5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Flood Relief : 6 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

CM MK Stalin | ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதில் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.

Flood Relief : 6 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
கோப்பு புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 04 Dec 2024 09:07 AM

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாரணம் அறிவித்துள்ளார். கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. அது கடந்த நவம்பர் 27 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக்கலாம் என கணிக்கப்பட்ட நிலையில், கடந்த 29 ஆம் தேதி புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு பெஞ்சல் என பெயரிடப்பட்டது. அதன்படி பெஞ்சல் புயல் சென்னையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவு 11 மணி அளவில் புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழை பெய்தது. குறிப்பாக திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.

இதையும் படிங்க : Ponmudi: அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய மக்கள் – என்ன நடந்தது?

வெள்ள நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், வடமாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கணக்கில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 மாவட்டங்களுக்கு நிவாரணம் அளித்துள்ளார். அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் கடலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Crime: அமைச்சருக்கு மிரட்டல்.. நைட்டி அணிந்துகொண்டு வாக்குவாதம்.. போலீசாரை அலறவிட்ட போதை நபர்!

வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள்

  • ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மழையால் சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.10,000 நிவாரணமும், முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட முன்னுரிமை வழங்கப்பட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,000 நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு இழப்பீடாக ரூ.22,500 நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மானாவரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
  • கனமழை மற்றும் புயல் காரணமாக உயிரிழந்த எருது மற்றும் பசு உள்ளிட்ட கால்நடைகளுக்கு ரூ.37,500 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல செம்மறி ஆடுகள் உயிரிழந்திருந்தால் அவற்றுக்கு நிவாரணமாக ரூ.4000 மற்றும் கோழிகள் உயிரிழந்திருந்தால் அவற்றுக்கு நிவாரணமாக ரூ.100 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மேல் மழை நீர் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படிருந்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Cuddalore: தென்பெண்ணை வெள்ளத்தில் மிதந்த கிராமங்கள்.. தண்ணீர் தேசமாக மாறிய கடலூர்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News