5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai: சென்னையில் இடம் மாறும் பேருந்து நிறுத்தங்கள்.. மாநகராட்சி அதிரடி முடிவு!

Chennai Traffic: பிராட்வே முதல் முகப்பேர் செல்லும் 7M மற்றும் வடபழனி முதல் தரமணி செல்லும் 5T பேருந்துகளின் வழித்தடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து வாகன ஓட்டிகள் நிம்மதியான பயணங்களை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai: சென்னையில் இடம் மாறும் பேருந்து நிறுத்தங்கள்.. மாநகராட்சி அதிரடி முடிவு!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 18 Nov 2024 14:52 PM

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை சரிப்படுத்த சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவை தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்படியான நிலையில் சென்னையில் உள்ள சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் நடைபெற்ற இந்த ஆய்வின் அறிக்கையானது சென்னை மாநகராட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் இருந்தால் அவற்றை இடம் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: TVK Party: “பொய்.. பொய்” அதிமுகவுடன் கூட்டணியா? தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தொடர்ச்சியாக நடந்து வரும் பணிகள்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆங்காங்கே மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் பல புதிய மேம்பாலங்களும் அறிவிக்கப்பட்ட அதற்கான பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதத்தில் சென்னை சிஐடி நகர் முதல் உஸ்மான் சாலை வரையிலான புதிய இரும்பு பாலம் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தி.நகர் பகுதியில் குவியும் மக்கள் கூட்டத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திரா நகர் மற்றும் திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையம் அருகில் யூ வடிவ மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதனால் சிக்னலில் வாகனங்களை மறுபுறம் திருப்ப காத்திருக்கும் வாகனங்களின் நேரமானது குறைந்தது. இதேபோல் அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகிலும் பாடி செல்லக்கூடிய வாகங்களுக்காக யூ டர்ன் வழிப்பாதை அமைக்கப்பட்டது.

மெட்ரோ ரயில் சேவை 

இதற்கிடையில் சென்னைக்கு மிக முக்கியமான போக்குவரத்து சேவையை மெட்ரோ ரயில்கள் வழங்கி வருகின்றன. மாதந்தோறும் 90 லட்சம் பயணிகள் பயணம் செய்யும் மெட்ரோ ரயில் சேவையானது தற்போது சென்னை விமான நிலையம் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரையும், பரங்கிமலை முதல் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் வரையும் சேவையாற்றி வருகிறது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் அதிகளவில் பயன்பெற்று வருகின்றனர்.

இப்படியான நிலையில் சென்னை மாதவரம் –  சிறுசேரி, பூந்தமல்லி – கலங்கரை விளக்கம், போரூர் – மயிலாப்பூர், ஓ.எம்.ஆர். உள்ளிட்ட பல்வேறு இடங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் பாதை போடப்பட்டு வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கார், பைக் போன்ற வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பைக் டாக்ஸி, ஓலா, உபர், ரேபிடோ ஆட்டோக்கள், கால் டாக்ஸிகள் சேவையும் அதிகரித்துள்ளதால் பீக் ஹவர்ஸ் என சொல்லப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

Also Read: அரசு பேருந்துகளில் இனி 3 மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்யலாம்

விரைவில் அமல் 

இந்த நிலையில் சென்னை மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பேருந்து நிறுத்தங்கள் இருந்த அடையாளம் தெரியாமல் நவீனமயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிக்னல் மேம்பாலங்கள் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தொலைவுக்கு தள்ளி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பிராட்வே முதல் முகப்பேர் செல்லும் 7M மற்றும் வடபழனி முதல் தரமணி செல்லும் 5T பேருந்துகளின் வழித்தடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து வாகன ஓட்டிகள் நிம்மதியான பயணங்களை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பேருந்து நிலையத்திலும் இடமாற்றம் செய்யப்படாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. வரும் காலத்தில் வாகனங்களின் எண்ணிக்கை கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் மாற்றப்படும் பேருந்து நிறுத்தங்கள் பொதுமக்களுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படாத வகையில் எளிதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Latest News