Amstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி.. யார் இந்த சீசிங் ராஜா?

நேற்று ஆந்திர மாநிலம் கட்டப்பாவில் வைத்து ரவுடி சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இதற்கிடையே போலீசார் அத்துமீறி கைது செய்திருப்பதாகவும், போலி என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அவரது மனைவி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் கைது செய்வது தொடர்பான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Amstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி.. யார் இந்த சீசிங் ராஜா?

கோப்பு புகைப்படம்

Published: 

23 Sep 2024 09:09 AM

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடிகளான நாகேந்திரன், பொன்னை பாலு உட்பட 28 நபர்களை போலீசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஆம்ஸ்டாங்கை கொல்ல ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் நண்பரான ரவுடி சீசிங் ராஜாவை சென்னை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். குறிப்பாக ஆந்திராவில் அவரது மனைவி வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் அங்கு கடந்த இரண்டு மாதங்களாக முகாமிட்டு தீவிரமாக சீசிங் ராஜாவை தேடி வந்த நிலையில் ஒருமுறை போலீசாரின் பிடியிலிருந்து காரில் தப்பி சென்றார்.

இந்த நிலையில் நேற்று ஆந்திர மாநிலம் கட்டப்பாவில் வைத்து ரவுடி சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இதற்கிடையே போலீசார் அத்துமீறி கைது செய்திருப்பதாகவும், போலி என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அவரது மனைவி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் கைது செய்வது தொடர்பான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை சென்னை தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நீலாங்கரை அக்கறை அருகே உள்ள பக்கிங்காம் கால்வாயில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக சிசிங் ராஜா தெரிவித்ததின் பெயரில், அதை பறிமுதல் செய்வதற்காக வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல் தலைமையிலான போலீசார் சென்றனர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை சீசிங் ராஜா எடுத்து போலீசாரை நோக்கி சுட்டதாகவும் எதிர்பாராத விதமாக இரண்டு குண்டுகள் வாகனத்தின் மீது பட்ட நிலையில், தற்காப்புக்காக ஆய்வாளர் விமல் சீசிங் ராஜாவை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சீசிங் ராஜா இடது புற மார்பு மற்றும் மேல் வயிறு ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ரவுடி சிசிங் ராஜாவின் உடல் ஆனது கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மின்சார சைக்கிளை களமிறக்கும் டாடா.. EV துறைக்குள் புது முயற்சி!

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நீலாங்கரை போலீசார் என்கவுண்டர் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் இது தொடர்பாக மேஜிஸ்ட்ரேட் உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த சீசிங் ராஜா?

ஆந்திராவைப் பூர்வீகமாகக்கொண்ட நரசிம்மன் – அங்கம்மா தம்பதியின் மகன் ராஜா. சென்னை கிழக்கு தாம்பரத்தில் வசித்துவந்த ராஜா, 9-ம் வகுப்புவரை படித்துவிட்டு கராத்தே மாஸ்டர் ஆக செயல்பட்டு வந்துள்ளார். அப்போது நண்பர்களுக்காக அடிதடி போன்ற பிரச்சனைகளில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் வாகனக் கடன் கொடுக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் வாகனங்களை அடாவடியாக பறிமுதல் செய்வதுதான் அவரது பணி, அதனால் அடைமொழி பெயராக சிசிங் ராஜா என பெயர் வந்தது. அப்போதே தாம்பரம் மார்க்கெட் பகுதியில் கோலோச்சிய பிரபல ரௌடியுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட ராஜா, மாமூல் வசூலிப்பது, ரியல் எஸ்டேட் கட்டப்பஞ்சாயத்து செய்வது என ரௌடி சாம்ராஜ்ஜியத்துக்குள்ளும் காலடி வைத்தார்.

ஆந்திராவில் இரட்டை கொலை வழக்கில் முக்கிய நபராக சிசிங் ராஜா மாறிய நிலையில், பெரும் ரவுடியாக உருவெடுத்த சிசிங் ராஜா சென்னை மற்றும் ஆந்திராவில் கொலை செய்து கூலிப்படை தலைவனாக மாறினார்.

மேலும் படிக்க: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் கொட்டப்போகும் மழை..

சீசிங் ராஜா மீது ஐந்து கொலை வழக்குகள் ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஏழு முறை குண்டர் சட்டத்தின் கீழ் ரவுடி சீசிங் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரின் நெருக்கடி காரணமாக ஆந்திராவில் இவரது மனைவிகள் வீட்டில் பதுங்கியபடி சீசிங் ராஜா சென்னையில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. கடந்த இரண்டு வருடங்களாக மிகப்பெரிய கூலிப்படை தலைவனாக உருவெடுத்த சீசிங் ராஜா, ரியல் எஸ்டேட் தொழிலிலும் கால் பதித்து சிங்கம் பட பாணியில் ஆட்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டும் செயலிலும் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றில் ஆஜராகாமல் சீசிங் ராஜா தலை மறைவாக இருந்து வந்த நிலையில் தாம்பரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இவரை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும் என போலீசார் தரப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?