Chennai Crime News: மருத்துவருக்கு 7 முறை கத்திக்குத்து.. சொட்ட சொட்ட ரத்தம்.. அரசு மருத்துவமனையில் நடந்த திக்திக் சம்பவம்!
Chennai Doctor Attack: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்து மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர் மருத்துவர் பாலாஜி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்து மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர் மருத்துவர் பாலாஜி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, இந்த சம்பவம் எப்படி நடந்தது என்ற முழு விவரத்தை பார்க்கலாம். சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் தான் திறக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் பல்வேறு துறைகள் உள்ளன. இங்கு பல்வேறு நோய்களுக்கு உயர்வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகீறது.
மருத்துவருக்கு 7 முறை கத்திக்குத்து
இந்த மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவின் தலைவராக பாலாஜி உள்ளார். இவர் மருத்துவமனை தொடக்கப்பட்டதில் இருந்தே பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் விக்கேஷ் (26). இவர் தனது தாய் காஞ்சனா புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.
எனவே, இவருக்கு கடந்த சில மாதங்களாக கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விக்னேஷ் தனது தாய் உடன் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வந்து செல்கிறார். இதுவரை விக்னேஷ் தாய்க்கு ஆறு முறை கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தாய் காஞ்சனா மருத்துவமனைக்கு வரும்போதே புற்றுநோய் முற்றி இருந்ததாகவும், இதனால் கீமோ கொடுக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, கீமோ கொடுக்கப்பட்ட பிறகும் நுரையீரல் வரை புற்றுநோய் பரவியது.
Also Read : அடுத்த 4 நாட்களுக்கு கனமழை அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் எச்சரிக்கை!
ரத்த கறையுடன் போலீசாரிடம் சிக்கிய இளைஞர்
இதனால் விக்னேஷ் தனது தாய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் என்று கூறி வீட்டிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. எனவே, தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று நினைத்து விக்னேஷ் கோபத்தில் இருந்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, இன்று கத்தியுடன் கிண்டி மருத்துவமனைக்கு வந்த விக்னேஷ், மருத்துவர் பாலாஜியின் அறைக்கு சென்று அவரிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. அப்போது, ஆத்திரத்தில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார். 7 முறை மருத்துவரை தாக்கி இருக்கிறார்.
மருத்துவரின் நெஞ்சு மற்றும் தலையில் பயங்கர காயம் ஏற்பட்டது. மருத்துவரை குத்திவிட்டு ரத்த கறையுடன் மருத்துவனையில் வெளியே வந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிற மருத்துவர்களும், ஊழியர்களும் நோயாளிகளும் பதறி அடித்து ஓடினார்கள். இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் பொதுமக்களை ஒழுங்கு படுத்தினார்கள். மேலும், கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய விக்னேஷை மடக்கி பிடித்து கைது செய்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மருத்துவர் பாலாஜியை மீட்டு போலீசார் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை குறித்து பேசிய டாக்டர், “பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மயக்கத்தில் உள்ளார். ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறது. அவர் இதய நோயாளி. எனவே, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மருத்துவர்கள் உரிய பாதுகாப்பு வழங்க கோரி தற்போது முதலே தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read : சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வெட்டிக்கொலை.. ராமதாஸ் கடும் கண்டனம்!
இதற்கிடையில், கத்தியால் குத்தப்பட்ட மருத்துவரின் உடல்நிலை குறித்து துணை முதல்வர் உதயநிதி கேட்டறிந்தார். மேலும், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.