Chennai Rains: விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை.. ஜில்லென்று மாறிய சென்னை… இன்னும் தொடருமா?
சென்னையில் மழை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. கோவை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதற்கிடையே நேற்று இரவு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் மாலை தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது.
சென்னையில் மழை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. கோவை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதற்கிடையே நேற்று இரவு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் மாலை தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது. எழும்பூர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, மயிலாப்பூர், ஆயிரம் விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை வரை மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கி கொண்டிருக்கிறது. இதனால் பகல் நேரங்களில் வாட்டி வரும் வெயிலை போக்கும்விதமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதேநேரம் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை தொடர்வதால் காலை நேரங்களில் அலுலவகங்களுக்கு செல்பவர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
Also Read: விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி.. தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்!
வானிலை நிலவரம்:
தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் உண்டான மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகளான மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதேபோல் வங்கக்கடலில் மத்திய மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Also Read: கோயில் விழாவில் திடீரென சாய்ந்த ராட்டினம்.. அந்தரத்தில் தொங்கிய மக்கள்.. அடுத்து நடந்தது என்ன?
அரபிக்கடலில் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய மேற்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.