சென்னையில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி.. மழைநீரில் மிதக்கும் உடல்!
Chennai Rains : சென்னை பாரிஸ் பகுதியில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
சென்னை பாரிஸ் பகுதியில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வங்கக் கடலில் நேற்று ஃபெங்கல் புயல் உருவானது. இந்த புயல் இன்று மாலை அல்லது இரவு காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அப்போது 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன், அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
வெள்ளக்காடாக மாறிய சென்னை
சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலையில் இருந்து கருமேகங்கள் சூழ்நது மழையின் வேகம் அதிகரித்துள்ளது. இதனிடையே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக முக்கிய சாலைகளில், தெருக்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அதனால் போக்குவரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகம் வெளியே வரவில்லை அனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பல சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இருந்தாலும் 8 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. சென்னை நகரம் மட்டுமில்லாமல் புறநகரிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.
Also Read : ஃபெங்கல் புயல்.. சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. இந்த ரூட் ரொம்ப முக்கியம்!
மீட்புப் பணிகள் தீவிரம்
திருநின்றவூர்- திருவள்ளுர் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பட்டாபிராம், ஆவடி உள்ளிட்ட பகுதிகிளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர் பகுதிகளில் பல தெருக்களில் வெள்ளம் வடியாத நிலையில் உள்ளன.
மேலும் காற்று அதிகமாக வீசுவதால் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளது. இதனால் மீட்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மக்கள் பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மழை நாளை காலை வரை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வராமல் இருக்கின்றனர்.
Also Read : இன்று மாலை கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்.. 7 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை..
மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளர் பலி
இந்த நிலையில் சென்னையில் மின்சாரம் தாக்கி வடமாநில இளைஞர் உயிரிழந்துள்ளார். சென்னை பிராட்வே பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக வடமாநிலத்தைச் சேர்ந்த சந்தன் என்பவர் வந்துள்ளார். அப்போது, ஏடிஎம் வாயில் அருகே இருந்த இரும்பு கம்பியை பிடித்தபோது எதிர்பாராத விதமாக மின்சார தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து முத்தையால் பேட்டை போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னை கே.கே.நகர் வேம்புலி அம்மன் கோயில் தெருவில் பிரவீன் குமார் என்பவர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புயல் எப்போது கரையை கடக்கும்?
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் “ஃபெஞ்சல்” புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாக கடக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.