”இந்தி மாத கொண்டாட்டம் எதற்கு?” பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! - Tamil News | CM MK Stalin writes to Prime Minister Narendra Modi regarding Hindi language oriented events non Hindi speaking states could be avoided | TV9 Tamil

”இந்தி மாத கொண்டாட்டம் எதற்கு?” பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

CM Stalin: இந்தி பேசாத மாநிலங்களில் 'இந்தி மாதம்' கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும் என்று கூறியுள்ளார்.

”இந்தி மாத கொண்டாட்டம் எதற்கு? பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

முதல்வர் ஸ்டாலின் - பிரதமர் மோடி (picture credit: PTI)

Updated On: 

18 Oct 2024 15:43 PM

இந்தி பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ‘இந்தி மாதம்’ நிறைவு நாள் விழா கொண்டாடப்படுவது எதிர்வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று (18-10-2024) கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து 18-10-2024 அன்று நிறைவடையும் ‘இந்தி மாத’ நிறைவுவிழா நடைபெறுவது குறித்து  பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரவே இந்தக் கடிதத்தை தாம் எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அவ்விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் தலைமைதாங்கி நடத்தவிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை என்றும் சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Also Read: சென்னை உட்பட 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்?

எனவே, இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது ஒன்றிய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்திய அரசு செம்மொழியாக அங்கீரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தாம் பரிந்துரைப்பதாகவும் இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

தூர்தர்ஷன் தமிழ் எனும் தொலைக்காட்சியில் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், தொலைக்காட்சியின் பொன்விழாவும் இன்று மாலை சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், பாரதிய ஜனதா ஆட்சி செய்தாலும் இந்தியைத் திணிப்பதில் மட்டும் வேறுபாடு காட்டுவதில்லை. சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழாவும் இன்று கொண்டாடப்படும் நிலையில், கடந்த ஐம்பதாண்டுகளில் அது தமிழுக்கு என்ன செய்தது?

Also Read: காவலர் குடியிருப்பு பகுதியில் வெடித்த மர்ம பொருள்.. மாமல்லப்புரத்தை உலுக்கிய சம்பவம்..

எந்தெந்த வகைகளில் தமிழ்மொழி சிறந்தது என்பதை விளக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சென்னைத் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருக்கலாம். அதை விடுத்து இந்தியை மட்டும் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது. எனவே, சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இன்று நடைபெறவுள்ள இரு விழாக்களில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றார்.

வைரல் நாயகிதான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்