5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“நலமாக இருக்கிறேன்”.. கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி பேட்டி!

பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் காலை 10:30 மணி அளவில் பணியில் இருந்த புற்றுநோய் துறையின் தலைவரான மருத்துவர் பாலாஜியை திடீரென கத்தியால் குத்தினார். இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் இருந்த பொதுமக்களும் ஊழியர்களும் பிடித்து கிண்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

“நலமாக இருக்கிறேன்”.. கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி பேட்டி!
மருத்துவர் பாலாஜி
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 14 Nov 2024 12:00 PM

மருத்துவர் பாலாஜி: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி தான் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கும் வீடியோவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் காலை 10:30 மணி அளவில் பணியில் இருந்த புற்றுநோய் துறையின் தலைவரான மருத்துவர் பாலாஜியை திடீரென கத்தியால் குத்தினார். இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் இருந்த பொதுமக்களும் ஊழியர்களும் பிடித்து கிண்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  விசாரணையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்காததால் இப்படி செய்ததாக விக்னேஷ் வாக்குமூலம் அளித்தார். அரசு மருத்துவர் பாலாஜி தாக்குதலுக்கு உள்ளான விவகாரம் தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீயாக பரவியது.

Also Read: மருத்துவருக்கு கத்திக்குத்து.. அரசு மருத்துவமனைகளில் வருகிறது புதிய கட்டுப்பாடு!

உடனடியாக தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தில் இறங்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர் பாலாஜியை சந்தித்து அவரது நலம் விசாரித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதனிடயே முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்  பாலாஜி  நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திட உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணை பிறப்பித்துள்ளேன். அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் – காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிக்கும் நமது அரசு மருத்துவர்களின்  பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடும் வண்ணம் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” என தெரிவித்திருந்தார்.

அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இப்படியான நிலையில் கைது செய்யப்பட்ட விக்னேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை  நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் இன்று நண்பகல் கண்டன போராட்டம் நடைபெறுகிறது. முதலில் இந்த சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் போராட்டத்தை கைவிடுவது என முடிவு செய்யப்பட்டது. அதே சமயம் இந்திய மருத்துவர் சங்கம் இன்று மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது.

Also Read: Actress Kasthuri: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு.. கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..

இதற்கிடையில் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வரும் குடும்ப நபர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நோயாளிகளுடன் வரும் நபர்களுக்கு கையில் டேக்  மாட்டப்பட்டு அது இருந்தால் மட்டுமே மருத்துவமனை உள்ள செல்ல அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதற்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜியை இன்றும்  நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். அப்போது ஓய்வு பெற இன்னும் 5 ஆண்டுகள் உள்ள நிலையில் பணிக்காலம் முழுவதும் கலைஞர் மருத்துவமனையிலேயே பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என முதலமைச்சரிடம் மருத்துவர் பாலாஜி கேட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Latest News