CM MK Stalin: 16 குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாமே?.. முதலமைச்சர் ஸ்டாலின் அட்வைஸ்!
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின் பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். அப்போது, “திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க மாநில அளவில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 2,226 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றுள்ளது” எனவும் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின்: திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் பெற்றுக்கொள்வது தொடர்பாக பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருமணம் நடத்தி வைத்தார். அதோடு மட்டுமல்லாமல் அனைத்து தம்பதியினருக்கும் தலா ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை சீர்வரிசையாக வழங்கினார். அதேசமயம் தமிழகம் முழுவதும் இந்து அறநிலைத்துறை சார்பில் இன்று 304 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருமணம் செய்துக் கொண்ட மணப்பெண்ணுக்கு 4 கிராம் எடையில் தங்கத் தாலி, தம்பதிகளுக்கு கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.
இதில் சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின் பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். அப்போது, “திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க மாநில அளவில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 2,226 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றுள்ளது” எனவும் தெரிவித்தார். மேலும் 10,238 கோயில்களில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட் நிலையில் அதில் 9 ஆயிரம் கோயில்களில் பணி தொடங்கி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
மேலும் நன்கொடையாளர்கள் அளித்த ரூ.1,103 கோடியை கொண்டு 9,263 கோயில்களில் திருப்பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ. 6,792 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டுள்ளதாகவும் பெருமிதப்பட்டார். தொடர்ந்து பேசிய அவர், 17 ஆயிரம் கோயில்களில் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் தமிழ்நாட்டில் 9 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் 720 கோயில்களிலும் செயல்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை திமுக அரசு தான் செயல்படுத்தியது. மேலும் சிதம்பரம் கோயில் கனகசபை மீது ஏறி தரிசிக்கும் உரிமை நிலைநாட்டும் தீர்ப்பை பெற்றதால் பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேசமயம் ஊர் கோயில்கள் தொடர்பான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் திமுக அரசின் நடவடிக்கைகளை உண்மையான பக்தர்கள் பாராட்டி வருவதாகவும் தெரிவித்தார். ஆனால் இதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் தமிழ்நாடு அரசை விமர்சித்து வருகின்றனர். பக்தியை பகல்வேச அரசியலுக்கு பயன்படுத்துவதால் திமுக அரசின் நடவடிக்கை தாங்கிக்கொள்ள முடியவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “முன்பெல்லாம் செல்வங்கள் என சொல்கிற போது 16 பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என சொல்வார்கள். செல்வங்கள் என்றால் குழந்தைகள் அல்ல. 16 வகையான செல்வங்கள். மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள் உள்ளிட்ட 16 வகையான செல்வங்களை சொல்வார்கள். இப்ப யாரும் அப்படி வாழ்த்துவதில்லை. அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என சொல்கிறோம். ஆனால் இன்றைக்கு நாடாளுமன்ற தொகுதிகள் எல்லாம் குறையும் என்ற சூழல் வருகிறபோது ஏன் அளவோடு பெற்று வாழ வேண்டும்?. நாமும் 16 குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாமே என்ற நிலை வந்துவிட்டது” என தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ளது.
காரணம் நேற்றைய தினம் ஆந்திராவில் உள்ள அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தற்போதைய நாட்டின் நிலைமையை பார்த்தால் வரும் நாட்களில் முதியோர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என்றும் இளைஞர்களின் சதவீதம் குறையும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார். எனவே பொதுமக்கள் இந்தியா நாட்டின் நலன் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மக்கள் தொகை பெருக்கத்திற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை உங்களுக்காக செய்ய வேண்டாம். நாட்டின் நலனுக்காகவும் சமூக சேவை என நினைத்து செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படுவது குறித்து சட்டம் இயற்றப் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார். அவரது பேச்சு மிகப் பெரிய அளவில் வைரலான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும் நாடாளுமன்ற தொகுதிகள் குறைக்கப்படும் சூழல் உருவாகும் போது அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது என்ற ரீதியில் பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.