Chennai Rains: மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
வடசென்னையில் உள்ள யானைக்கவுனியில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அங்குள்ள கால்வாய் ஒன்றில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின்னர் அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் வடசென்னையில் உள்ள யானைக்கவுனியில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அங்குள்ள கால்வாய் ஒன்றில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின்னர் அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேலும் மழைநீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். முதலமைச்சர் ஸ்டாலினுடனான இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் – நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்!
அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்.#NorthEastMonsoon… https://t.co/MopjVSbY6U pic.twitter.com/8hHCVlvbBf
— M.K.Stalin (@mkstalin) October 15, 2024
இதனைத் தொடர்ந்து சென்னை, புளியந்தோப்பு பகுதியில் உள்ள சாலையோர தேநீர் கடையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார். சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மீட்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்படியான நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Also Read: Chennai Rain Update: சாலைகளில் சூழத்தொடங்கிய மழைத்தண்ணீர்.. அச்சத்தில் சென்னை மக்கள்!
இதனிடையே எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் – நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்! அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் 21,000 பணியாளர்கள் சுழற்சி முறையில் 15 மண்டலங்களிலும் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியம் சார்பில் 2,149 பணியாளர்களும், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக 5000 மேற்பட்ட பணியாளர்களும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் ஆயிரம் இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்ட பொது மக்களுக்கு இலவசமாக மருத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் தியாகராய நகர் ஜி.என். செட்டி மேம்பாலம், வேளச்சேரி மேம்பாலம் என அனைத்து இடங்களில் உள்ள பாலங்களிலும் முன்னெச்சரிக்கையாக தங்களது வாகனங்களை பொதுமக்கள் பார்க்கிங் செய்து வருகின்றனர். அடுத்த 3 மணி நேரத்திற்கு இடைவிடாது மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் வெளி இடங்களில் இருக்கும் மக்களும் அவசர அவசரமாக வீடு திரும்பி வருகின்றனர்.
இதனிடையே சென்னை முழுவதும் 86 சமையல் கூடங்கள் உணவு வழங்க தயார் நிலையில் உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.