5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மதுரையில் கனிம சுரங்கம்.. வலுக்கும் கண்டனங்களும், அரசு சொன்ன விளக்கமும்..

சுரங்கம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் கண்டன்ங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் போராட்டமும் நடத்தி வருகின்றனர். பொது மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் அப்பகுதி சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் மக்களுக்காக தான் திட்டம் இருக்க வேண்டும் எனவே உடனடியாக உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் கனிம சுரங்கம்.. வலுக்கும் கண்டனங்களும், அரசு சொன்ன விளக்கமும்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Nov 2024 16:03 PM

மதுரை மாவட்டத்தில் அரிட்டாபட்டி பகுதியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனமானது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நடத்தி வந்த வேதாந்த நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்த சுரங்கம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் கண்டன்ங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் போராட்டமும் நடத்தி வருகின்றனர். பொது மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் அப்பகுதி சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் மக்களுக்காக தான் திட்டம் இருக்க வேண்டும் எனவே உடனடியாக உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

வலுக்கும் கண்டனங்கள்:

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அரிட்டாப்பட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம் அழகர்மலைக்கருகே 2015.51 எக்டரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிறது வேதாந்தா நிறுவனம்.  முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4வது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலுர் தாலுகாவில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள மதுரை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 2015.51 எக்டர் பகுதியில்தான் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக (Biodiversity Heritage Site) அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி அமைந்துள்ளது.

மேலும் படிக்க: அரசுப்பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை.. தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்!

தமிழ் நாட்டின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான அழகர் மலையானது சுரங்கத் தொகுதியின் எல்லையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பெருமாள் மலை இச்சுரங்கத்தொகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. பெருங்கற்காலத்தைச் (megalithic) சேர்ந்த அமைவுகள், 2200 ஆண்டுகளுக்கு முந்தய தமிழி கல்வெட்டுகள், சமணர் படுகைகள், சங்ககால பாண்டியர்களால் கொடையளிக்கப்பட்ட கற்படுக்கைகள், குடைவரைக்கோயில்கள் என தமிழ்நாட்டு வரலாற்றின் தனித்துவமான அடையாளங்களை தாங்கி நிற்கும் இடம் .

இங்கு 72 ஏரிகள், 200 இயற்கைச் சுனைகள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. மேலும் இப்பகுதியில் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராசாளிக் கழுகு உள்ளிட்ட 250 பறவைகளும், அழுங்கு, மலைப்பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன. இப்படி பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான இடமாகப் பட்டிலியலிட்டு அதை ஏலப்பட்டியலில் சேர்த்ததே தவறு. மத்திய அரசு உடனடியாக இந்த ஏல நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கான சுரங்க அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவற்றை வழங்கக் கூடாதென வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு.. சிபிஐக்கு மாற்றம்.. உயர்நீதிமன்றம் அதிரடி..

தமிழ்நாடு அரசு சொன்னது என்ன?

இப்படி மதுரை மாவட்டத்தில் மேலூர் தாலுக்காவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு பல தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் குறிப்பிட்ட பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக இன்னும் விண்ணப்பிக்கவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏலம் விடப்பட்ட இடம் எது, எந்த எல்லைக்கு உட்பட்டது என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News