ஆளுங்கட்சிக்கு எதிரான சண்டை தொடரும். வெளிநாடு சென்றாலும் எனது இதயம் தமிழகத்தில் தான் இருக்கும். ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை தொடர்ந்து கேள்வி கேட்பேன். எங்களது கருத்துக்கள் தொடர்ந்து அறிக்கை வாயிலாக வந்து கொண்டே இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.
Also Read: சென்னையில் மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து… எந்தெந்த வழிதடத்தில் தெரியுமா?
பாஜக தலைமை மாற்றப்படுமா?
தமிழக பாஜகவின் தலைவராக இருப்பவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. இவர் 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சரானதும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொடர்ந்து, 2024 மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதிமுகவுடனான கூட்டணியை முறித்ததால் தான் இப்படி தோல்வியடைய நேரிட்டது. கூட்டணி அமைந்திருந்தால் சில இடங்களில் வெற்றி பெற்று இருக்கலாம் என பாஜகவில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் வெளிப்படையாக கருத்து கூறினார். இப்படி இருக்கும் சூழலில் அண்ணாமலை லண்டன் சென்றிருப்பதால், தமிழக பாஜகவில் மாநில தலைவர் மாற்றப்படுவரா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக டெல்லி தலைமையும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.
Also Read: அமெரிக்கா புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்.. உற்சாகமாக வழியனுப்பிய அமைச்சர்கள், தொண்டர்கள்!
ஆனால், அண்ணாமலையை மாற்றாமல் அவர் லண்டனில் இருந்தபடியே கட்சி பணிகளை கவனிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 2026 தேர்தலிலும் அண்ணாமலை தான் தலைவராக தொடர்வார் என்றும் தேசிய தலைமையும் அதைத்தான் விரும்புவதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். அதேசமயம் கட்சியின் அமைப்பு ரீதியான பணிகளை வழக்கம் போல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன் கவனித்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிகறது.